விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிட்டதால் ஸ்டார் தொகுதியாகியிருக்கிறது சிதம்பரம்.
தேர்தல் முடிந்த கையோடு, திமுக தலைவர் ஸ்டாலினையும், கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து நன்றி தெரிவித்துவிட்டு… நம்பிக்கையோடு கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா என்று தென்னிந்திய சுற்றுப் பயணம் சென்றுவிட்டார் திருமாவளவன்.
சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக திருமாவளவன், அதிமுக சார்பாக சந்திரகாசன், தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக சார்பாக கார்த்தியாயினி ஆகியோர் போட்டியிட்டார்கள்.
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் பெரம்பலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட குன்னம் சட்டமன்றத் தொகுதி, அரியலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட அரியலூர், ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதிகள், கடலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி என ஆறு சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன.
தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கைக்காக காத்திருக்கும் நிலையில், ஒவ்வொரு தரப்பிலும் என்ன கணக்கு, என்ன கணிப்பு வைத்திருக்கிறார்கள்?
ஒவ்வொரு தரப்பாக பார்க்கலாம்,..
திமுக கூட்டணியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனுக்காக பிரச்சாரம் செய்ய வந்தார் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின். அப்போது அவர், ‘ஒரு சிறுத்தைக்காக இரண்டு சிங்கங்களை நாங்கள் களமிறக்கியிருக்கிறோம்’ என்று பொதுக்கூட்டத்திலேயே பேசினார்.
அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர் ஆகியோர்தான் ஸ்டாலின் குறிப்பிட்ட அந்த சிங்கங்கள். ஸ்டாலின் சொன்னபடியே உண்மையிலேயே இந்த இரு அமைச்சர்களும் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனுக்காக தீவிரமாக உழைத்திருக்கிறார்கள்.
அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் விசிக தலைவர் போட்டியிட்ட சிதம்பரம் தொகுதி, தான் பொறுப்பு அமைச்சராக இருக்கக்கூடிய சௌமியா அன்புமணி போட்டியிட்ட தர்மபுரி, விஷ்ணு பிரசாத் போட்டியிட்ட கடலூர் தொகுதி என மூன்று தொகுதி வேலைகளையும் சேர்த்துப் பார்த்தார்.
இதில் சிதம்பரத்தின் மீது தனி கவனம் செலுத்தினார். எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்தின் தந்தை எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி வன்னியர் மக்களின் தலைவராகவே அறியப்பட்டவர். அந்த வகையில் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வமும் வன்னியர் பகுதிகளில் ஊர் கூட்டம் போட்டு, திருமாவளவன் ஜெயிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துச் சொல்லியிருக்கிறார். அது பெருமளவு திமுக கூட்டணிக்கு பலன் கொடுத்திருக்கிறது.
அதேபோல அமைச்சர் சிவசங்கரும் தனது பகுதிகளில் வன்னியர்கள் மற்றும் தலித்துகளின் வாக்குகளை திருமாவளவனுக்கு கொண்டு சேர்ப்பதில் மிகத் தீவிரமாக ஈடுபட்டார். கடந்த 2019 தேர்தலை விட இந்தத் தேர்தலில் பெட்டர் ரிசல்ட்டை அவருக்கு கொடுக்கும் என்கிறார்கள் அப்பகுதி விசிகவினரே.
2019 ஆம் ஆண்டு தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் போட்டியிட்டபோது, வன்னியர்கள் அடர்த்தியாக வசிக்கும் பகுதிகளில் திருமா பிரச்சாரம் செய்ய சென்றபோதெல்லாம் மஞ்சள் பனியன் போட்ட இளைஞர்கள், ‘உள்ளே வராதே… உள்ளே வராதே…’ என்றெல்லாம் போராட்டம் நடத்தினார்கள். அதுபோன்ற பகுதிகளில் திருமாவளவனால் உள்ளே செல்லவே முடியவில்லை.
ஆனால், 2024 தேர்தலில் இந்த காட்சிகள் பெரிய அளவுக்கு இல்லை. ஓரிரு இடங்களில் திருமாவுக்கு எதிராக சிறு சலசலப்புகள் இருந்தாலும் கூட… வன்னியர்கள் அடர்த்தியாக வசிக்கும் பல இடங்களில் கடந்த தேர்தலைப் போல கசப்பு சம்பவங்கள் ஏதும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் திருமாவளவனுக்கு ஆரத்தி எடுத்த சம்பவங்கள் இம்முறை வன்னியர் பகுதிகளில் கூட அரங்கேறியிருக்கின்றன.
இதற்கு முக்கியமான காரணம் அமைச்சர்கள் இருவரது களப் பணிகள்தான். வன்னியர் சங்கத்தினர், பாமகவுக்கு எதிராக வன்னியர் அமைப்பினர் பலரும் சிதம்பரம் தேர்தல் களத்தில் திருமாவளவனுக்கு ஆதரவாக ஆழமாக பணியாற்றியிருக்கிறார்கள்.
அது மட்டுமல்ல… பாமக நிர்வாகிகளிடம் திமுக நிர்வாகிகள் ஒரு ரகசிய டீலிங் போட்டனர். ‘இந்தத் தொகுதியில் நீங்க நேரடியா நின்னீங்கன்னா கூட பரவாயில்லை. பிஜேபி நிக்குது. அதுவும் வேலூர்லேர்ந்து வந்து நிக்கறாங்க. நாளைக்கு தேர்தல் முடிஞ்ச பின்னாடி, உங்கள் ஓட்டுகளே விழுந்திருந்தாலும் கூட. அதை பாஜகவின் ஓட்டுனுதான் அவங்க சொல்லுவாங்க. அதனால எந்த வகையிலும் உங்களுக்கு பயனில்லை’ என்று பாமக நிர்வாகிகளோடு திமுகவினர் பேச்சு நடத்தியதில் குறிப்பிட்ட பலன் கிடைத்திருக்கிறது என்கிறார்கள்.
புவனகிரி, காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் தொகுதிகளில் திமுக நிர்வாகிகளின் ஒத்துழைப்பு மிக கடுமையாக இருந்திருக்கிறது. பரங்கிப்பேட்டை திமுக ஒன்றிய செயலாளர் கடந்த முறை சரியாக ஒத்துழைக்கவில்லை என்று வருத்தங்கள் இருந்தன. ஆனால், இந்த முறை பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் திருமாவுக்கு ஆதரவாக முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுபோல் கடந்த தேவர்தலில் சுணக்கமான நிர்வாகிகள் எல்லாம் இந்தத் தேர்தலில் மிகவும் இணக்கமாகி வேகமாக உழைத்திருக்கிறார்கள்.
தவிர தொகுதியில் இருக்கும் 5% இஸ்லாமியர்களின் வாக்குகள் ஒன்று கூட சிந்தாமல் சிதறாமல் திருமாவளவனுக்கே விழுந்திருக்கின்றன என்கிறார்கள் திமுகவினர். வன்னியர்கள், தலித்கள் அல்லாத மற்ற சாதி இந்துக்களின் வாக்குகளையும் திருமாவுக்கே பெற்றுத் தந்திருக்கிறார்கள் திமுக அமைச்சர்கள்.
விசிக கட்சியினரும் திட்டமிட்டுத் தெளிவாக இந்தத் தேர்தலில் சிதம்பரத்தில் பணியாற்றியிருக்கிறார்கள். தேர்தலுக்கு சில நாட்கள் முன்பாக கட்சிப் பதவிகள் என்னவாக இருந்தாலும் தேர்தல் நாள் வரை எந்த பதவியும் கிடையாது. உங்கள் பூத்தில்தான் உங்களது வேலை அமைய வேண்டும் என்று சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்குள் இருக்கும் அத்தனை விசிக நிர்வாகிகளுக்கும் தெரிவித்து, அவரவர் பூத்களில் பணியாற்ற உத்தரவிட்டார் திருமா. இதுவும் விசிகவுக்கும் பெரிய அளவில் பலன் கொடுத்திருக்கிறது.
அதிமுக தரப்பின் நம்பிக்கை மற்றும் கணக்கு என்ன?
அதிமுக தரப்பில் திருமாவளவனுக்கு எதிராக தாராளமாக செலவு செய்யும் வேட்பாளரைத் தேடினார்கள். அப்படித் தேடி மாவட்டச் செயலாளர் அருண்மொழித் தேவன் செலக்ட் செய்த நபர்தான் சந்திரகாசன்.
அதற்கேற்றபடியே அதிமுக வேட்பாளர் சந்திரகாசன் ஆரம்ப கட்டம் முதல் பூத் கமிட்டிகள், தேர்தல் நாள் வரை நன்றாகவே செலவு செய்தார்.
மேலும், சிதம்பரம் தொகுதிக்கு சிதம்பரம் எம்.எல்.ஏ. பாண்டியன், புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழி தேவன் இருவருமே கடுமையாக இறங்கி வேலை செய்திருக்கிறார்கள்.
அதிமுகவுக்கே உரிய வன்னியர் சமுதாய வாக்குகள், தலித் வாக்குகளை குறிவைத்து முதலில் வேலை செய்த இவர்கள்…. அடுத்தத்து நேரடியாக பாமகவோடே டீல் செய்திருக்கிறார்கள்.
திமுகவும் சில பாமக நிர்வாகிகளை வளைத்தது. ஆனால், இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு பாமக செல்ல வேண்டும் என்று விரும்பிய பாமக நிர்வாகிகள் அதிகம். பாஜகவோடு கூட்டணி சென்றதால் அதிருப்தியில் இருந்த அவர்களை அதிமுகவின் நிர்வாகிகள் அணுகினார்கள்.’
‘நீங்க பாஜகவுக்கு ஓட்டுபோடறதால திருமாவளவனை தோற்கடிக்க முடியாது. அதிமுகவுக்கு போட்டால்தான் திருமா தோற்பார். அதனால எங்களுக்கு போடுங்க’ என்று சொல்லி அதற்கான விரிவான ஏற்பாடுகளையும் செய்தார்கள் அதிமுக மாசெக்கள். இந்த அணுகுமுறை வொர்க் அவுட் ஆனதாக சொல்கிறார்கள்.
அதாவது வெளிப்படையாக அதிமுக-பாமக கூட்டணி இல்லையென்றால் கூட சிதம்பரத்தில் அதிமுக -பாமக ரகசிய கூட்டணியாக செயல்பட்டிருக்கிறது. அதனால் தான் வன்னியர்கள் அடர்த்தியாக உள்ள, தலித்துகள் குறைவாக உள்ள ஜெயங்கொண்டத்தில் 81% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதில் எங்களுக்கே அதிகம் வரும் என கணக்கு சொல்கிறார்கள் அதிமுகவினர்.
பலே திட்டம் போட்ட ஆர்.எஸ்.எஸ்… படுத்துக்கொண்ட பாஜக
தமிழ்நாட்டில் குறிப்பிட்ட இரண்டு பேர் 2024 தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றுவிடக் கூடாது என கடந்த 3 வருடமாகவே ரகசிய ஆபரேஷனில் இறங்கியிருந்தது ஆர்.எஸ்.எஸ். அவர்கள் யாரென்று கேட்டால் ஆ.ராசா, திருமாவளவன்.
இந்த இருவரும் கட்சி அரசியல் என்பதைத் தாண்டி இந்தியா முழுதும் கொள்கை அரசியல் பேசுகிறார்கள் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்.சின் திட்டத்துக்குக் காரணம்.
இதற்காக சிதம்பரம் தொகுதியில் மூன்று வருடங்களாகவே கிராமம் கிராமமாக சென்று குறிப்பாக தலித் கிராமங்களில் சென்று திருமாவுக்கு எதிரான செயல் திட்டங்களில் இறங்கினார்கள். நந்தனார் விழா, சுவாமி சகஜானந்தா விழா என பரவலாக நடத்தி தலித்துகளை இந்து உணர்வுள்ளவர்களாக ஆக்கவேண்டும் என்று முயற்சித்தது ஆர்.எஸ்.எஸ்.
இதற்காக தலித் ஊராட்சித் தலைவர்கள் பலரை அணுகி அவர்களுக்கு பொருளாதார ரீதியான உதவிகளைச் செய்து அவர்கள் மூலமாக தலித் மக்கள் ஒருங்கிணைப்பை மேற்கொண்டனர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர்.
ஆடிட்டர் குருமூர்த்தியின் ஆலோசனை, கோடீஸ்வர தொழிலதிபரான சோகோ ஸ்ரீதர் வேம்புவின் பொருளாதாரம் என்று இந்த செயல் திட்டத்தை தீவிரமாக நடத்தி வந்தது ஆர்.எஸ்.எஸ்.
ஆனால்… இந்த ஆபரேஷனெல்லாம் ஒரு கட்டத்தில் அப்படியே பிசுபிசுத்துப் போனது. அதாவது பாஜகவோடு அதிமுக கூட்டணி இல்லை என்று அறிவித்தபோதே ஆர்.எஸ்.எஸ்.சின் இந்தத் திட்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக சோர்ந்துவிட்டன.
அதுவரை சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனுக்கு எதிராக மத்திய இணையமைச்சர் எல்.முருகனை நிறுத்தி அதிமுக கூட்டணியோடு வென்றுவிடலாம் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்.சின் கணிப்பு.
ஆனால், கூட்டணிக் கதைகள் மாறிவிட்டதால் காட்சிகள் மாறிவிட்டன. அதிமுக கூட்டணி இல்லை என்றதும் எல்.முருகனை நீலகிரிக்கு அனுப்பிவிட்டனர்.
இந்த பின்னணியில் தான் பாஜக-பாமக கூட்டணி அமைந்தவுடன், ‘சிதம்பரம் தொகுதியில் பாமகவை நிற்குமாறு பாஜக கேட்டது. ஆனால் அன்புமணி அதை ஏற்கவில்லை. சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவனுக்கு எதிராக பாமக வேட்பாளரை நிறுத்தினால் சமூக டென்ஷன் அதிகமாகும். அது பொது வெளியில் பாமகவுக்குத்தான் கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்று சொல்லி தவிர்த்துவிட்டார்.
அதன் பின்னர்தான் பாஜக வேட்பாளரையே தேட ஆரம்பித்தது. உள்ளூர் முக்கியப் புள்ளியான தடா பெரியசாமிக்கு இந்த முறை டிக்கெட் வேண்டாம் என்று பாஜக தலைமை முடிவு செய்தது. வேறு யாரும் லோக்கலில் இல்லை என்பதால் வேலூரில் இருந்து கார்த்தியாயினியை இறக்குமதி செய்தது.
இறக்குமதி வேட்பாளர் என்பதால் சிதம்பரம் தொகுதி பாஜகவினருக்கும் பெரிய ஆர்வம் இல்லை, பாமகவினருக்கும் பெரிய ஆர்வம் இல்லை. தடா பெரியசாமியும் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்துவிட்டார்.
எனவே பாஜக வேட்பாளர் டேக் ஆஃப் ஆகவே ரொம்ப சிரமப்பட்டார். பாமகவின் ஒத்துழைப்பு என்று பெரிதாக இல்லை.
நகரப் பகுதிகளில் ஆங்காங்கே தென்பட்டார் கார்த்தியாயினி. அதுவும் லோக்கல் பாமக, பாஜக நிர்வாகிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் கூகுள் மேப் துணையோடு சுற்றிச் சுற்றி வந்தார்.
கிராமப்புறங்கள் நிறைந்த சிதம்பரம் தொகுதியில் பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி பெரும்பாலும் கிராமங்களுக்கு போகவே இல்லை.
பாமகவின் இந்த ஒத்துழையாமை தேர்தல் நாள் அன்று வரை நீடித்தது.
தேர்தல் தினத்தன்று கிராமப்புறங்களில் குறிப்பாக தலித் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் வாக்குச் சாவடிகளில் பாஜக வேட்பாளருக்கு பூத்களில் யாரும் இல்லை. வன்னியர்கள் அடர்த்தியான பாமக செல்வாக்கு பெற்ற பகுதிகளில் கூட ஆங்காங்கேதான் பூத்களில் ஏஜெண்டுகள் இருந்தார்கள்.
எனவே வேலூரில் இருந்து போட்டியிட வந்தவர் மீண்டும் வேலூருக்கே அவநம்பிக்கையோடு திரும்பிச் சென்றார்.
ஓட்டுக்குப் பணம்!
களப் பணிகள் என்னதான் தீவிரமாக இருந்தாலும் கடைசி நேரத்தில்… அதிமுக வேட்பாளருக்காக அக்கட்சியினர் சில பகுதிகளில் ஓட்டுக்கு பணம் விநியோகம் செய்வது அமைச்சர்கள் எம்.ஆர்.கே, சிவசங்கர் கவனத்துக்கு சென்றது.
உடனே அவர்கள் வேட்பாளரும் விசிக தலைவருமான திருமாவளவனிடம் பேசினார்கள். அப்போது திருமா, ‘இங்கயும் சரி, விழுப்புரத்திலும் சரி ஓட்டுக்கு பணம் கொடுக்க வேண்டாம்’ என்று சொல்லியிருக்கிறார்.
இதுகுறித்து அமைச்சர்கள் திமுக தலைமை கவனத்துக்கு கொண்டு சென்றனர். ‘அதிமுக கொடுத்தால் நாமும் கொடுத்துதான் ஆக வேண்டும்’ என்று தலைமை க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டது.
இதையடுத்து பரவலாக ஓட்டுக்கு 200 ரூபாய் திமுக தரப்பில் கொடுக்கப்பட்டது. ஆனால், அதிமுக தரப்பில் 40-45% பகுதிகளில் மட்டுமே ஓட்டுக்கு 200 ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. திமுக தரப்பில் இது ஒரு குறையாக ஆகிவிடக் கூடாது என்பதற்காக கடைசி கட்டத்தில் தொகுதி முழுக்க 200 டெலிவரி செய்யப்பட்டது.
பெண்களின் ஓட்டு!
சாதி உணர்வு, மத உணர்வு, ஊர்க்கூட்டம் இதையெல்லாம் தாண்டி சிதம்பரம் தொகுதியில் பெண்களின் ஓட்டு திமுகவுக்கே அதிகம் விழுந்திருக்கிறது. வன்னியர் சமுதாய பெண்கள், தலித் சமுதாய பெண்கள் இந்த சமூக அல்லாத பிற சமுதாய பெண்கள் என அனைத்துப் பெண்களுமே பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கிய வாழ்க்கை முறையிலேயே உள்ளனர்.
இவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை, இலவச பஸ் பயணம் போன்றவை தங்களது சாதி, கட்சி உணர்வுகளைத் தாண்டி திமுக கூட்டணிக்காக ஓட்டுப் போட வைத்திருக்கிறது.
இது பெரும் விளைவை ஏற்படுத்தும் என்று நம்புகிறது திமுக. ஆக சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியின் விசிக வேட்பாளர் திருமாவளவன், கடந்த 2019 ஐ விட நல்ல வித்தியாசத்தில் வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறார்.
பாஜகவுக்கு அதிக வாக்குகள் கிடைத்தால் அது திருமாவளவனின் வெற்றி வித்தியாசத்தை அதிகரிக்கலாம். அதேநேரம் அதிமுகவுக்கும் பாமகவுக்கும்தான் இங்கே நிழல் கூட்டணி இயல்பாகவே அமைந்திருக்கிறது. எனவே பாஜக தனித்து விடப்பட்டிருக்கிறது.
வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…