சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகியோர் விசாரணை நீதிமன்றத்தை அணுகி ஜாமீன் பெறுவதற்கான கால அவகாசத்தை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து உச்சநீதிமன்றம் இன்று (மே 10) உத்தரவிட்டுள்ளது.
2006 – 2011 திமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.75 கோடி சொத்து சேர்த்ததாக பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதனை எதிர்த்து பொன்முடி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த மார்ச் 11-ஆம் தேதி பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீதான 3 ஆண்டு கால சிறைதண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது. மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்தது. விசாரணை நீதிமன்றத்தை அணுகி பொன்முடி ஜாமீன் பெறுவதற்கு ஒரு மாத காலம் அவகாசம் அளித்திருந்தது.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஜாமீன் பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற பொன்முடி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனையடுத்து பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு ஜாமீன் பெறுவதற்கான கால அவகாசத்தை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தை அணுகி அவர்கள் ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சந்திக்க தயாரா? : மாணவர்களுக்கு விஜய் கொடுத்த ஸ்பெஷல் அப்டேட்!
அக்சய்குமாருக்கு எதிராக வழக்கு!