பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் டெல்லியில் இன்று (செப்டம்பர் 19) பாஜகவில் இணைந்தார்.
பஞ்சாப் மாநிலத்தில் 50 ஆண்டுகளாகக் காங்கிரஸின் அடையாளமாக விளங்கியவர் அம்ரீந்தர் சிங். அம்ரீந்தர் சிங்கிற்கும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவிற்கும் இடையே ஏற்பட்ட மோதலால் அம்ரீந்தர் சிங் முதல்வர் பதவியிலிருந்து கடந்த ஆண்டு விலகினார்.
இதனைத் தொடர்ந்து பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற ஒரு புதிய கட்சியைத் தொடங்கினார். அப்போது பாஜகவில் இணைய மாட்டேன் என்று தெரிவித்த அவர் கடந்த பிப்ரவரி மாதம் பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்டார்.
அந்த தேர்தலில் ஒரு இடத்தில் கூட இந்த கூட்டணி வெற்றி பெறவில்லை. மேலும் அம்ரீந்தர் சிங் கட்சியிலிருந்த மூத்த தலைவர்கள் சிலர் பாஜகவில் இணைந்தனர்.
இதனால் பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியை பாஜகவுடன் இணைத்துச் செயல்படலாம் என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் ஆலோசனையும் வழங்கியுள்ளனர்.
அம்ரீந்தர் சிங் பாஜகவில் இணைவார் என்று பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஹர்ஜித் கிரேவாலும் உறுதிப்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து சிகிச்சை முடிந்து இந்தியா வந்த அம்ரீந்தர் சிங் செப்டம்பர் 12 ஆம் தேதி பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவை நேரில் சந்தித்தார்.
இந்நிலையில் அம்ரீந்தர் சிங் இன்று (செப்டம்பர் 19) டெல்லியில் மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், கிரண் ரிஜிஜு, பாஜக தலைவர்கள் ஜே.பி. நட்டா, சுனில் ஜாகர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
பாஜகவில் இணைந்த பிறகு அம்ரீந்தர் சிங், “பஞ்சாப் ஒரு எல்லை மாநிலம், பாகிஸ்தானுடனான நமது உறவுகள் மோசமடைந்து வருவதை நான் பார்த்திருக்கிறேன்.
சீனாவும் நம்மிடமிருந்து வெகு தொலைவில் இல்லை. நாட்டையும் பாதுகாப்பது நமது கடமை.
இதனால் நாட்டின் நலனைக் காக்கும் கட்சியில் இணைய வேண்டிய தருணம் இது” என்று பேசினார்.
மோனிஷா
எடப்பாடியின் திடீர் டெல்லி பயணம் : பின்னணி என்ன?