அதிமுகவுக்கும் சேர்த்து நாங்கதான் குரல் கொடுக்கணும்: அன்று வேலு, இன்று நேரு

அரசியல்

அமைச்சர் கே. என். நேரு அக்டோபர் 31ஆம் தேதி திருச்சியில் நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய பேச்சு திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக என முக்கியமான கட்சிகளிடையே விவாதங்களையும் அதிர்வுகளையும் ஏற்படுத்தி இருக்கிறது.

திருச்சியில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு,  “இன்றைக்கு தமிழக கவர்னர் எதிர்க்கட்சியை போல செயல்படுகிறார். பாஜகவினர் சின்ன விஷயத்தை கூட ஊதி பெரிதாக்குகிறார்கள். ‘என்னய்யா உங்க கட்சிக்காரர்களுக்கே எதுவும் நடக்கலையாமே’ என்று அதிமுகவினரே சொல்லும் அளவுக்கு நேர்மையான ஆட்சி நடக்கிறது.

அதிமுக இன்று பிளவு பட்டு கிடக்கிறது. அந்த இடத்தை பாஜக பிடித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறார்கள். அதனால்தான் அவர்கள் அதிமுகவை சேரவிடாமல் பார்த்துக் கொள்கிறார்கள். 72 ல் எம்ஜிஆர் திமுகவை விட்டு வெளியேறினார். அதற்குப் பிறகு காங்கிரசோடு  கூட்டணி அமைத்த கட்சிகள் தேர்தல்களில் வெற்றி பெற்றன.

91 இல் காங்கிரஸோடு சேர்ந்த அதிமுக வெற்றி பெற்றது. 96 இல் தமிழ் மாநில காங்கிரசோடு சேர்ந்து நாம் வெற்றி பெற்றோம். இப்படி தொடர்ந்து காங்கிரசை மையப்படுத்தி வெற்றி இருந்தது. அந்த இடத்தை பாஜக கைப்பற்ற பார்க்கிறது.

அதனால்தான் அதிமுகவை இரண்டாக மூன்றாக பிரித்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் இணைந்து விட்டால் அதிமுக சொல்வதைதான் இவர்கள் கேட்க வேண்டும். அதனால்தான் அவர்களை பிரித்து வைத்திருக்கிறார்கள்.

கடந்த காலத்தில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் ஆன போட்டி என்பது அண்ணன் தம்பி இடையிலான போட்டியாக இருந்தது. ஆனால் இப்போது சகல அதிகாரத்தையும் கையில் வைத்திருப்பவர்களோடு போட்டி போடுகிறோம்.

எனவே மிக மிக கவனமாக செயல்படக்கூடிய நிலையில் நாம் இருக்கிறோம்” என்று பேசினார் அமைச்சர் நேரு. இந்த கூட்டத்திற்கு பிறகு அதிமுகவினரின் பல நிர்வாகிகள் கூட திமுக நிர்வாகிகளை தொடர்பு கொண்டு, ” நேரு உண்மையைத்தான் பேசியிருக்கிறார்” என்று தெரிவித்திருக்கிறார்கள்.

திமுக வட்டாரத்தில் இதுகுறித்து நாம் பேசியபோது, “என்னதான் அதிமுகவுடன் அரசியல் போட்டி போட்டாலும் அதிமுகவின் இடத்தில் பாஜகவை கொண்டு வந்து நிறுத்துவதை திமுக என்றைக்குமே விரும்பியதில்லை. 

கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது சட்டமன்றத்தில் அவரிடம் திமுகவின் துரைமுருகன்,  எ.வ.வேலு போன்றோர் தனிப்பட்ட முறையில் பேசிக் கொண்டிருப்பார்கள். அப்போது, ‘பிஜேபி காரங்க மேல அதிகாரத்தில் இருக்காங்க  என்பதற்காக அவங்க சொல்ற எல்லாத்தையும் செஞ்சுடாதீங்க.

we should give voice to admk ministers velu and nehru speech

நாளைக்கு அது உங்களுக்கே எதிராக நிற்கும். கவனமாய் இருங்க.  தமிழ்நாட்டுல நீங்க ஆளனும் இல்லனா நாங்க ஆளனும். இங்க பிஜேபிக்கு எல்லாம் இடம் கிடையாது’ என்று கூறி இருக்கிறார்கள்.

இது மட்டுமல்ல கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது திருவண்ணாமலையில் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய இப்போதைய அமைச்சர் எ‌.வ.வேலு, ’பாஜகவினர் தமிழ்நாட்டில் எப்படியாவது நுழைந்து விட வேண்டும் என்று துடிக்கிறார்கள்.

இப்போது அதிமுகவை தங்கள் கையில் வைத்துக்கொண்டு அவர்கள் சொல்வதை எல்லாம் அதிமுக ஆட்சியின் மூலம் செய்ய வைக்கிறார்கள். இதே பாஜக நாளை அதிமுகவுக்கு எதிராகவே வந்து நிற்கும். அப்போது அதிமுகவுக்கும் சேர்த்து குரல் கொடுக்கப் போவது திமுக தான்.

இதை அதிமுக தொண்டர்களும் புரிந்து கொள்ள வேண்டும். இது திராவிட மண். இங்கே மதவாத சக்திகளுக்கு இடமில்லை’ என்று பேசினார் வேலு” என்று கடந்த சட்டமன்றத் தேர்தலின்போதே வேலு பேசியதை நினைவுபடுத்துகிறார்கள்.
-வேந்தன்

தொடர் மழை: வடிந்தும் வடியாத சென்னை!

சென்னை கனமழை: நள்ளிரவு முதல் ஆய்வுசெய்யும் மேயர்!

+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *