”வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது” : ஆளுநருக்கு ஸ்டாலின் பதிலடி!

அரசியல்

காவி உடையுடன் கூடிய திருவள்ளுவரின் புகைப்படத்தை பதிவிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவியும், அண்ணாமலையும் வாழ்த்து தெரிவித்திருந்தது சர்ச்சையானது. இந்த நிலையில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு இன்று (ஜனவரி 16) பல கட்சி தலைவர்களும் பெரும் புலவர் வள்ளுவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் காவி உடையுடன் கூடிய திருவள்ளுவர் புகைப்படத்தை ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இருவரும் தங்களது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு திருவள்ளுவர் தின வாழ்த்துச் செய்தி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் திருவள்ளுவரை சனாதனவாதியாக ஆளுநர் குறிப்பிட்டிருந்ததால் தமிழ் ஆர்வலர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் ஆளுநர் மற்றும் அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழினத்தில் பிறந்து அமிழ்தமிழில் அறம் உரைத்து உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான்புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துகள்!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூகநீதிக் கோட்பாட்டையும் – முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும் என்ற தன்னம்பிக்கை ஊக்கத்தையும் – அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை என்ற கருத்தியலையும் வழிகாட்டியவர் வள்ளுவர்.

குமரியில் 133 அடியில் சிலையும் – தலைநகரில் கோட்டமும் அமைத்துப் போற்றும் குறளோவியத் தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது. குறள் நெறி நம் வழி! குறள் வழியே நம் நெறி!” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த சில ஆண்டுகளாக கடும் எதிர்ப்புகளையும் மீறி, காவி உடை திருவள்ளுவர் புகைப்படத்தினை பாஜக தலைவர்கள் பயன்படுத்தி வரும் நிலையில், பல கட்ட ஆய்வுக்கு பின்னர் புகழ்பெற்ற ஓவியர் வேணுகோபால் சர்மா எந்தவித மதச்சார்பும் இல்லாமல் வரைந்த வெள்ளாடை தரித்த அதிகாரப்பூர்வ திருவள்ளுவர் புகைப்படத்தையும் தனது பக்கத்தில் ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

திருவள்ளுவர் தினம் : மீண்டும் சர்ச்சையை எழுப்பிய ஆளுநர், அண்ணாமலை

இரு வேடங்களில் மிரட்டும் சூர்யா… கங்குவா புது போஸ்டர் இதோ!

+1
0
+1
0
+1
0
+1
5
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *