திருவள்ளுவர் தினம் : மீண்டும் சர்ச்சையை எழுப்பிய ஆளுநர், அண்ணாமலை

Published On:

| By christopher

காவி உடையில் இருக்கும் திருவள்ளுவர் புகைப்படத்துடன் ஆளுநர் ஆர்.என்.ரவியும், அண்ணாமலையும் இன்று (ஜனவரி 16) திருவள்ளுவர் தின வாழ்த்து செய்தி வெளியிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் பொங்கல் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக உழவுக்கு மிக முக்கியமான பங்களிப்பை அளித்து வரும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

மேலும் திருக்குறள்கள் மூலம் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து நெறிகளையும் கற்பித்துச் சென்ற தெய்வப்புலவர் திருவள்ளுவரை பெருமைப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினமும் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதனையடுத்து பல தலைவர்களும் திருவள்ளுவருக்குத் தங்கள் மரியாதையைச் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இருவரும் வெளியிட்டுள்ள திருவள்ளுவர் தின வாழ்த்துச் செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இருவரும் தங்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் காவி உடையில் இருக்கும் திருவள்ளுவர் புகைப்படத்துடன் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டுள்ளனர்.

ஆளுநர் ஆர்.என். ரவி தனது பதிவில், “திருவள்ளுவர் தினத்தில், ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன். அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டுமொத்த மனித குலத்துக்கு வழிகாட்டியாகவும் உத்வேகத்தின் ஆதாரமாகவும் நீடிக்கிறது. இந்த புனிதமான நாளில், அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். 

அண்ணாமலை தனது பக்கத்தில், “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்ற மகாகவி பாரதியின் வரிகளுக்கேற்ப, உலகம் முழுவதும் எக்காலத்துக்கும் பொருந்தும்படியான திருக்குறளை வழங்கிய தெய்வப்புலவர் திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

பிரதமர் மோடியின் சீரிய முயற்சியால், திருக்குறள் இன்று உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, உலகப் பொதுமறை என்ற பெயருக்கு ஏற்ப புகழ் பெற்று திகழ்கிறது. உலக நாடுகளில் திருவள்ளுவரின் பெருமை பரவி வருகிறது. பாரதத்தின் கலாச்சாரமும், பாரம்பரியமும், மனித குலத்தின் வாழ்வியல் முறைகளும் நிறைந்திருக்கும் திருக்குறளை உணர்ந்து படிப்போம். அய்யன் திருவள்ளுவரைப் போற்றுவோம்.” என்று தெரிவித்துள்ளார். 

ஏற்கெனவே காவி உடை தரித்த திருவள்ளுவர் புகைப்படத்தினை பாஜக தலைவர்கள் பயன்படுத்தியதற்கு பலமுறை தமிழ் ஆர்வலர்களும், மக்களும் கடும் எதிர்வினையாற்றி உள்ளனர்.

மேலும் பல கட்ட ஆய்வுக்கு பினர் புகழ்பெற்ற ஓவியர் வேணுகோபால் சர்மா எந்தவித மதச்சார்பும் இல்லாமல் வரைந்த வெள்ளாடை தரித்த திருவள்ளுவர் புகைப்படத்தையே 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தி வருகிறது.

இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாக கடும் எதிர்ப்புகளையும் மீறி, காவி உடை திருவள்ளுவர் புகைப்படத்தினை பாஜக தலைவர்கள் பயன்படுத்துவதும், சனாதனவாதி என்று அவர் மீது மதச்சாயத்தை பூசுவதும் தமிழ் ஆர்வலர்களிடையே கடும் அதிருப்தியை எழுப்பியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு கோலாகல தொடக்கம்!

100-வது நாள்: 25 ஆயிரத்தை நெருங்கும் பாலஸ்தீனர்களின் பலி எண்ணிக்கை! 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share