அமைச்சர் பதவியை ரத்து செய்யக்கூடிய அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது என்பதை நான்கு மணி நேரத்தில் உணர்ந்துள்ளார் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி ஆளுநர் ரவி நேற்று உத்தரவு பிறப்பித்தார். உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்துதலால் இந்த நடவடிக்கை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் அறிவித்தார்.
ஆளுநரின் நடவடிக்கை குறித்து திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அப்பாவு, “அமைச்சர் பதவியை ரத்து செய்யக்கூடிய அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என்பதை நான்கு மணி நேரத்தில் உணர்ந்துள்ளார். துணை பிரதமராக இருந்த அத்வானி, மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் அயோத்தி ராமர் கோவில் இடிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தபோது பதவி விலகவில்லை.
சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பது மட்டும் தான் ஆளுநருக்கு இருக்கும் ஒரே அதிகாரம் ஆகும். நீதிமன்றத்தால் 2 ஆண்டுகள் தண்டனை பெற்றாலோ அல்லது முதல்வர் அறிவுறுத்தினாலோ மட்டும் தான் அமைச்சர் பதவி விலக முடியும். அமைச்சர் பதவியை ரத்து செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது. ஆளுநர் மிகவும் நல்லவர். விரைவில் உணர்ச்சிவசப்பட்டு சில முடிவுகளை எடுத்து விடுகிறார்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!
அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜி நீக்கம் நிறுத்தி வைப்பு!