ராகுல் காந்தி பிரதமர் ஆவதற்குப் பாகிஸ்தான் தலைவர்கள் பிரார்த்தனை செய்வதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று (மே 4) இரண்டாவது நாளாகப் பிரச்சாரம் செய்தார்.
பலமு மற்றும் கும்லா பகுதியில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்தார்.
அப்போது அவர், “இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தும் போது மற்ற நாடுகள் முன்பு அழுது கொண்டிருந்த காங்கிரஸ் போல அல்லாமல், வலிமையான தேசத்தை உருவாக்க வலிமையான தலைவர் தேவை.
ஒரு காலத்தில் தீவிரவாத தாக்குதல் நடக்கும்போது உலக நாடுகள் முன்பு காங்கிரஸ் கோழைத்தனமாகத் அழுதுகொண்டிருந்தது. ஆனால் இன்று உலகம் முன்பு பாகிஸ்தான் அழுதுகொண்டிருக்கிறது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் இளவரசரைப் பிரதமராகப் பாகிஸ்தான் தலைவர்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்தியா வலிமையான அரசை விரும்புகிறது. வலிமையான அரசு என்றால் மோடி அரசு தேவை என்று விரும்புகிறது.
நான் பிரதமரான பிறகு தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா கடுமையான நடவடிக்கை எடுத்தது. துல்லியத் தாக்குதலும், பாலகோட் தாக்குதலும் பாகிஸ்தானை உலுக்கிவிட்டது.
தீவிரவாதத்தை ஒடுக்குவதில் பலவீனமாக இருந்த காங்கிரஸ், அமைதியாக இருக்கும்படி பாகிஸ்தானுக்கு காதல் கடிதம் அனுப்பிக் கொண்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பழையபடி காதல் கடிதங்கள் வரும். தீவிரவாதிகள் மூலம் அப்பாவி மக்களைக் கொல்லலாம் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதனால் தான் ராகுல் பிரதமராக வேண்டும் என்று நினைக்கிறார்கள்” என்று கடுமையாக விமர்சித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
காங்கிரஸ் மாவட்ட தலைவர் மரணம்: ரூபி மனோகரன் விளக்கம்!
இ பாஸை ரத்து செய்யாவிட்டால்… கொடைக்கானல் ஹோட்டல் சங்கம் எச்சரிக்கை!