ஏழை, எளிய மக்களின் நோயை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து தரமான சிகிச்சை அளிப்பதே அரசின் நோக்கம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுகாதார மாநாட்டினை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கி வைத்தார்.
மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “கல்வியும், மருத்துவமும் அரசின் இரு கண்கள் என்று நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். அதில் மக்கள் நல்வாழ்வுத்துறை மகத்தான துறையாக செயல்பட்டு வருகிறது.
மருத்துவத்துறையைச் சேர்ந்த அனைத்து பணியாளர்களையும் மனதாரப் பாராட்டுகிறேன். இதன் தொடர்ச்சியாக உங்கள் பணிகளை மேலும் செம்மைப்படுத்தி மக்களுக்கு உதவக்கூடிய மாநாட்டை கூட்டியிருக்கிறீர்கள்.
ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்ட மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லூரியோடு இணைந்த மருத்துவமனைகள் ஆகியவற்றின் செயல்பாடுகளை சீரமைப்பதற்கான முதல் மாநாடாக இந்த மாநாடு இருக்கிறது என்பது மகிழ்ச்சி.
ஊரகப் பகுதிகளில் குக்கிராமத்தில் வசிக்கக்கூடிய ஏழை, எளிய மக்களின் நோயை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து அவர்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை உடனடியாக கிடைக்கவேண்டும் என்பதே அரசின் நோக்கம்.
கலைஞர் அவர்களால், ஏழை, எளிய மக்களுக்காக கண்ணொளி காப்போம் திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டம், வருமுன் காப்போம் திட்டம், கலைஞர் காப்பீட்டுத் திட்டம், 108 இலவச ஆம்புலன்ஸ் திட்டங்கள் கொண்டு வரப்பட்டு நாட்டின் முன்னோடி திட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த திட்டங்களை மற்ற மாநிலங்களும் பின்பற்றி வருகின்றன. ஏழை, எளிய மக்களுக்கு அவர்கள் வாழும் இடங்களிலேயே மருத்துவ சேவை வழங்கிடவேண்டும் என்பதற்காகதான் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தால் பயனடைந்தவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியை தொட இருக்கிறது.
சாலை விபத்தினால் ஏற்படும் இறப்பை குறைப்பதற்கு உயர் சிகிச்சை அளிக்க ரூ. 1 லட்சம் வழங்கப்படும்.
இன்னுயிர் காப்போம், நம்மைக் காக்க 48 திட்டம் 18-12-2023 முதல் செயல்படுத்தப்படுகிறது. கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படுகிறது.
நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறதா, மருந்து தட்டுப்பாடு இருக்கிறதா, மருத்துவமனைகளுக்கு என்ன தேவை என்பதை கண்டறிந்து குறைகளை களைய உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
கலை.ரா
திருமண வாழ்க்கை: வதந்திகளுக்கு சினேகாவின் போட்டோ பதிலடி!
முதல்வர் தொகுதி மருத்துவமனையில் பிரியாவுக்கு நடந்தது என்ன?