தண்ணீர் பந்தல் வைப்பதிலும் கோஷ்டி மோதல்! எடப்பாடியிடம் போன பஞ்சாயத்து!

அரசியல்

கடலூரில் அதிமுக நிர்வாகிகள் இருவருக்கு இடையே ஏற்பட்ட தகராறு பஞ்சாயத்துக்காக எடப்பாடி வரை சென்றுள்ளது.

கடலூர் முதுநகரைச் சேர்ந்த அதிமுக பகுதி செயலாளரான கந்தன், முன்னாள் அமைச்சர் சம்பத் ஆதரவாளர்.

புது வண்டிப்பாளையத்தைச் சேர்ந்த அதிமுக மாநகராட்சி கவுன்சிலரான பரணிமுருகன், அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி மாநிலத் துணை செயலாளர் கார்த்தி ஆதரவாளர்.

ஏப்ரல் 28ஆம் தேதி மாலை கந்தனுக்கும் கார்த்திக் ஆதரவாளரான பரணிமுருகனுக்கும் இடையே மோதல்  ஏற்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

என்ன நடந்தது என கடலூர் அதிமுக வட்டாரத்தில் விசாரித்தோம்.

“சம்பத் அமைச்சராக இருந்த கடந்த 2011 – 2021 வரையிலான பத்தாண்டு அதிமுக ஆட்சியில் கடலூரில் கந்தன் கொடிட்டி பறந்தார். கடலூர் நகராட்சியில் 36வது வார்டில் கந்தன் ஒரு முறையும் அவரது மனைவி இருமுறையும் கவன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2022 இல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தேர்தலில் 34 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் கந்தன்.

கடலூரில் மாவட்ட அளவில் அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி அரசு வேலைகளை எடுத்து வந்தார். டாஸ்மாக் சரக்கு குடோனிலிருந்து கடைகளுக்கு சப்ளை செய்யும் டெண்டரையும் எடுத்து வந்தார்.

அதேசமயம் எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில துணை செயலாளர் கார்த்திக், முன்னாள் அமைச்சர் எம். சி. சம்பத்துக்கு அன்றும் இன்றும் எதிராகவே செயல்பட்டு வருகிறார்.

இந்தசூழலில் கோடை வெயில் காரணமாக தண்ணீர் பந்தல் திறப்பது பற்றி  மாசெவும்  முன்னாள் அமைச்சருமான சம்பத் ஆலோசனை செய்தார். அவருக்கு எதிராக,  போட்டி தண்ணீர் பந்தல் திறக்க காவல்துறையில் கார்த்திக் அனுமதி கேட்டார். இதனால் இரு தரப்பினருக்கும் மறைமுகமாக மோதல் நடைபெற்று வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் தான் கார்த்திக் ஆதரவாளரான கடலூர் அதிமுக கவுன்சிலர் பரணிமுருகன், தனது குடும்பத்தினருடன் ஓரமாக சிவானந்தபுரம் பகுதியில் காரை நிறுத்தியிருந்தார்.  அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த கந்தன்,  நின்றிருந்த பரணிமுருகன் கார் மீது மோதி கீழே விழுந்தார்.

அப்போது கவுன்சிலர் பரணிமுருகனைப் பார்த்து தகாத வார்த்தைகளால் பேசி தாக்கினார் கந்தன்.  அவர் பேசிய வார்த்தைகள் பரணிமுருகன் மனைவியை அவமானப்படுத்தியதுப்போல் இருந்துள்ளது.

எம்ஜிஆர் இளைஞரணி மாநில துணை செயலாளர் கார்த்திக் ஆதரவாளர் பரணிமுருகன் என்பதால் அவரது ஆலோசனை படி கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் கந்தன் மீது புகார் கொடுக்கப்பட்டது.

பரணிமுருகன் கார் மீது கந்தன் ஸ்கூட்டி மோதி விழுவதும், எழுந்து அசிங்கமாக பேசி அடிக்கும் வீடியோவும் காவல்துறை கையில் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் கந்தன் மீதுள்ள பழைய விவகாரங்களையும் தூசு தட்டுகிறது போலீஸ்.  2017-ல் நகராட்சி பொறுப்பு ஆணையராக இருந்த ஜெயபிரகாஷ் நாராயணன் காலை நடைபயிற்சி சென்ற போது கந்தன் ஆட்களால் தாக்கப்பட்டார்.

அப்போது கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு மேல் நடவடிக்கை இல்லாமல் முடக்கப்பட்டிருந்த வழக்கையும், தற்போது தூசி தட்டி வருகிறது காவல் துறை.

இதற்கிடையே தனது ஆதரவாளரான கந்தன் மீது அதிமுக நிர்வாகிகளே  புகார் கொடுத்திருப்பது பற்றி எடப்பாடி கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளார் எம்.சி. சம்பத். இந்த விவகாரம் தொடர்பாகவும் தேர்தல் விவகாரம் தொடர்பாகவும் எடப்பாடி பழனிசாமியை நேற்று ஏப்ரல் 29 ஆம் தேதி சந்திக்க  கடலூர் மாநகர மாவட்ட சம்பத் ஆதரவாளர்கள் கே. என். தங்கமணி, சேவல் குமார், பாலகிருஷ்ணன், ஆர்.வி.ஆர். ஆறுமுகம் ஆகியோர் சென்றுகொண்டிருந்தனர்.

ஆனால்  அவர்கள் ஆத்தூர் அருகே சென்றுகொண்டிருந்தபோது வீடியோ காலில் வந்த எடப்பாடி ஒரு வாரம் கழித்து பேசிக் கொள்ளலாம் என்று சொல்லியனுப்பிவிட்டார்.

இதற்கிடையே எம்.சி. சம்பத் ஆதரவாளரான  கந்தனை கைது செய்ய காவல்துறை ரெடியாகிவிட்டது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-வணங்காமுடி

நான் இன்னொரு புதினா? – சரத்பவாருக்கு மோடி பதில்!

புத்தகங்களை பரிசளிக்க ஆசிரியர்கள் கை ஓங்குவது எப்போது?

+1
0
+1
0
+1
0
+1
4
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *