ஒடிசா முதல்வரின் தனிச் செயலாளர் பொறுப்பில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற ஒரே நாளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.கே. பாண்டியன், தற்போது அம்மாநில கேபினெட் அமைச்சர் அந்தஸ்து பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வி.கார்த்திகேய பாண்டியன். சுருக்கமாக வி.கே.பாண்டியன் என்று அழைக்கப்படும் இவர் கடந்த 2000ஆம் ஆண்டு பேட்ச் ஒடிசா கேடர் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்றார்.
அம்மாநிலத்தின் கலஹண்டி மாவட்டத்தில் துணை ஆட்சியராக 2002ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். பின்னர் அங்கு பல்வேறு மாவட்டங்களில் ஆட்சியராக பணியாற்றியுள்ளார்.
அதனையடுத்து கடந்த 2011ஆம் ஆண்டு முதல் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராக இருந்து வருகிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பட்நாயக்கின் வலதுகரமாக செயல்பட்டு வந்த இவர், ஒடிசாவின் அரசாங்கத்திலும், ஆளும் பிஜு ஜனதா தள கட்சியில் செல்வாக்கு மிக்க நபராக வி.கே.பாண்டியன் வலம் வந்தார்.
இந்த நிலையில், முதல்வர் பட்நாயக் ஆலோசனையின் பேரில் கடந்த 20ஆம் தேதி விருப்ப ஓய்வுக்கு மத்திய அரசிடம் விண்ணப்பித்தார். அதற்கு, நேற்று ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதனையடுத்து அவர் அரசியல் களமிறங்குவார் என்று பலரும் எதிர்பார்த்தபடியே, வி.கே. பாண்டியனுக்கு, தற்போது அம்மாநில கேபினெட் அமைச்சர் அந்தஸ்து பதவியை அளித்துள்ளது ஒடிசா அரசு.
இதுதொடர்பாக ஒடிசா மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் சுரேந்திர குமார் இன்று(அக்டோபர் 24) வெளியிட்டுள்ள அரசு உத்தரவில்,
“மாற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் 5டி(Transformational Initiatives) மற்றும் நபின் ஒடிசா திட்டத்தின் தலைவராக வி.கே. பாண்டியன் நியமிக்கப்படுகிறார். இந்த பதவி, கேபினெட் அமைச்சருக்கு இணையான பதவி. இனி, இவர் முதல்வருக்குக் கீழ் நேரடியாக பணியாற்றுவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
ஐஏஎஸ் பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற ஒரே நாளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.கே. பாண்டியன், தற்போது அம்மாநில கேபினெட் அமைச்சர் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளது ஒடிசா அரசியலில் தற்போது முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து 5வது முறையாக ஆட்சியில் இருக்கும் பட்நாயக்கின் தற்போதைய ஆட்சியில் அரசின் நிர்வாக எந்திரத்தை முற்றிலுமாக மாற்றியமைக்க வி.கே.பாண்டியன் யோசனையின்படி 5T முயற்சி தொடங்கப்பட்டது,
இந்த திட்டத்தின் கீழ் ஒடிசாவில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயர்நிலைப் பள்ளிகள், ஆய்வகங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
மேலும் ஒடிசா அரசு சமீபத்தில் ரூ. 4,000 கோடி மதிப்பிலான ‘அமா ஒடிசா, நபி ஒடிசா’ (நமது ஒடிசா, புதிய ஒடிசா) திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் வெவ்வேறு திட்டங்களை மேற்கொள்ள ரூ.50 லட்சம் கிடைக்கும். அந்த பணிகள் அனைத்து இப்போது பாண்டியனின் நேரடி மேற்பார்வையின் கீழ் செயல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
சென்னையின் ஆதரவு… நன்றி தெரிவித்த ஆப்கான் வீரர்கள்: பாபர் ரியாக்சன்!