நா. மணி
மேனாள் நீதிபதி சந்துரு, வழக்கறிஞராக இருக்கும் போது பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் வழக்கறிஞராக இருந்து ஏராளமான வழக்குகளை கையாண்டார்.
தனியார் கல்லூரி ஒழுங்காற்று சட்டத்தையும் நூலாக தொகுத்து கொடுத்தார். அவர் நீதிபதியாக இருக்கும் போது பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், 2006ஆம் ஆண்டில் பவள விழா கண்டது. அந்த விழாவில் சிறப்பு சொற்பொழிவும் நீதிபதி சந்துரு அவர்களே. அவருக்கு, நினைவுப் பரிசாக மிகப் பெரிய கேடயம் வழங்கப்பட்டது.
அப்போது முதலமைச்சராக இருந்த, கலைஞர் கருணாநிதி ஓர் உத்தரவு பிறப்பித்து இருந்தார். “அரசு விழாக்களில் பொன்னாடை போர்த்துதல், கேடயம் வழங்குதல் மாலை அணிவித்து மரியாதை செய்தல் தவிர்க்கப்பட்டு, அதற்கு பதிலாக, புத்தகங்கள் நினைவு பரிசாக வழங்கப்பட வேண்டும்” என்பதே அந்த உத்தரவு.
நீதிபதி சந்துரு பேசும் போது இந்த நினைவுப் பரிசு தொடர்பாக ஒரு முக்கிய விசயத்தை சுட்டிக் காட்டினார்.
அரசு விழாக்களில் நினைவு பரிசாக புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற உத்தரவை குறுகிய பொருளில் எடுத்துக் கொள்ளக் கூடாது. அதனை அனைத்து விழாக்களிலும் பின்பற்றலாம். இப்போது நான் நீதிபதியாக இருக்கிறேன். பெரிய கேடயம் கொடுத்து உள்ளீர்கள். நீதிபதிகள் குடியிருப்பு இருக்கிறது. அங்கு எடுத்துக் கொண்டு சென்று வைத்துக் கொள்ளலாம். அதற்கும் கூட ஓர் வரம்பு இருக்கிறது.
அழைக்கப்படும் இடத்தில் எல்லாம் இத்தகைய நினைவு பரிசுகள் அங்கும் எடுத்துச் சென்று வைக்க இயலாது. கடைசியாக பணி நிறைவு பெற்று சொந்த வீட்டிற்கு சென்றால் இவற்றை எங்கே வைப்பது? குப்பையில் தான் போட வேண்டும். எனவே இத்தகைய நினைவுப் பரிசு வழங்கல், பொன்னாடை போர்த்தி கௌரவம் செய்தல் ஆகியவற்றை தவிர்த்து விட்டு புத்தகம் நினைவுப் பரிசாக வழங்கலாம் என்ற ஆலோசனையை முன்வைத்தார்.
இந்த நிகழ்வு நடந்தது 2006 ஆம் ஆண்டு. இப்போது சற்றேறக்குறைய இருபது ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த பத்து ஆண்டுகளில் அந்த சங்கத்திலும் மாற்றம் ஏற்பட்டது போல் தெரியவில்லை.
பேராசிரியர்களோ ஆசிரியர்களோ தங்கள் சொந்த வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் நடந்தது போல் தெரியவில்லை. குறைந்த பட்சம் சங்கக் கூட்டங்களில் இந்த மாற்றங்கள் நடைமுறை ஆனது போல் தெரியவில்லை. ஒரு சால்வையை எடுத்து வந்து, “இது பொன்னாடை” என்று போர்த்துவதும், துண்டை எடுத்து வந்து இது “பயனாடை” என்று கூறி மகிழ்ந்து போர்த்துவதுமே தொடர்கிறது.
இன்று பொதுவாக ‘சால்வை’ என்று நாம் அழைக்கும், அந்த ஆடையின் உண்மையான பயன் என்ன? போர்த்திக் கொள்ளவோ, தலையை உலர்த்திக் கொள்ளவோ பயன்படுகிறதா? அதிகபட்ச பயன்பாடு என்பது அதனை உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் அல்லது நிறுவனத்திற்கு பொருளாதார ரீதியாக பயனுள்ளதாக இருக்கலாம்.
பொன்னாடையாக போர்த்தியது. தூக்கி எறியவும் மனசு வராது. தூக்கி எறியவும் முடியாது. இடத்தை அடைத்துக் கொண்டு கொண்டு கிடக்கும். ஒருவேளை அடுத்தவர்களுக்கு கொடுப்பதாக வைத்துக் கொள்வோம். அதனால் பயனென்ன? அவற்றை ஒன்று சேர்த்து வைத்துக் கொள்ளலாம். தூக்கி எறியவோ மனசு வராது. கொஞ்சம் நாட்கள் அப்படியே வைத்துக் கொண்டு இருக்கலாம். பொன்னாடை போர்த்தி கௌரவம் செய்வதில் இவ்வளவு சங்கடங்கள் இருக்கிறது.
நினைவு பரிசாக கேடயங்கள் வழங்குவதையும் எடுத்துக் கொள்வோம். சிறியதோ பெரியதோ அவற்றை என்ன செய்வது? எப்படி பாதுகாப்பது? வீட்டில் ஷோகேஷில் வைத்துக் கொள்வதாக இருந்தால் எத்தனை பெரிய ஷோகேஷ் தேவைப்படும்? பழைய பொருட்கள் வாங்குபவர்கள் கூட இந்த நினைவு பரிசுகளை வாங்குவதில்லை. வீட்டில் இடப்பற்றாக்குறை என்று கருதுவோர், நன்றாக கட்டி அலமாரிகளில் எடுத்து வைக்கலாம். அல்லது குப்பைக்கு அனுப்பி வைக்கலாம். இதிலும் நினைவுப் பரிசு தயார் செய்யும் கம்பெனிகள் தவிர வேறு எப்படி நினைவு பரிசுகளை காப்பாற்றி வீட்டில் வைத்துக் கொள்வது?
சீர்திருத்த இயக்கங்கள், திராவிட இயக்கம், முற்போக்கு இயக்கங்கள் முன்னிருத்தி வரும் புத்தகங்களை நினைவுப் பரிசாக முன்வைத்த மாற்றுக் கலாச்சாரம் தமிழ் நாட்டில் ஏன் தடம் பதிக்க முடியவில்லை. கலைஞர் கருணாநிதி உட்பட பலர் உருவாக்கிய சமூகத்தில் பரவவில்லையே ஏன்? வாசிப்பு பழக்கம் பரவலாகவில்லை. வாசிப்பு பழக்கம் ஆசிரியர்கள் பேராசிரியர்கள் மத்தியில் கூட பெருமளவு இல்லை என்பது வருத்தத்திற்குரிய உண்மை. பொன்னாடை அல்லது சால்வை அணிவித்து, கௌரவம் என்ற சடங்கில், கணநேர மகிழ்ச்சி. அப்போது எடுக்கப்படும் புகைப்படத்திற்கு தரும் முக்கியத்துவத்தை புத்தகங்களுக்கு வழங்கவில்லை என்றே பொருள்.
புத்தகங்கள் நினைவு பரிசாக வழங்கப்பட்டால், படிக்கலாம். பிடித்திருந்தால் மீண்டும் மீண்டும் படிக்கலாம். அத்தகைய புத்தகம் வாசிக்கும் நண்பர்களுக்கு வாசிக்க கொடுக்கலாம். வாசிப்பு பழக்கம் உள்ளவர்கள் வீட்டிற்கு வந்தால் அவர்களுக்கு கொடுக்கலாம். அலமாரிகளில் வைத்து பாதுகாத்தல் சுலபம். வீட்டிற்கு வந்து பார்வை இடுபவர்களுக்கு பார்க்க கொஞ்சம் கௌரவமாக இருக்கும். பழைய புத்தகக் கடைக்கு சென்றால் மீண்டும் வாசிப்பு என்னும் மறு சுழற்சிக்கு செல்லும். எடைக்கு போட்டால் கூட காசு கிடைக்கும். இருந்தும் புத்தகப் பரிசளிப்பு நம்மில் தொற்றிக் கொள்ள மறுக்கிறது. இதற்கான காரணங்களை தேடிக் கண்டறிந்தே ஆக வேண்டும்.
‘பொன்னாடை போர்த்தி கௌரவம்’ என்பது சாதாரணமாக சாமான்ய மனிதர்களுக்கு கிடைக்காத மரியாதை. சாமான்ய மனிதர்களுக்கு தருணம் வரும் போது பொன்னாடை போர்த்தி திருப்தி அடைந்து கொள்கிறார்களா? புகைப்படங்கள் எடுத்து பாதுகாத்து தங்கள் அபிலாஷைகளை நிவர்த்தி செய்து கொள்கிறார்களா? கேடயம் பெறுவது பெரிய சாதனைகள் செய்வோருக்கு வழங்கப்படுகிறது. சாதனைக்குரிய செயல்களை செய்ய இயலாத மனிதர்களுக்கு ஏதேனும் சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொண்டு கேடயங்களை நினைவு பரிசுகளாக பெற்றுக் கொண்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொள்கிறார்களா?
எல்லாவற்றிலும் நமக்கு மேல் உள்ளவர்களை கண்மூடித்தனமாக பின்பற்றுவதும் அதுவே உயரிய கலாச்சாரம் அல்லது விருது என நினைத்து பின்பற்றுவதும் ஓர் கலாச்சாரம். அது நமது ஆழ்மனதில் பொதிந்து கிடக்கிறது. குறிப்பாக நமக்கு மேல் உள்ளவர்களை பின்பற்றும் ஒரு ‘கண்டு பாவனை குணம்’ இருக்கிறது. அது ஆட்டிப்படைக்கிறது. சந்தை பொருளாதாரத்தில் சந்தை விரிவாக்கம், சந்தை உருவாக்கம் ஆகியவற்றில் பெரும் பங்கு வகிக்கிறது. இவையெல்லாம் நம் ஐய்யப்பாடுகள். இன்னும் கூடுதலான உளவியல் கூறுகள் இருக்கலாம்.
சமீபத்தில் ஒரு பேராசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அவர் நல்ல வாசகர் என்று கல்லூரியில் எல்லோருக்கும் தெரியும். “நீங்கள் போர்த்தும் பொன்னாடைகள் இங்கேயே எங்கள் துறையில் பாதுகாப்பாக இருக்கும். இதில் ஒன்றைக் கூட நான் வீட்டிற்கு எடுத்துக் கொண்டு போகப் போவதில்லை. நீங்கள் புத்தகங்கள் வாங்கி பரிசளித்தால் என்னோடு அதனை வீட்டிற்கு எடுத்துச் செல்வேன். உங்கள் நினைவுகளாக போற்றி பாதுகாப்பேன்” அப்போதும் கூட விதிவிலக்காக ஓரிருவர் தவிர, புத்தகத்தோடு அவரை சந்திக்க வரவில்லை.
புத்தகக் கடைகளை மெனக்கெட்டு தேடிச் செல்ல வேண்டும் என்பது ஒரு காரணமாக இருக்கலாம். பொன்னாடை என்று கூறப்படும் துண்டு அல்லது சால்வை எங்கும் எளிதில் கிடைப்பதாக இருக்கலாம். எல்லாவற்றையும் தாண்டி வாசிப்பின் வறட்சி, புத்தகங்கள் மேல் நேசம் இன்மை, மரபார்ந்த அல்லது பொதுப்புத்தியை தாண்டிய சிந்தனைகள் ஆசிரியர்கள் பேராசிரியர்கள் மத்தியில் பெருவாரியாக சிறகடித்து பறக்காமையே காரணம். இவை எல்லாவற்றிலும் முன்னேற்றம் அடைவதே உண்மையான கல்வி வளர்ச்சியின் ஓர் அங்கம்.
கட்டுரையாளர் குறிப்பு:
நா.மணி, பேராசிரியர் மற்றும் தலைவர், பொருளாதாரத்துறை, கலை அறிவியல் கல்லூரி, ஈரோடு.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : சிக்கன் ரைஸ் பால்ஸ்
ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ பாஸ்: உயர் நீதிமன்றம் உத்தரவு!
டிஜிட்டல் திண்ணை: கொடைக்கானலில் ஸ்டாலின்… ஹாட் அமைச்சர்கள்!
ஊட்டிக்கு போகக் கூட பயமாதான் இருக்கு : அப்டேட் குமாரு