மருத்துவ பொது கலந்தாய்வு முறையை நிரந்தரமாக ரத்து செய்ய கோரி மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியாவை சந்திக்க உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மருத்துவ படிப்பிற்கான இடங்களையும் நீட் மதிப்பெண் தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் பொதுக்கலந்தாய்வு மூலம் நிரப்ப முடிவு செய்துள்ளதாக கடந்த 2 ஆம் தேதி தேசிய மருத்துவ ஆணையம் அரசிதழில் செய்தி வெளியிட்டது.
இதுதொடர்பான சுற்றறிக்கை அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டது. இந்த தேசிய பொதுகலந்தாய்வு முறை மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும், கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று (ஜூன் 12) சென்னை மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,
“பொது கலந்தாய்வு அறிவிக்கப்பட்ட உடனேயே துறையின் செயலாளர் செந்தில் குமார் ஐஏஎஸ் உடனடியாக முதல்வரின் அறிவுறுத்தலின் படி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினார்.
அந்த கடிதத்தில், இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு மாநிலங்களின் பங்கை குறைக்கும் நோக்கம் கொண்டது. கல்வி விதிமுறைகளுக்கு முரணானது என்று பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு செயல்முறையை மையப்படுத்த வேண்டிய நீதிமன்ற உத்தரவுகள் எதுவும் இல்லாத சூழலில் இதுபோன்ற பொது கலந்தாய்வு என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல என்ற கருத்துக்களும் தெரிவிக்கப்பட்டன.
இந்த நிலையில் மாநில உரிமைகளை மீறுகிற வகையிலும் மாநில உரிமைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் இதுபோன்ற அறிவிப்பு ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல என்று ஒட்டுமொத்த சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் இந்த ஆண்டு மருத்துவ பொது கலந்தாய்வு இருக்காது என்று வாய்வார்த்தையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும் மத்திய அரசின் சார்பில் அடுத்தடுத்த ஆண்டுகள் பொது கலந்தாய்வு இருக்குமேயானால் அதை தவிர்ப்பதற்குரிய நடவடிக்கை முதலமைச்சரின் அறிவுறுத்தலைப் பெற்று மேற்கொள்ளப்படும்.
கடந்த 10 நாட்களாக மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரை சந்திக்க நேரம் கேட்டு வருகிறோம்.
அவர் கடந்த 4 அல்லது 5 நாட்களாக ஒடிசா ரயில் விபத்து நடைபெற்ற பகுதியில் இருப்பதால் இந்த வாரம் சந்திப்பதற்கு நேரம் தருவதாக தெரிவித்துள்ளார்கள்.
வரும் 15 ஆம் தேதி கிண்டியில் இருக்கும் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை திறப்பு விழாவிற்குப் பிறகு 16, 17, 18 ஆகிய தேதிகளில் சந்திப்பதற்கு வாய்ப்பு கேட்டுள்ளோம்.
மத்திய அமைச்சரை சந்தித்து பொது கலந்தாய்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்கின்ற கோரிக்கையை தமிழக மருத்துவ கல்வி மாணவர்களின் சார்பில் வைக்கவிருக்கிறோம். நிச்சயம் பொது கலந்தாய்வில் இருந்து விலக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொது கலந்தாய்வு மூலம் தமிழ்நாட்டிற்கு பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படும். ஒவ்வொரு ஆண்டும் 7.50 சதவீதம் இட ஒதுக்கீட்டால் ஏழை எளிய மாணவர்களுக்கு மருத்துவ கல்வி பயில வாய்ப்பு கிடைத்தது.
சிறந்த மருத்துவக் கல்லூரிகளாக கருதக்கூடிய ஸ்டான்லி, சென்னை மருத்துவ கல்லூரிகளில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் சேர்ந்து பயில்வதற்கு கூட பல்வேறு வகையான இடையூறுகள் ஏற்படும்” என்று கூறினார்.
மோனிஷா
அதிமுக- பாஜக கூட்டணி மறுபரிசீலனை : ஜெயக்குமார் திட்டவட்டம்!
குழந்தை தொழிலாளர்கள் இல்லாத நிலையை உருவாக்குவோம்: சி.வி.கணேசன்