என்டிஏ கூட்டணிக்கு பிரதமர் மோடி புது விளக்கத்தை அளித்துள்ளார்.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று (ஜூலை 18) தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பாமக துணைப் பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி, புதிய தமிழகம் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் தமிழ்நாட்டில் இருந்து இந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். மொத்தம் 38 கட்சிகள் பங்கேற்றுள்ளன.
இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “தேசிய ஜனநாயகக் கூட்டணி சமீபத்தில் 25 ஆண்டுகளை நிறைவு செய்தது. எங்களுடன் இணைந்திருக்கும் பழைய கட்சிகளுக்கும், புதிதாக இணைந்துள்ள கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இந்தியாவில் கூட்டணிகளுக்கு நீண்ட பாரம்பரியம் இருக்கிறது. ஆனால் எதிர்மறை எண்ணங்களுடன உருவாக்கப்படும் கூட்டணி ஒருபோதும் வெற்றி பெறாது.
நாம் எதிர்க்கட்சியாக இருந்தபோது எப்போதும் நேர்மறையான அரசியலைத்தான் செய்தோம். எதிர்க்கட்சியாக இருந்த போது, அப்போது இருந்த அரசாங்கங்களின் மோசடிகளை நாம் வெளியே கொண்டு வந்தோம்.
அதுபோன்று மக்களின் உத்தரவுகளை அவமதித்ததில்லை. நாட்டின் வளர்ச்சிக்கு நாம் எப்போதும் தடையாக இருந்ததில்லை. எந்த கட்சிக்கும் எதிராகவோ அல்லது எந்த கட்சியையும் அகற்றுவதற்காகவோ தேசிய ஜனநாயக கூட்டணி உருவாக்கப்படவில்லை. என்.டி.ஏ ஜனநாயகத்தை குறிவைத்து வெளிநாட்டு சக்திகளை பயன்படுத்தியது இல்லை.
பிரகாஷ் சிங் பாதல், பாலாசாகேப் தாக்கரே, அஜித் சிங், ஷரத் யாதவ் போன்ற தலைவர்கள் நமது நாட்டுக்காக பங்காற்றியவர்கள். அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாகவும், வளர்ந்த நாடாகவும் மாறும்.
உறுதியான மற்றும் வலிமையான அரசு இருப்பதால், இந்தியா மீதான உலக நம்பிக்கை அதிகரித்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தேசம், அதன் பாதுகாப்பு, முன்னேற்றம் மற்றும் மக்களுக்கு அதிகாரம் ஆகியவைதான் முக்கியம்.
கடந்த 9 ஆண்டுகளில் என்.டி.ஏ. ஊழலுக்கான அனைத்து வழிகளையும் அடைத்துள்ளது. அரசு திட்டங்களில் இருந்த ஓட்டைகளையும் அடைத்துள்ளது.
கடந்த 9 ஆண்டுகளில் நாங்கள் ஏழைகளின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ.30 லட்சம் கோடி மாற்றியுள்ளோம். இதுவரை ஊழலில் சிக்கியவர்களிடம் இருந்து 3 லட்சம் கோடி ரூபாயை சேமித்துள்ளோம்.
என்.டி.ஏ-வில் எந்த கட்சியும் சிறியது பெரியது என்று கிடையாது. நாம் அனைவரும் ஒன்றாக ஒரே இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும்.
மகாத்மா காந்தி, அம்பேத்கர், ராம் மனோகர் லோஹியா ஆகியோர் காட்டிய சமூக நீதியின் பாதையில் தேசிய ஜனநாயக கூட்டணி பயணிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், NDA (என்டிஏ) என்பதற்கு பிரதமர் மோடி புது விளக்கத்தையும் அளித்துள்ளார்.
அதாவது N – புதிய இந்தியா, D – வளர்ந்த தேசம் A – மக்கள் மற்றும் பிராந்தியத்தின் விருப்பம் என்று கூறியுள்ளார். (N – New India, D – developed Nation A – aspirations of people and region)
பெங்களூரில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தங்கள் கூட்டணிக்கு INDIA என பெயரிட்டிருந்த நிலையில், என்டிஏ கூட்டணிக்கு இப்படி ஒரு விளக்கத்தை அளித்துள்ளார் மோடி.
பிரியா
கலைஞர் மகளிர் உரிமை திட்டம்: விண்ணப்பப்பதிவு முகாம் எப்போது?
“அமலாக்கத்துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கை இல்லை” – ஹெச்.ராஜா