17 வயதான இளம் விளையாட்டு வீராங்கனை பிரியா, காலில் வலி என்று மருத்துவமனைக்குச் சென்று தற்போது உயிரிழந்திருக்கிறார்.
தன்னம்பிக்கையுடன் மீண்டு வந்து விளையாடுவேன் என்று சொன்ன அந்த இளம் வீராங்கனையின் உயிர் தற்போது இல்லை.
அவரின் பல உறுப்புகள் செயலிழந்திருந்தது தான் உயிரிழப்பிற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

என்ன நடந்தது பிரியாவிற்கு? எதற்காக மருத்துவ சிகிச்சைக்கு வந்தார்? சிகிச்சை எப்படி நடந்தது? என்ற பல்வேறு கேள்விகள் அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.
அக்டோபர் 26 ஆம் தேதி கால் வலி என்று தன் வீட்டின் அருகிலுள்ள சென்னை கொளத்தூரில் இருக்கும் பெரியார் நகர் மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார் பிரியா. அங்கு அவருடைய காலில் உள்ள முழங்கால் மூட்டு சவ்வு கிழிந்திருப்பதாகவும் , அதற்கு அறுவை சிகிச்சை செய்தால் போதுமானது என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.
அதன் பின்னர் பிரியா தன் பெற்றோர்களுடன் , மீண்டும் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு சென்று அங்கும் சிகிச்சைப் பற்றி கேட்டிருக்கிறார்.
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையிலும் பிரியாவிற்கு முழங்கால் மூட்டி சவ்வு கிழிந்திருக்கிறது என்றும் , நீங்கள் உங்கள் வீட்டிற்கு அருகே இருக்கும் பெரியார் நகர் மருத்துவமனையிலேயே சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 7 ஆம் தேதி முதல்கட்டமாக பிரியாவிற்கு அறுவை சிகிச்சை பெரியார் மருத்துவமனையில் செய்யப்பட்டிருக்கிறது. அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அன்று மாலையே பிரியாவிற்கு கால் வலி அதிகரித்திருப்பதாக சொல்லியிருக்கிறார்.
மருத்துவர்கள் உடனடியாக அதிக இறுக்கமான பேண்டேஜை அவர் காலில் கட்டி மருந்து கொடுத்திருக்கிறார்கள்.
வலி நிற்காமல் தொடர்ந்து இருந்து வரவே , பிரியாவை மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு மாற்றியிருக்கிறார்கள்.
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பலகட்ட மருத்துவ பரிசோதனைக்கு பிறகு , பிரியாவின் காலின் கீழ்பகுதியில் இரத்த ஓட்டம் தடைபட்டு உறைந்திருப்பதால் திசுக்கள் செயலற்று இருந்திருக்கிறது.

பல மணி நேரம் இந்த நிலை தொடர்ந்திருப்பதால் வலது காலில் உள்ள திசுக்கள் இறந்து விட்டதாகவும், மூட்டுக்கு கீழ் பகுதியை அகற்றினால் மட்டுமே பிரியா உயிர் வாழ வாய்ப்பிருக்கிறது என்றும் மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.
அதன் பின்னர் மருத்துவரின் பரிந்துரையின் படியே நவம்பர் 9 ஆம் தேதி பிரியாவின் வலது கால் மூட்டுப்பகுதியின் கீழ்பகுதி அகற்றப்பட்டிருக்கிறது.
கால் அகற்றப்பட்ட பின்பும் பெரிதாய் மாற்றமில்லாமல் தொடர்ந்து வலியால் கஷ்டப்பட்டிருக்கிறார். தொடர்ந்து விடாத கால்வலியால் , வீராங்கனை பிரியாவிற்கு மீண்டும் இரண்டாவது முறையாக நவம்பர் 14 ஆம் தேதியான நேற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது.
அறுவை சிகிச்சைக்கு பின்னர், தொடர்ந்து மருத்துவர்களின் பார்வையில் வெண்டிலேட்டர் உதவியோடு கண்காணிக்கப்பட்டு வந்தார் பிரியா. அவருடைய கால் திசுக்கள் இறந்ததால், அடுத்து அவருடைய மற்ற உறுப்புகளும் திசுக்களும் இறந்து உறுப்பு செயலிழப்பு நடந்திடக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு தான் மீண்டும் அறுவை சிகிச்சை செய்து காலின் கீழ் பகுதியை அகற்றியிருக்கிறார்கள் என்கிறார்கள்.
இதன் பின்னர் தான் இன்று காலை 7.15 மணிக்கு சிகிச்சை பலனின்றி பிரியா உயிரிழந்துள்ளதாக மருத்துவமனையில் இருந்து அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது.
பிரியா நல்லதொரு வீராங்கனை. சிகிச்சை முடிந்து விரைவில் திரும்பி வந்து விடுவேன் என அவர் கடைசியாக வாட்சப் ஸ்டேடஸில் வைத்திருப்பதை பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.

மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களிடம் பேசும் போது,
”ஏற்கனவே பெரியார் நகரில் சிகிச்சை அளித்த இரண்டு மருத்துவர்களின் அலட்சியப்போக்கால் பணியிட மாற்றம் செய்திருந்தோம். தற்போது அந்த இரண்டு மருத்துவர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அது மட்டுமல்லாது இது தொடர்பாக, உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் சொல்லியிருக்கிறார்.
சிங்கப்பெண் பிரியாவை சிகிச்சை கொடுப்பதாக கொலை செய்து விட்டார்கள் என்று ராஜீவ் காந்தி மருத்துவமனை வாசலில் அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பிரியாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
–பவித்ரா பாலசுப்பிரமணியன்
நடிகர் கிருஷ்ணா மறைவு: மகேஷ்பாபுவுக்கு ஆறுதல் கூறிய முதல்வர்!
”கட்டாய மதமாற்றம் நாட்டுக்கு அச்சுறுத்தல்!” – உச்சநீதிமன்றம்