ஒவ்வொரு வாரமும் தியேட்டர்களிலும் ஓடிடி தளங்களிலும் பல புதிய படங்களும் வெப் சீரிஸ்களும் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த வாரம் எந்தெந்த படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் வெளியாகிறது என்பதை பற்றி பார்க்கலாம்.
தியேட்டர் பட்டியல்:
சந்தானம் நடிப்பில் இயக்குநர் ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் வரும் மே 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் இங்க நான் தான் கிங்கு. இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக பிரியாலயா நடித்துள்ளார். நடிகர்கள் தம்பி ராமையா, பால சரவணன், விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி இமான் இசையமைத்துள்ள இந்த படம் வழக்கமான சந்தானம் ஸ்டைலில் முழு நீள நகைச்சுவை திரைப்படமாக உருவாகி இருக்கிறது.
உறியடி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனரும் நடிகருமான விஜயகுமார். ஃபைட் கிளப் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக இவர் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் எலக்சன். சேத்துமான் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் அவர்கள் எலக்சன் படத்தை இயக்கி இருக்கிறார். உள்ளாட்சி தேர்தலை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் வரும் மே 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இயக்குநர் செல்வம் மாதப்பன் இயக்கத்தில் நடிகர் பிரஜன் மற்றும் நடிகை யாஷிகா ஆனந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் படிக்காத பக்கங்கள். கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கைதி பட புகழ் ஜார்ஜ் மரியம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் மே 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓடிடி பட்டியல்:
ஹர ஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்த், இரண்டாம் குத்து, பொய்க்கால் குதிரை போன்ற திரைப்படங்களை இயக்கியவர் சந்தோஷ் பி ஜெயக்குமார். இவரது இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியான திரைப்படம் “தி பாய்ஸ்”. கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த திரைப்படம் கடந்த மே 14 ஆம் தேதி அஹா ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.
இயக்குநர் பி.வி.ஷங்கர் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான கள்வன் திரைப்படம் தற்போது மே 14 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
திட்டம் இரண்டு, அடியே போன்ற படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியான ஹாட் ஸ்பாட் திரைப்படம் தற்போது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வரும் மே 17ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் நடிகர்கள் கலையரசன், சாண்டி, அம்மு அபிராமி, ஜனனி, கௌரி கிஷன், ஆதித்யா பாஸ்கர், சுபாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
வெயில், அங்காடித்தெரு, அரவான், காவிய தலைவன் போன்ற திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் இயக்குநர் வசந்த பாலன். கடைசியாக இவரது இயக்கத்தில் வெளியான அநீதி திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபிஸில் ஓரளவு வசூலுடன் ஹிட் பட்டியலில் இணைந்தது.
அடுத்ததாக தற்போது வசந்த பாலன் இயக்கத்தில் தலைமைச் செயலகம் என்ற வெப் சீரிஸ் உருவாகிறது. பொலிட்டிகல் திரில்லர் கதை களத்தில் உருவாகி இருக்கும் இந்த வெப் சீரிஸில் நடிகர்கள் கிஷோர், பரத், ஸ்ரியா ரெட்டி, ரம்யா நம்பீசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தலைமைச் செயலகம் வெப் சீரிஸ் வரும் மே 17ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரம்மாண்ட இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி 1 & 2 திரைப்படங்கள் உலக சினிமா ரசிகர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து 2000 கோடிக்கு மேல் வசூல் செய்து மெகா பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்நிலையில் பாகுபலி கதையை அடிப்படையாகக் கொண்டு பாகுபலி : கிரவுன் ஆஃப் பிளட் என்ற புதிய அனிமேஷன் வெப் சீரிஸ் வரும் மே 17ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
யுவன் தயாரிக்கும் புதிய படம்… மீண்டும் இணையும் ‘ஜோ’ ஜோடி?
நடிகை சாயா சிங் வீட்டில் திருட்டு… பணிப்பெண் கைவரிசை!
உலக அளவில் அதிக முறை இணையத்தளம் முடக்கப்பட்ட நாடுகள்: இந்தியாவின் சாதனை!