ஒரு சாம்ராஜ்யம் உட்பகையையும், அயல் பகையையும் எப்படி எதிர்கொள்கிறது, வெற்றி கொண்டு நிலை நிறுத்திக் கொள்கிறது அல்லது வீழ்கிறது என்பதுதான் உலகம் எங்கிலும் அரச கதைகளின் அடிப்படை. அந்த வகையில் நமது சோழ தேசமும் அரசியல் நெருக்கடிகளுக்கும் அதிகார சதிகளுக்கும் இடையிலேயேதான் பயணித்திருக்கிறது.
அப்படிப்பட்ட சோழ சாம்ராஜ்யத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியை அகம் புறம் என்ற தமிழரின் அடிப்படை இருப்புப் பாதையில் ஓட விட்டிருப்பதுதான் பொன்னியின் செல்வன் நாவல். அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் இப்போது மணிரத்தினத்தின் மூலம் சினிமாவாகவும் எடுக்கப்பட்டு திரைக்கு வருகிறது.

வரலாற்று ஆசிரியர்களுக்கு ஆதாரம் என்பது கல்வெட்டுதான். அந்த கல்வெட்டுகள் மூலம் சோழ அரசர்களின் ஆட்சிக் காலம், அவர்களது இயல்புகள் எல்லாம் அறியப்பட்டிருக்கின்றன. அந்த வகையில் கல்வெட்டுகள் சொல்லும் தகவல்களும் கல்கியின் சொல்வெட்டான பொன்னியின் செல்வன் சொல்லும் தகவல்களும் எந்த வகையில் ஒன்றுபடுகின்றன, வேறுபடுகின்றன என்பதை முதலில் பார்க்கலாம்.
சோழப் பேரரசுக்குள் ஒரு சிற்றுலா…
அதற்கு முன் சோழப் பேரரசுக்குள் ஒரு சிற்றுலா செல்வோம்.
பராந்தக சோழன் சோழப் பேரரசு ஆரம்பித்த காலத்தில் ஒரு முக்கிய சோழனாக பார்க்கப்படுகிறான். பாண்டியர்களும், ராஷ்டிர கூடர்களும் அவ்வப்போது சோழர்களை சூறையாடிக் கொண்டே இருந்த காலகட்டங்களைத் தாண்டி…. பராந்தக சோழன் தான், பாண்டியர்களையும் ராஷ்டிர கூடர்களையும் ஒடுக்குகிறான். சோழ அரசுக்கு ஒரு புதிய அகங்காரத்தை ஏற்படுத்துகிறான். ஆனாலும் வேந்தர்க்குத் தொழிலாம் சண்டைகள் தொடர்கின்றன.

பராந்தக சோழனுக்குப் பின் அவனது மகன் கண்டர ஆதித்த சோழன் ஆளுகிறான். ஐந்து வருடங்களே ஆட்சி செய்தபோதும் இன்று வரை கண்டராதித்தன் மேற்கு எழுந்து அருளிய தேவர் என்றே கல்வெட்டால் குறிப்பிடப்படுகிறான்.
கல்வெட்டுக் குறிப்புகள்
இங்கே நாம் ஒரு கல்வெட்டுக் குறிப்பறிவைப் பெற்றாக வேண்டும். பொதுவாகவே சோழர்களில் ஒரு மன்னனின் ஆட்சியையும் வாழ்க்கை நிறைவையும் குறிப்பது அவர்களைப் பற்றிய கல்வெட்டுக் குறிப்புகள்தான். அந்த வகையில் சோழ மன்னர்கள் அநேகர், ‘துஞ்சிய தேவர்’ என்று குறிப்பிடப்படுகிறார்கள்.
துஞ்சிய என்றால் துயில்கின்ற என்று பொருள் கொள்ளலாம். அதாவது கல்லறையில் துஞ்சிய தேவர் என்று பொருள். அதேநேரம் கண்டராதித்த சோழனுக்கு மட்டும் கல்வெட்டுக் குறிப்பு என்ன சொல்கிறது என்றால், ‘மேற்கு எழுந்தருளிய தேவர்’என்றே குறிக்கப்படுகிறான்.

அதாவது ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோதே அவற்றை எல்லாம் விட்டுவிட்டு சாமியாராக போய்விட்டார் என்ற பொருளில் இந்த கல்வெட்டு குறிப்பு சில செய்திகளைச் சொல்லுகிறது. அதேநேரம் தேவாரத்தில் இருக்கும் திருமுறைகளில் ஒன்றை கண்டராதித்தன் எழுதியுள்ளார். ஆக…கண்டராதித்தன் தான் அரசனாக இருந்தபோதும் தனக்கே அரசன் சிவன் தான் என்பதை உணர்ந்து சிவனடியாராக மாறி தேவாரப் பதிகம் இயற்றும் அளவுக்கு சென்றுவிட்டார்.
இந்த கண்டராதித்தனின் மனைவிதான் செம்பியன் மாதேவி. செம்பியன் மாதேவி என்ற பெயரை நாவால் உச்சரிக்கும்போதும் சரி, செவிகளால் கேட்கும்போதும் சரி ஒரு கம்பீரம் பிறக்கும்.

இந்த கண்டராதித்த செம்பியன் மாதேவி தம்பதிக்கு மணமாகி நீண்ட வருடங்கள் கழித்து தாமதமாக பிறக்கும் குழந்தைதான் உத்தம சோழன் (சேந்தன் அமுதன்). கண்டராதித்தன் ஜீவ சமாதி ஆகிவிட்டார் என்றும், கர்நாடக திசை சென்று முழுமையான சிவனடிச் சாமியாராக மாறிவிட்டார் என்றும் வரலாற்று ஆசிரியர்கள் வெவ்வேறு வகைகளில் தங்களது கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
மேற்கு எழுந்து அருளிய தேவர் என்ற கல்வெட்டுக் குறிப்பே பல்வேறு மர்மங்களை இன்னமும் தனக்குள் வைத்திருக்கிறது.
கண்டராதித்த சோழனுக்குப் பின் முறைப்படி அவனது மகன் உத்தம சோழன் தான் ஆட்சிக்கு வரவேண்டும். ஆனால் அப்போது உத்தம சோழன் சிறு குழந்தை என்பதால், கண்டராதித்தனின் தம்பி அரிஞ்சய சோழன் ஆட்சிக்கு வருகிறான். ராணிப்பேட்டை அருகே பொன்னையாற்றங்கரையில் மேல்பாடி என்ற ஊரில் நடந்த போரில் அரிஞ்சய சோழன் கொல்லப்படுகிறான்.

கண்டராதித்த சோழனின் தம்பியான அரிஞ்சய சோழன் வெறும் இரண்டு ஆண்டுகளே ஆட்சி நடத்துகிறான். ஏற்கனவே தன் அண்ணன் மகன் குழந்தையாக இருந்ததால்தான், இந்த பொறுப்பையே ஏற்றான் அரிஞ்சய சோழன். ஆனால் அவனும் போர்க் களத்தில் பலியாக…. கண்டராதித்த சோழன் மகன் உத்தம சோழன் இன்னமும் குழந்தையாகவே இருக்கிறான். அதாவது மன்னராவதற்குரிய பதின்ம வாலிப வயது வரவில்லை.
எனவே அரிஞ்சய சோழனின் மகன் சுந்தர சோழனே ஆட்சிக்கு வருகிறான். இந்த சுந்தர சோழனுக்கு மூன்று மகன்கள். மூத்த மகன் பெயர் ஆதித்த கரிகாலன், இரண்டாவது மகள் குந்தவை. மூன்றாவது அருண்மொழி வர்மன். இந்த அருண்மொழி வர்மன் தான் உலகம் போற்றும் மாமன்னன் ராஜ ராஜ சோழன்.
சுந்தர சோழன் நீண்ட ஆயுள் பெற்று நிறைவாக ஆட்சி நடத்துகிறான். ஆட்சிக்கு வந்திருக்க வேண்டிய உத்தம சோழனும் வளர்ந்து விடுகிறான். அதேநேரம் மன்னராக இருக்கும் சுந்தர சோழனின் பிள்ளைகளும் ஆட்சி அதிகாரத்தில் செல்வாக்கு செலுத்துகிறார்கள்.
குறிப்பாக சுந்தர சோழனின் மகன் ஆதித்த கரிகாலன், ஓர் இணையரசராகவே கருதப்படும் அளவுக்கு செல்வாக்கோடு இருக்கிறான். சுந்தர சோழன் ஆட்சியில் இருக்கும்போதே ஆதித்த கரிகாலன் பெயர்களில் தானங்கள், கொடைகள் வழங்கப்படுகின்றன. கல்வெட்டுகளில் ஆதித்த கரிகாலன் ஆட்சி ஆண்டு என்றே பொறிக்கப்படுகிறது. தொண்டை மண்டலத்தின் சோழ நிர்வாகத்தை கவனிக்கும் பொறுப்பு ஆதித்த கரிகாலனிடம் கொடுக்கப்படுகிறது.
இந்த நிலையில்தான் நீண்ட காலமாக நிலை நிறுத்தப்பட்டிருந்த சோழப் பேரரசுக்கு மீண்டும் பாண்டிய மன்னர்களிடம் இருந்து, இலங்கை மன்னர்களிடம் இருந்தும் தொந்தரவுகள் தொடங்குகின்றன. அப்போது அந்தத் தலைவலிகளை அடக்குவதற்காக மகன் ஆதித்த கரிகாலனை அனுப்புகிறான் சுந்தர சோழன். ஆதித்த கரிகாலனோடு பூதி விக்ரம கேசரி, பார்த்தி வேந்திரன் ஆகிய இருவரும் செல்கிறார்கள்.
இந்த பார்த்தி வேந்திரன் தான் ராஜ ராஜ சோழன் என்றும் ஒரு கருத்து உண்டு. ஆதித்த கரிகாலனோடு சேர்ந்து இந்த இருவரும் சென்றுதான் பாண்டிய மன்னனைக் கொல்கிறார்கள். அதனால்தான் பாண்டியன் தலை கொண்ட கொப்பர கேசரி என்ற கல்வெட்டுப் பெயர் ஆதித்த கரிகாலனுக்கு அமைந்தது.

ஆதித்த கரிகாலன் பாண்டியர்களை போரில் கொன்றான் என்பது கல்வெட்டு. (இதை அடிப்படையாக வைத்தே ஆதித்த கரிகாலன் வீழ்த்திய பாண்டியனை வீர பாண்டியன் என்று குறிப்பிடுகிறார் கல்கி)
இவ்வாறு தன் தந்தை சுந்தர சோழனுக்கு இணையரசராகவே இருந்து பல போர்களில் வெற்றியைக் குவித்த ஆதித்த கரிகாலன் மர்மமான முறையில் இறந்து போகிறான். அவனுக்குப் பின்னர் அவனது தந்தை சுந்தர சோழனும் காலமாகிறான். சுந்தர சோழன் காலமான பிறகு அவரை கல்வெட்டு எப்படிக் குறிக்கிறது என்றால் பொன் மாளிகை துஞ்சின தேவர் என்று சொல்கிறது.
காஞ்சியில் ஆதித்த கரிகாலன் கட்டிய பொன் மாளிகையில் ஓய்வெடுத்தபடியே அவர் காலமானார் என்பதைத்தான் கல்வெட்டு பொன் மாளிகை துஞ்சின தேவர் என்று கூறுகிறது. (கல்கி தனது நாவலில் இதைத்தான் காஞ்சியில் தன் தந்தைக்காக ஆதித்த கரிகாலன் அழகான பொன் மாளிகை கட்டினான் என்று விவரிப்பார்)
இப்போது சுந்தர சோழனும் இல்லை, அவரது மகன் ஆதித்த கரிகாலனும் இல்லை. அதன் பின் வரிசைப்படி வரவேண்டிய அருண்மொழி வர்மனும் ஆட்சிக்கு வரவில்லை. அதற்கு பதில் சுந்தர சோழனின் அண்ணன் கண்டராதித்த சோழனின் மகன் உத்தம சோழன் ஆட்சிக்கு வருகிறான்.
அதாவது கண்டராதித்த சோழன் மரணித்தபோது அவனது மகன் உத்தம சோழன் சிறு குழந்தை என்பதால், தம்பி குடும்பமான சுந்தர சோழன் ஆட்சிக்கு வருகிறது. ஆனால் அண்ணனின் மகன் உத்தம சோழன் இப்போது ஆட்சிக்கான உரிமையைப் பெறுகிறான். இந்த உத்தம சோழன் தான் சேந்தன் அமுதன். இந்த சேந்தன் அமுதன் 17 வருடங்கள் ஆட்சி நடத்தியிருக்கிறான், அதன் பின் உத்தம சோழன் இறந்துபோக… மீண்டும் ஆட்சி உரிமை தம்பி குடும்பத்துக்கு வருகிறது.
அதாவது சுந்தர சோழனும் அவரது மகன் ஆதித்த கரிகாலனும் இல்லாத நிலையில் சித்தப்பா உத்தம சோழனும் இறந்துபோக சோழப் பேரரசு அருண்மொழி வர்மன் கைகளுக்கு வருகிறது. இந்த அருண்மொழி வர்மன் தான் ராஜ ராஜ சோழன்.
ஆதித்த கரிகாலன் மரணம் எப்படி நடந்தது?

ஆதித்த கரிகாலன் மறைவைப் பற்றி உடையார்குடி கல்வெட்டு கிடைக்கிறது. அந்த கல்வெட்டில், ஆதித்த கரிகாலனை கொன்ற ரவிதாசன் உள்ளிட்ட நான்கு பேரும் பிராமணர்கள்’ என்று குறிப்பிடப்படுகிறது. இந்த நான்கு பேருக்கும் ஏற்கனவே அளிக்கப்பட்ட நிலங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது என்றும் அவர்கள் நாட்டை விட்டு துரத்தப்பட்டார்கள் என்றும் செய்திகள் கிடைக்கின்றன.
இவை ராஜராஜ சோழனின் இரண்டாம் ஆட்சி ஆண்டில் நடப்பதாக கல்வெட்டு சொல்கிறது. அதாவது அதற்கு முந்தைய உத்தம சோழனான சேந்தன் அமுதன் காலத்தில் இந்த தண்டனை வழங்கப்பட்டதாக தெரியவில்லை.

கல்வெட்டும் கல்கியும்
இதை அடிப்படையாக வைத்து ஆதித்த கரிகாலன் மர்ம மரணத்துக்கு சோழ அரச குடும்பத்துக்குள்ளேயே சதிச் செயல் திட்டமிடப் பட்டிருக்கலாம் என்பதே கல்வெட்டுகளை முன்னிறுத்தி கண்டறியப்படும் காரணம். அதாவது சுந்தர சோழனுக்குப் பின் ஆதித்த கரிகாலன் ஆட்சிக்கு வந்தால் தன் மகன் உத்தம சோழனுக்கு ஆட்சி அதிகாரம் கிடைக்காது.

எனவே உத்தம சோழனின் தாயான செம்பியன் மாதேவி சதித் திட்டம் தீட்டி ஆதித்த கரிகாலனை கொன்றுவிட்டார் என்று ஒரு கருத்து உண்டு. இன்னொன்று…. உத்தம சோழனே தனக்கு போட்டியாக ஆதித்த கரிகாலன் ஆட்சிக்கு வந்துவிடுவான் என்று கருதி தன் அம்மாவுக்குத் தெரியாமல் தானே ஆட்களை வைத்து ஆதித்த கரிகாலனை கொன்றுவிட்டான் என்றும் ஒரு கருத்து உண்டு.
எனவே ஆதித்த கரிகாலன் மர்ம மரணம் என்பது சோழ அரச குடும்பத்துக்குள் நிகழ்ந்த அதிகாரப் போரின் அரசியல் வெளிப்பாடு என்ற ஒரு கருத்து இன்றும் இருக்கிறது.
பொன்னியின் செல்வனில் புனைவுகள்
ஆனால்…. கல்கி தனது பொன்னியின் செல்வன் நாவலில் சோழர்களின் அரச குடும்பத்துக்குள் நடந்த இந்த சதித் திட்டங்களை எல்லாம் சொன்னால் சோழர்களை இழிவுபடுத்துவதாக ஆகிவிடும் என்று கருதி.. ஆதித்த கரிகாலன் மரணத்துக்குப் பின்னணியாக பாண்டியர்கள் தொடர்புடைய ஒரு புனைவை முன் வைக்கிறார்.
அதாவது பாண்டியர்களின் தலைகளைக் கொய்த ஆதித்த கரிகாலனை பாண்டியர்கள் பழி வாங்கியதாகவும் அதன் பொருட்டே நந்தினி என்ற அழகியை சோழ தேசத்துக்கு அனுப்பி அந்த நந்தினி மூலம் சோழனின் அதிகார ஆலோசகரான பழுவேட்டரையரை திருமணம் செய்துகொண்டு சோழப் படையில் பாண்டியர்களை ஊடுருவ வைத்து ஆதித்த கரிகாலனை கொலை செய்வதாகவும் புனைந்திருக்கிறார்.

இன்றளவும் பொன்னியின் செல்வனில் பேசப்படும் பாத்திரங்கள் இரண்டு. ஒன்று நந்தினி, இன்னொன்று குந்தவையின் கணவர் வந்தியத் தேவன். இந்த நந்தினி என்பது கல்கியின் கற்பனை பாத்திரம். அதேநேரம் வந்திய தேவனுக்கு பெரிய அளவு கல்வெட்டு ஆதாரங்கள் இல்லை.
வந்தியத் தேவனுக்கு பல மனைவிகள் உண்டு என்பதுதான் வரலாற்றுச் செய்தி. அதை அடிப்படையாக வைத்து அவனது காதலை மையப்படுத்தி வந்தியத் தேவனையும் அவனது குதிரையையும் ஓட விட்டிருக்கிறார் கல்கி. வந்தியத் தேவனுக்கு துணையாக தோழனாக வந்தியத் தேவன் பெருமைகளை பேசுவதற்காக ஆழ்வார்க்கு அடியான் என்ற பரம வைணவ கதாபாத்திரத்தை உருவாக்குகிறார் கல்கி.

இப்படித்தான் கல்கி தனது பொன்னியின் செல்வன் நாவலில் அரசு, அதிகாரம், சதியாலோசனை போன்றவற்றை சுவாரஸ்யப்படுத்த நந்தினி, ஆழ்வார்க்கடியான் என்ற முழு புனைவுப் பாத்திரங்களையும், வந்தியத் தேவன் என்ற பகுதிப் புனைவு பாத்திரத்தையும் பயன்படுத்தியிருக்கிறார்.
ஹிஸ்டரியும் மிஸ்ட்ரியும்
இந்த இடத்தில் கல்கியிடம் நேர்மை அழகை நாம் தரிசிக்க வேண்டும். மிகப்பெரும் வரலாற்றைச் சொல்லவரும்போது இந்த நந்தினி ஆழ்வாக்கடியான் ஆகிய புனைவுப் பாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அதேநேரம் இந்த புனைவு பாத்திரங்கள் வரலாற்றை இடையூறு செய்யாவண்ணம் அந்த பாத்திரங்களை அப்படியே காணாமல் போக செய்திருப்பார் கல்கி.
அதாவது ஹிஸ்டரிக்குள் கொஞ்சம் மிஸ்ட்ரியை தூவி, அதே நேரம் அந்த ஹிஸ்டரியை அந்த மிஸ்ட்ரி பாதிக்காத வண்ணம் பொன்னியின் செல்வனை எழுதியிருப்பார் கல்கி. அதனால் நந்தினி, ஆழ்வார்க்கடியான் போன்றோர் என்ன ஆனார்கள் என்றே சொல்லாமல் அப்படியே புனைவை விட்டிருப்பார் கல்கி.

ஏனென்றால் பொன்னியின் செல்வன் நாவலை உருவாக்கும் முன்பே சதாசிவ பண்டாரத்தார் எழுதிய சோழர் சரித்திரம், நீலகண்ட சாஸ்திரிகள் எழுதிய சோலாஸ் ஹிஸ்டரி அண்ட் அட்மினிஸ்ட்ரேஷன், தி சோலாஸ் ஆகிய வரலாற்று நூல்களை படித்திருக்கிறார் கல்கி.

அதனால் வரலாற்று ஆசிரியர்களின் முக்கியமான புத்தகங்களைப் படித்து அந்த வரலாற்றை அப்படியே கொடுக்காமல் கொஞ்சம் புனைவு என்னும் புதிய ரசம் பூசி தமிழர்களுக்குக் கொடுத்திருக்கிறார் கல்கி.
சோழர்களின் வரலாற்றுச் செய்திகளைச் சொல்லும் கல்வெட்டுகளில் இருந்தும், வரலாற்று ஆசிரியர்களின் நூல்களில் இருந்தும் அடிப்படை கருவெடுத்து நாவலுக்காக நந்தினி, ஆழ்வார்க்கடியான் ஆகிய புனைவுகளைக் குழைத்து பொன்னியின் செல்வன் என்னும் சொல்வெட்டை உருவாக்கினார் கல்கி. அந்த சொல்வெட்டில் இருந்து மணிரத்னம் உருவாக்கியிருக்கும் ’செல்லுலாய்டு வெட்டு’ எப்படி இருக்கிறது என்பதை படம்தான் சொல்லும்.
–வேந்தன்
திருமணமாகாத பெண்களும் கருக்கலைப்பு செய்து கொள்ளலாம் :உச்ச நீதிமன்றம் அனுமதி!
மனித கழிவுகளை மனிதர்களே அள்ளுவதா?: நீதிமன்றம் காட்டம்!
ஆகா சூப்பரான கச்சிதமான எழுத்துக்கள்.. மிகப்பெரிய சல்யூட் சார்..