சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதனை எதிர்த்து கெஜ்ரிவால் தாக்கல் செய்த வழக்கில், தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக ஜூன் 1 வரை உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.
இந்தநிலையில், கெஜ்ரிவால் தாக்கல் செய்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது அமலாக்கத்துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூ ஆஜராகி, “டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சி மீது இன்று கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீங்கள் இந்த மனுவை ஆதரித்தால், அமலாக்கத்துறை விசாரணையில் இருக்கும் பலரும் இதனை சாதகமாக பயன்படுத்துவார்கள்.
அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்ததை உச்சநீதிமன்றம் ரத்து செய்யக்கூடாது. கெஜ்ரிவாலுக்கும் ஹவாலா ஆபரேட்டர்களுக்கும் நடந்த உரையாடல் ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது” என்ற வாதத்தை முன்வைத்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி சஞ்சீவ் தத்தா, “பிஎம்எல்ஏ சட்டப்பிரிவு 19-ன் கீழ் அமலாக்கத்துறை ஒரு நபரை கைது செய்தவற்கான நம்பத்தகுந்த காரணங்கள் இருக்க வேண்டும்.
ஆனால், விசாரணை அதிகாரி ஒருவரை சந்தேகப்படுவதற்கான காரணம் இருந்தாலே அவரை பிஎம்எல்ஏ சட்டத்தின் கீழ் கைது செய்யலாம் என்று நீங்கள் சொல்கிறீர்கள். இது சட்டத்தை மாற்றுவதாக இல்லையா?” என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனுசிங்வி, “மதுபான வழக்கில் கெஜ்ரிவால் ரூ.100 கோடி ஆதாயம் அடைந்ததாக 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து குற்றம்சாட்டி வரும் அமலாக்கத்துறை, ஏன் 2024-ல் அவரை கைது செய்தது? கெஜ்ரிவாலை கைது செய்ததற்கான ஆதாரத்தை கூட அவர்கள் தெரிவிக்கவில்லை” என்றார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “விசாரணை நீதிமன்றத்தை அணுகி கெஜ்ரிவால் ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம். மேலும், இந்த வழக்கில் ஒரு வாரத்திற்குள் அமலாக்கத்துறை மற்றும் கெஜ்ரிவால் தரப்பு ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
LCU: லோகேஷின் ஷார்ட் பிலிம்.. டைட்டில் இதுதான்!
அங்காளி, பங்காளி ரெடியா? – மதுரை முத்தையா கோவில் கிடா விருந்து எப்போது?