டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ஆம் தேதி இரவு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
கைது நடவடிக்கையை எதிர்த்தும் ஜாமீன் கோரியும் உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று (மே 10) நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி எக்ஸ் வலைதள பக்கத்தில், “அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போதைய தேர்தல் சூழலில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்புத்துறை தலைவர் பவன் கேரா, “அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. இதே போல ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கும் நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
மதுபான ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு அண்மையில் விடுதலையான ஆம் ஆத்மி நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங், “உண்மை வெற்றி பெற காலதாமதம் ஆகலாம், ஆனால் தோற்கடிக்க முடியாது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. சர்வாதிகாரம் முடிவுக்கு வரும். கெஜ்ரிவால் செய்யும் அற்புதங்களை இனி இந்தியா காணும்” என்று தெரிவித்துள்ளார்.
சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவு இளைஞரணி தலைவர் ஆதித்யா தாக்கரே, “நாட்டில் நிலவும் சர்வாதிகார ஆட்சியில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நிவாரணம் கிடைத்திருப்பது மாற்றத்தின் மிகப்பெரிய அறிகுறியாகும். அவர் உண்மையை பேசுகிறார், பாஜகவிற்கு அது பிடிக்காது. அவருக்கு ஜாமீன் கிடைத்திருப்பது இந்தியா கூட்டணிக்கு வலு சேர்க்கும் நமது அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு…. கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்!
பொன்முடி வழக்கு: ஜாமீன் பெற அவகாசம் நீட்டிப்பு!