அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கெளதம சிகாமணியிடம் 6 மணி நேரமாக நடைபெற்று வந்த அமலாக்கத்துறை விசாரணையானது நிறைவடைந்துள்ளது.
2006-2011 ஆண்டு காலகட்டத்தில் கனிமவளத் துறை அமைச்சராக இருந்த பொன்முடி, செம்மண் குவாரிகளில் விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக மண் அள்ள அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் அரசுக்கு 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக 2012 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த சூழலில் நேற்று (ஜூலை 17) உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அவரது வீடு, விழுப்புரத்தில் உள்ள அவரது வீடு, பொறியியல் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையைத் தொடர்ந்து நேற்று இரவு விசாரணைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு பொன்முடி அழைத்துச் செல்லப்பட்டார்.
அதிகாலை 3.30 மணி வரை அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் மீண்டும் இன்று மாலை 4 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று பொன்முடிக்கும் அவரது மகன் கௌதம சிகாமணிக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதன்படி இன்று 4 மணி அளவில் பொன்முடியும், கௌதம சிகாமணியும் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். இருவரிடமும் தனித்தனியே அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அமலாக்கத்துறை இன்று தனது டிவிட்டர் பக்கத்தில், “சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டம் 2002ன் படி, தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம் சிகாமணி ஆகியோருக்கு தொடர்புடைய ஏழு இடங்களில் ஜூலை 17ஆம் தேதி சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையில் பல்வேறு குற்ற ஆவணங்கள்,ரொக்கம் ரூ. 81.7 லட்சம் ரொக்கம் சிக்கியது. வெளிநாட்டு கரன்சி (பிரிட்டிஷ் பவுண்டுகள்) தோராயமாக. ரூ. 13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தவிர வங்கிக் கணக்கில் நிலையான வைப்பு நிதியாக டெபாசிட் செய்யப்பட்டிருந்த ரூ.41.9 கோடி முடக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் இரவு 10 மணியளவில் அமைச்சர் பொன்முடி மற்றும் கெளதம சிகாமணியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி முடித்தனர். இதனை தொடர்ந்து இருவரும் காரில் ஏறி வீட்டிற்கு சென்றனர்.
செல்வம்
“இன்னும் கொடுமைகள் நடக்கும்” – அமலாக்கத்துறை சோதனை குறித்து ஸ்டாலின்
NDA கூட்டணிக்கு மோடி புது விளக்கம்!