நாடாளுமன்ற தேர்தல் களம் அனல் பறக்கிறது. இரண்டு கட்ட தேர்தல்கள் முடிந்துள்ளது. பிரதமர் மோடி நாடு முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்தநிலையில், சிஎன்என் நியூஸ் 18 ஆங்கில தொலைக்காட்சிக்கு பிரதமர் மோடி பேட்டியளித்துள்ளார். அதில் சாதிவாரி கணக்கெடுப்பு, பாஜக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியுள்ளார்.
அந்தவகையில், “சரத் பவாருக்கு கடந்த 2017ஆம் ஆண்டில் நாட்டின் இரண்டாவது உயரிய குடிமகன் விருதான பத்ம விபூஷனை உங்கள் அரசு வழங்கியது. ஆனால், தற்போது மோடி நாட்டின் புதிய புதினாக மாறி வருவதாக, சரத் பவார் கூறியுள்ளார். இதை எப்படி பார்க்கிறீர்கள்?” என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்துள்ள பிரதமர் மோடி, “அவரை நான் மிகவும் மதிக்கிறேன். நீண்டகாலமாக பொதுவாழ்வில் இருப்பவர்கள், நம்முடன் இருக்கிறார்களா, அல்லது எதிராக இருக்கிறார்களா என்பது முக்கியமல்ல. அவர்களை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், புதின் என அவர் பார்க்கும் ஒருவரின் தலைமையிலான அரசாங்கத்திடம் இருந்து விருதை பெறுவதில் அவர் பெருமிதம் கொள்கிறார் என்பதே இதன் பொருள். இது மிகப்பெரிய முரண்.
நாங்கள் பிரணாப் முகர்ஜி, நரசிம்ம ராவ், சவுத்ரி சரண் சிங், கர்பூரி தாக்கூர் ஆகியோருக்கு பாரத ரத்னா வழங்கினோம். இது குறித்து யாரும் கேள்வி கேட்கவில்லை. ஏனெனில், இது தகுதியானது என அனைவரும் புரிந்து கொண்டனர். அவர்கள் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள், கடந்த காலங்களில் எங்களை விமர்சித்தவர்கள் என்றாலும், இதுபோன்றவற்றை நாங்கள் பார்க்கவில்லை
பத்ம விருதுகளை பெற்றவர்களை கவனித்தால், முலாயம் சிங், தருண் கோகோய், பிஏ சங்மா, எஸ்.எம்.கிருஷ்ணா என அனைவரும் பிற கட்சிகளைச் சேர்ந்தவர்கள். ஆனால், அந்தந்த துறைகளில் அவர்கள் செய்த பங்களிப்பிற்காக, நாங்கள் பத்ம விருதுகளை வழங்கினோம்.
இது கட்சியின் விருதல்ல. நாட்டின் விருது. இது மோடியின் தனிப்பட்ட சொத்தல்ல. இதில் பாஜகவுக்கு காப்புரிமை இல்லை. நாட்டின் பத்ம விருதுகள் வழங்கப்பட்ட கதைகளை மாற்றிவிட்டோம். அந்த முடிவுகளுக்கு பின்னால் இருக்கும் சித்தாந்தங்களை பாராட்ட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
’கூல் கேங்ஸ்டர்’ ஆக நடிக்க ஆசைப்படும் விஜய் பட நடிகை!
கஞ்சா பொட்டலத்துடன் மனு : பாஜக நிர்வாகி சிறையிலடைப்பு!