“சோனியா காந்திக்கு நன்றி கடன்பட்டுள்ளோம்” : சசிதரூர்

அரசியல்

“காங்கிரஸ் கட்சி வரலாற்றில் கால் நூற்றாண்டு காலம் தலைமை தாங்கிய நமது தலைவர் சோனியா காந்திக்கு ஈடுசெய்ய முடியாத நன்றி கடன்பட்டுள்ளோம்” என்று சசிதரூர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவருக்கான தேர்தல் கடந்த 17ம் தேதி நடைபெற்ற நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டது.

அதன்படி மொத்தம் பதிவான வாக்குகளில் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு 7,897 வாக்குகளும், சசிதரூக்கு 1,000 வாக்குகளும் கிடைத்தன. 416 வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டன.

இதன்மூலம் 24 ஆண்டுகளுக்குப் பிறகு காந்தி குடும்பத்தைச் சாராத ஒருவர் காங்கிரஸ் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் காங்கிரஸ் தேசிய தலைவர் தேர்தலில் போட்டியிட்ட சசிதரூர் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “அக்டோபர் 17 ஆம் தேதி, உள்கட்சி ஜனநாயகத்தின் உண்மையான கொண்டாட்டமாக, இந்திய தேசிய காங்கிரஸின் 9500 பிரதிநிதிகள் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் வாக்களித்தனர்.

இன்று அதன் இறுதி முடிவு மல்லிகார்ஜுன கார்கே-ஜிக்கு சாதகமாக வந்துள்ளது. அவரது வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கட்சிப் பிரதிநிதிகளின் முடிவே இறுதியானது. அதை நான் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

காங்கிரஸ் போன்ற ஒரு கட்சியில் உறுப்பினராக இருப்பது பாக்கியம். அதன் உறுப்பினர்கள் தங்கள் தலைவரை தேர்ந்தெடுக்க கட்சி அனுமதிக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக வெற்றி பெற்றுள்ள மூத்த தலைவரான கார்கே தனது அனுபவத்தையும், தலைமைத்துவத்தையும் கொண்டு சிறப்பாக பணியாற்றுவார். அவரது வழிகாட்டுதலின் கீழ், நாம் அனைவரும் ஒன்றிணைந்து கட்சியை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்று நான் நம்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

நேரு – காந்தி குடும்பத்திற்கு நன்றி!

மேலும் காந்தி குடும்பத்தினருக்கும் தனது அறிக்கையில் நன்றி தெரிவித்துள்ளார்.

”கட்சியின் வரலாற்றில் இந்த முக்கியமான நேரத்தில், கால் நூற்றாண்டு காலம் கட்சிக்கு தலைமை தாங்கி நங்கூரமாக செயல்பட்ட தலைவர் சோனியா காந்திக்கு நாங்கள் ஈடுசெய்ய முடியாத நன்றிகடன் பட்டுள்ளோம்.

எதிர்காலத்திற்கான புதிய பாதைகளை வழங்கும் விதமாக, இந்தத் தேர்தல் செயல்முறையை அங்கீகரித்த அவரது முடிவு, சந்தேகத்திற்கு இடமின்றி அவரது சாதுரியத்திற்கும், எங்கள் கட்சிக்கான தொலைநோக்குப் பார்வைக்கும் பொருத்தமான சான்றாகும்.

அவர் கட்சியின் முன்பு இருக்கும் சவால்களை முறியடிப்பதில் புதிய தலைமைக் குழுவுக்கு தொடர்ந்து வழிகாட்டியாக ஊக்குவிப்பார் என நம்புகிறேன்.

சுதந்திரமான மற்றும் நடுநிலையான தேர்தலை ஆதரிப்பதற்காக தங்களால் இயன்ற உதவியை செய்த முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கும் எனது நன்றிகள்.

நேரு-காந்தி குடும்பம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களின் இதயங்களில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. அவர்களது குடும்பம் காங்கிரஸின் அடித்தளத் தூணாகவும், நமது தார்மீக மனசாட்சியாகவும், இறுதியான வழிகாட்டும் ஆன்மாவாகவும் இருக்கும் என்பது எனது நம்பிக்கை.

பாரத் ஜோடோ யாத்திரை வெற்றி!

குறிப்பாக, நடந்துகொண்டிருக்கும் பாரத் ஜோடோ யாத்ராவின் அற்புதமான வெற்றியானது, நாட்டு மக்கள் நேரு காந்தி குடும்பத்தின் மீது கொண்டுள்ள நீடித்த ஈர்ப்புக்கு சான்றாகும்.

பல்வேறு லட்சியங்களை கொண்ட ராகுல்காந்தியின் அர்ப்பணிப்புள்ள முயற்சிக்கு அனைத்து காங்கிரஸ் உறுப்பினர்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இந்த தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும், இறுதியில் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற கருத்தை நான் எப்போதும் தெரிவித்து வருகிறேன். இது தெளிவாக நடந்திருப்பது எனக்கு தனிப்பட்ட திருப்தியை அளிக்கிறது.

எங்களின் ஜனநாயகப் போட்டியானது அனைத்து மட்டங்களிலும் அதிர்வைத் தூண்டியுள்ளது , ஆரோக்கியமான மற்றும் ஆக்கபூர்வமான விவாதத்தைத் தூண்டியுள்ளது. இது எதிர்காலத்தில் கட்சிக்கு நல்ல முறையில் சேவை செய்யும் என்று நான் நம்புகிறேன்.

இதை சாத்தியமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள கட்சியின் தலைமை தேர்தல் ஆணைய நிர்வாகி மதுசூதன் மிஸ்திரி மற்றும் அவரது குழுவினரை நான் வாழ்த்துகிறேன்.

ஆளும் கட்சிக்கு எதிராக உறுதியுடன் போராட வேண்டும்!

நமது கட்சியை நிறுவியவர்கள் எதிர்பார்க்கும் பிரகாசமான ஜனநாயக எதிர்காலத்திற்கு நாட்டை வழிநடத்துவது நமது கடமையாகும்.

மகாத்மா காந்தி, நேரு மற்றும் டாக்டர் அம்பேத்கர் ஆகியோருக்கு உத்வேகம் அளித்த பன்மைத்துவ, வளமான மற்றும் சமத்துவ இந்தியாவின் இலட்சியங்கள், ஆளும் கட்சி மற்றும் அது கட்டவிழ்த்துவிட்ட சக்திகளால் நமது மதிப்புமிக்க விழுமியங்கள் மீதான தாக்குதலை எதிர்கொண்டு புதுப்பிக்கப்பட்ட உறுதியுடன் நாம் போராட வேண்டும்.

வரவிருக்கும் சவால்களை எதிர்கொள்ள காங்கிரஸ் சகாக்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். எங்கள் கட்சியின் மறுமலர்ச்சி உண்மையிலேயே இன்று தொடங்கியுள்ளதாக நான் நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வறை : தலைமைச் செயலாளர் உத்தரவு!

துப்பாக்கிச் சூடு – உயிரிழந்தோர் குடும்பத்திற்கு கூடுதலாக ரூ.5 லட்சம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *