கர்நாடகாவில் முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் பேரனும், ஹசன் தொகுதி வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணாவை மையமாக வைத்து ஆபாச புயல் வீசி வருகிறது. இதுபற்றி விசாரிக்க விசாரிக்க பல திடுக்கிடும் அதிர்ச்சிகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.
கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி ஹசன் உள்ளிட்ட தொகுதிகள் மக்களவைத் தேர்தலை சந்தித்தன. தேர்தலுக்கு மூன்று நாள் முன்பிருந்தே… எம்பி பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களோடு இருக்கும் ஆயிரக்கணக்கான செக்ஸ் வீடியோக்கள் ஹசன் பகுதியில் சமூக தளங்களில் வெளியாயின.
இதைக் கண்டு அதிர்ந்துபோன பிரஜ்வல் ரேவண்ணாவின் தேர்தல் ஏஜெண்ட், ‘எங்களது வேட்பாளரை மையப்படுத்தி மார்ஃபிங் செய்யப்பட்ட வீடியோக்கள் பரவ விடப்பட்டுள்ளன’ என்று போலீசில் புகார் அளித்தார்.
ஆனால், இந்த வீடியோக்கள் பரவிய நிலையில், ஏற்கனவே பிரஜ்வல் வீட்டில் வேலை பார்த்த ஒரு பெண் கொடுத்த புகாரில் இப்போது பிரஜ்வல் ரேவண்ணா மீதே பெண் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தேர்தல் முடிந்த அடுத்த நாள் 27 ஆம் தேதி காலை பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு பறந்துவிட்டார்.
இப்போது இந்த ஆபாச வீடியோக்கள் பற்றி விசாரிக்க கர்நாடக காங்கிரஸ் அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.
கர்நாடகா முழுதும் காங்கிரஸ் கட்சி சார்பிலும் பல பெண்கள் அமைப்பு சார்பிலும் பிரஜ்வல் ரேவண்ணாவை கண்டித்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த சர்ச்சையால் மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சியும், அதனோடு கூட்டணி வைத்துள்ள பாஜகவும் கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ளன.
வரும் மே 7 ஆம் தேதி கர்நாடகாவில் 14 தொகுதிகளில் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த விவகாரம் கர்நாடகா மட்டுமல்ல நாடு முழுதும் பாஜகவுக்கு எதிரான பிரம்மாஸ்திரமாக புறப்பட்டுள்ளது.
மோடி மௌனம் ஏன்? விளாசிய பிரியங்கா
இதற்கிடையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இந்த விவகாரத்தை கையிலெடுத்துள்ளார்.
“இந்துப் பெண்களின் தாலி பற்றி பேசிய பிரதமர் மோடி அவர்களே… சில நாட்களுக்கு முன் நீங்கள் யாருக்காக வாக்கு சேகரித்தீர்களோ அவர்தான் ஆயிரக்கணக்கான பெண்களின் வாழ்க்கையில் விளையாடியுள்ளார். இதுபற்றி ஏன் மௌனம் காக்கிறீர்கள்? இந்த பெண்களின் நிலை பற்றி பேச முடியாத உங்களுக்கு, பெண்களின் தாலி பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?” என்று கிழித்தெடுத்திருக்கிறார் பிரியங்கா.
கர்நாடகாவின் உள் அரசியல் வட்டாரங்களில் விசாரித்தபோது மதச்சார்பற்ற ஜனதா தளத்தோடு பாஜக கூட்டணி அமைத்ததை விரும்பாத, பாஜகவினர் சிலர்தான் இந்த வீடியோக்களை வெளியே விட்டிருக்கிறார்கள் என்றும் இதற்கு தேவ கவுடா குடும்பத்திலேயே சிலர் ஆதரவாக இருந்திருப்பதும் தெரியவந்திருக்கிறது.
யார் இந்த பிரஜ்வல்?
33 வயதே ஆன பிரஜ்வல் இப்போதைய ஹசன் தொகுதி எம்பி.யாக இருக்கிறார். முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் மூத்த மகனும் ஹோலேநரசிபூர் தொகுதி எம்எல்ஏவுமான ரேவண்ணாவின் மகன் தான் பிரஜ்வல்.
ராஜா வீட்டு காளைக் கன்றுக்குட்டியான பிரஜ்வால் 2014 இல் இருந்தே தனது தாத்தா தேவ கவுடாவுக்காக அரசியல் பணிகளில் இறங்கினார். பெங்களூருவில் படித்துவிட்டு ஆஸ்திரேலியாவில் உயர் கல்வி பயிலப் போன அவர் பாதியில் படிப்பை முடித்துவிட்டு அரசியலில் இறங்கினார்.
தான் 1991, 1998, 2004, 2009, 2014 ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்ற ஹசன் மக்களவைத் தொகுதியை தனது பேரன் பிரஜ்வலுக்காக 2019இல் விட்டுக் கொடுத்தார் தேவ கவுடா.
வீடியோ விவகாரம் புதிதல்ல…
பிரஜ்வல் பற்றிய ஆபாச வீடியோக்கள் இன்று தேசம் முழுதும் பேசுபொருளானாலும், கர்நாடகாவில் இதுபற்றி விவாதம் முதன் முறையாக 2023 ஜூன் மாதத்திலேயே வெளி வந்திருக்கிறது.
அப்போது, பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் எம்பி. பிரஜ்வல் சார்பில் ஊடகங்கள் மற்றும் மூன்று தனியார் நபர்களுக்கு எதிராக ஒரு வழக்குத் தொடுக்கப்பட்டது.
அந்த வழக்கில், “மேற்குறிப்பிட்டவர்களால் பிரஜ்வலுக்கு எதிராக போலிச் செய்திகள், மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள், வீடியோ ஒளிபரப்புதல், வெளியிடுதல் மற்றும் பரப்புதல் போன்ற அச்சுறுத்தல் உள்ளது” என்று அதற்குத் தடை கேட்டது பிரஜ்வல் தரப்பு. ஜூன் 2, 2023 பிரஜ்வல் பற்றிய அவதூறுகளை வெளியிட தடை விதித்தது நீதிமன்றம்.
இந்த வழக்கில் பிரஜ்வல் ஊடகங்களைத் தவிர மூன்று தனி நபர்களையும் குறிப்பிட்டிருந்தார். அந்த 3 பேரில் ஒருவர் பிரஜ்வல் வீட்டில் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக டிரைவராக பணியாற்றி, 2023 மார்ச் மாதம் வெளியேற்றப்பட்டவரான கார்த்திக்.
அனைத்து ரகசியங்களும் அறிந்த டிரைவர்
பிரஜ்வல் ரேவண்ணாவின் குடும்பத்தில் ஒருவராக அறியப்பட்டவர் கார்த்திக். அவர் பிரஜ்வல் ரேவண்ணா மீதும், அவரது தாயார் பவானி மீதும் கடுமையான புகார்களை கூறினார்.
‘நரசிபுரா பகுதியில் இருக்கும் எனக்குச் சொந்தமான 13 ஏக்கர் நிலத்தை என்னையும் என் மனைவியையும் கடத்திச் சென்று அடைத்து வைத்து மிரட்டி தங்களுக்குச் சொந்தமாக பிரஜ்வலும் அவரது தாயாரும் மாற்றிக் கொண்டனர். எனக்கும் என் குடும்பத்துக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள்” என்று போலீசிலும் புகார் கொடுத்தார் கார்த்திக்.
அந்த டிரைவர் கார்த்திக் தான் இப்போது இந்த ஆபாச வீடியோக்கள் வெளியீட்டுக்கு பின்னால் இருப்பார் என்று கருதுகிறது பிரஜ்வல் தரப்பு.
ஏனென்றால் பிரஜ்வல் கல்லூரி காலம் தொட்டே அவருக்கு நெருக்கமானவர் கார்த்திக். தாத்தா பிரதமராக இருந்தவர், சித்தப்பா கர்நாடக முதலமைச்சர், அப்பா எம்.எல்.ஏ. என்று அதிகாரம் குவிந்த குடும்பத்தில் பிறந்த பிரஜ்வல் அதற்கேற்ப எல்லா ஆட்டங்களையும் ஆடினார். அவரது எல்லா விஷயங்களையும் அறிந்தவர்தான் டிரைவர் கார்த்திக்.
பல ரகசியங்கள் அறிந்த டிரைவர் கார்த்திக் நில பிரச்சினையால் ரேவண்ணா குடும்பத்தின் மீது ஹசன் காவல்துறையில் புகார் அளித்தார். ஆனால் தேவகவுடா குடும்ப செல்வாக்கு காரணமாக பாஜக ஆட்சியில் கூட போலீஸ் நடவடிக்கை ஏதும் இல்லை. இந்த பின்னணியில்தான் 2023 ஜூன் மாதம் தன்னைப் பற்றிய ஆபாச படங்களை கார்த்திக் வெளியிடுவார் என்று தடை கேட்டு நீதிமன்றத்தை நாடினார் பிரஜ்வல் ரேவண்ணா.
டிரைவர் மூலம் பாஜகவுக்கு வந்த ஆபாச படங்கள்!
இந்த நிலையில்தான் கடந்த பல ஆண்டுகளாக மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு எதிராக ஹசன் மாவட்டத்தில் கடுமையாக கள அரசியல் செய்து வந்த லோக்கல் பாஜகவுக்கு இந்த மேட்டர் பெரும் சாதகமாக இருந்தது.
கடந்த 2023 சட்டமன்றத் தேர்தலில் ஹோலே நரசிபுரா தொகுதியில் ரேவண்ணாவை எதிர்த்து போட்டியிட்டுத் தோற்ற வழக்கறிஞரும் உள்ளூர் பாஜக தலைவருமான தேவராஜ கவுடா, ரேவண்ணா குடும்பத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட அந்த டிரைவர் கார்த்திக்கை அணுகினார். பிரஜ்வல் தொடர்பான ஆயிரக்கணக்கான ஆபாச படங்களை பென் டிரைவில் பாஜக பிரமுகர் தேவராஜ கவுடா வாங்கியிருக்கிறார்.
கடந்த சட்டமன்ற தேர்தல் தோல்விக்குப் பிறகு இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய தேவராஜ் கவுடா, ‘என்னை அழுக்கு மனிதன் என்று ரேவண்ணா சொல்கிறார். ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல் எவ்வளவு அழுக்கு மனிதன் என்று அவர் வாங்கி வைத்திருக்கிற ஸ்டே ஆர்டரில் இருந்தே தெரிகிறது. ஒருநாள் அந்த அழுக்கெல்லாம் வெளியே வந்து தேவ கவுடாவின் குடும்பமே நாற்றமெடுக்கும்” என்று கடுமையாக எச்சரித்தார் தேவராஜ கவுடா.
பாஜக -ஜேடியூ கூட்டணிக்குப் பிறகும் கூட அவர் ரேவண்ணா பற்றியும் பிரஜ்வல் பற்றியும் தொடர்ந்து விமரிசித்து வந்தார்.
இந்த பின்னணியில்தான்… பிரஜ்வலின் ஆபாச ஆட்டங்கள் அடங்கிய வீடியோக்களை அவரது முன்னாள் டிரைவர் கார்த்திக் மூலம் பெற்று… சரியாக ஹசன் தொகுதி தேர்தலுக்கு முன்பாக சமூக தளங்களில் வெளியிட்டிருக்கிறார்கள் என்று கர்நாடக அரசியல் வட்டாரங்களில் கூறுகிறார்கள்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் இதுகுறித்து தேவராஜ கவுடாவிடம் கேட்டபோது,
“ரேவண்ணாவின் மகனின் வீடியோக்கள் மற்றும் படங்கள் பற்றி அந்த டிரைவரிடம் இருந்து எனக்கு தெரியவந்தது. அவருக்கு எப்படி வீடியோக்கள் கிடைத்தன என்று எனக்குத் தெரியவில்லை,” என்று ஓப்பனாக கூறியிருக்கிறார்.
இதுமட்டுமல்ல… “பாதிக்கப்பட்ட பெண்களில் சிலரை மீடியாவின் முன் கொண்டுவர நினைத்தேன். ஆனால் அவர்களின் கண்ணியம் மற்றும் சுயமரியாதை சம்பந்தப்பட்டதால் அதைத் தவிர்த்துவிட்டோம். பெண்கள் மீதான மரியாதைக்காக, நான் வீடியோக்களை வெளியிடவில்லை. அது அவர்களின் வீடுகளில் பேரழிவை ஏற்படுத்தியிருக்கும். பெண்கள் தற்கொலை செய்து கொண்டால் யார் பொறுப்பு?
பாஜக -ஜேடியூ கூட்டணி அமைந்த பிறகு கூட பிரஜ்வாலுக்கு ஹசன் லோக்சபா டிக்கெட் வழங்க வேண்டாம் என்று மாநில பாஜக தலைவர் விஜயேந்திரருக்கு கடிதம் எழுதினேன்” என்று பேட்டியளித்துள்ளார் தேவராஜ் கவுடா.
குமாரசாமி- ரேவண்ணா மோதலும் ஒரு காரணம்!
தேவ கவுடாவின் குடும்பத்துக்குள் அதிகார மையங்கள் இருக்கின்றன. குறிப்பாக மூத்த மகன் ரேவண்ணாவுக்கும், அவரது தம்பியான முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கும் இடையே பனிப்போர் தொடர்ந்து நடந்து வருகிறது. குமாரசாமியின் முயற்சியைத் தோற்கடித்துதான் 2019 இல் தேவ கவுடாவின் எம்பி தொகுதியான ஹசன் தொகுதியை தனது மகன் பிரஜ்வலுக்கு வாங்கினார் ரேவண்ணா. இந்த நிலையில் ரேவண்ணா குடும்பத்தை அரசியலில் இருந்து அகற்ற இதை குமாரசாமியே ஊக்குவித்திருக்கலாம் என்றும் கர்நாடக அரசியலில் பேசப்படுகிறது.
இதை மேலும் வலுப்படுத்தும் விதமாக இந்த வீடியோ விவகாரம் பற்றி பேசிய மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி, “ உண்மை வெளிவரட்டும், யார் தவறு செய்தாலும், நாட்டின் சட்டப்படி அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டும். இதில் ஏன் குடும்பப் பெயரைக் கொண்டுவருகிறீர்கள்? சம்பந்தப்பட்ட தனி நபரைப் பற்றிப் பேசுங்கள், இது எங்கள் குடும்பப் பிரச்சினை அல்ல… இது ரேவண்ணாவின் குடும்ப பிரச்சினை. எங்களுக்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இரண்டு குடும்பங்களும் தனித்தனியாக வாழ்ந்து வருகிறோம்” என்று கூறியுள்ளார் குமாரசாமி.
நீக்கப்படும் ரேவண்ணா, பிரஜ்வல்?
இதற்கிடையே, “மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைக் காப்பாற்ற பிரஜ்வல் மற்றும் எச்.டி.ரேவண்ணாவை 24 மணி நேரத்தில் கட்சியில் இருந்து நீக்க வேண்டும்” என அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர் சமுருத்தி மஞ்சுநாத் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் மாநிலத் தலைவர் குமாரசாமிக்கும், அகில இந்திய தலைவர் தேவ கவுடாவுக்கும் எழுதிய கடிதத்தில்,
“பிரஜ்வல் ரேவண்ணாவு தொடர்பாக ஊடகங்களில் பரவும் வீடியோக்கள் கட்சி தொண்டர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரத்தில் கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமருமான ஹெச்.டி.தேவே கவுடா, மாநில தலைவர் எச்.டி.குமாரசாமி ஆகியோர் உரிய முடிவு எடுக்க வேண்டும்.
19 ஜேடி(எஸ்) எம்எல்ஏக்கள் முக்கியமா அல்லது ரேவண்ணா மற்றும் பிரஜ்வல் ரேவண்ணா முக்கியமா என்பது குறித்து அப்பா-மகன் இருவரும் இப்போது முடிவெடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இதன் மூலம் ஜேடியூ கட்சியில் இருந்து ரேவண்ணா, பிரஜ்வல் நீக்கப்படுவார் என்று தெரிகிறது.
இந்த ஆபாச புயலால் கர்நாடக அரசியலும், தேவ கவுடா குடும்பத்திலும் திருப்பங்கள் அதிகரிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேந்தன்
வெறுப்புப் பேச்சு : பதிலளிக்க அவகாசம் கோரிய நட்டா, கார்கே
Comments are closed.