மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் கோரிய வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (மார்ச் 26) பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மதிமுக சார்பில், தங்களுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்கவேண்டும் என்ற அவசர மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று பிற்பகல் 2.15 மணிக்கு நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நடைபெற்று வருகிறது. அதன்படி, திமுக கூட்டணியில் உள்ள மதிமுகவிற்கு தேர்தலில் போட்டியிட திருச்சி தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
அந்த தொகுதியில் துரை வைகோ போட்டியிட உள்ள நிலையில், நேற்று அவர் வேட்புமனுத் தாக்கல் செய்தார். ஆனால், மதிமுகவிற்கான சின்னம் தற்போது வரை தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்படவில்லை.
எனவே, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கட்சிக்கு பம்பரம் சின்னம்கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த வழக்கை மார்ச் 7ஆம் தேதி விசாரித்த நீதிபதிகள், இன்னும் 2 வாரத்திற்குள் மதிமுக கட்சிக்கு பம்பரம் சின்னம் ஒதுக்குவது தொடர்பாக உரிய முடிவு எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.
ஆனால், இதுவரை மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்கப்படவில்லை.
இதைத் தொடர்ந்து, மதிமுகவிற்கு பம்பரம் சின்னம்கோரி நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று காலை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில், இதுகுறித்து தேர்தல் ஆணையம் தரப்பில், “சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி 2 தொகுதிக்கு மேல் போட்டியிடும் பட்சத்தில் ஒரே சின்னம் ஒதுக்கப்படும். இருந்தும், மதிமுகவின் இந்த கோரிக்கையின் மீது இன்றைய தினம் முடிவு எடுக்கப்படும்.
மேலும், 14 ஆண்டுகளுக்கு முன்னர் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட நிலையில், மதிமுகவிற்கு சின்னம் ஒதுக்குவது தொடர்பாக சம்மந்தப்பட்ட தொகுதியின் தேர்தல் அதிகாரி தான் முடிவு எடுப்பார்.
எனவே, மதிமுக கட்சி பம்பரம் சின்னம்தான் வேண்டும் என நிர்பந்திக்க முடியாது” எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பம்பரம் சின்னம் பொதுச்சின்ன பட்டியலில் உள்ளதா என பிற்பகல் 2.15 மணிக்குள் விளக்கமளிக்க தேர்தல் ஆணையத்திற்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.
தேர்தல் ஆணையம் சொல்லியிருக்கும் பதிலை வைத்துப் பார்த்தால், மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கப்படுவது கடினம்தான் என்றே தெரிகிறது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரதமர் இல்லம் நோக்கி பேரணி… ஆம் ஆத்மி கட்சியினருக்கு அனுமதி மறுப்பு!
“இனி பாஜக ஆட்சி அமைந்தால் இளைஞர்களுக்கு திருமணம் கூட நடக்காது” : அகிலேஷ் யாதவ