தமிழக பட்ஜெட்: திமுக கூட்டணிக் கட்சிகள் பாராட்டு!

அரசியல்

2024-25 நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை சட்டமன்றத்தில் இன்று (பிப்ரவரி 19) நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையிலும், இளைஞர்களுக்கு ஒரு வளமான வாழ்க்கையை உருவாக்கும் நோக்கிலும் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று திமுக கூட்டணி கட்சிகள் பாராட்டியுள்ளன.

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை

இயற்கைப் பேரிடர், மத்திய பேரிடர், ஆளுநர் பேரிடர் என்று எத்தகைய பேரிடர்கள் வந்தாலும் மத்திய அரசு உதவி செய்யாவிட்டாலும் தமிழ்நாட்டின் நிதிநிலையை கொண்டும், உலக முதலீட்டாளர்களின் முதலீடுகளைக் கொண்டும் அழகான செப்பனிடப்பட்ட மிகச்சிறந்த நிதிநிலை அறிக்கையை அவையில் தாக்கல் செய்துள்ளார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு. அவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நிதிநிலை அறிக்கையில் கல்வி, மருத்துவம், சாலை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்து அதிக கவனம் செலுத்தியிருக்கிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை செயல்படுத்துவதில் நாட்டிலேயே மிகச்சிறந்த மாநிலமாக தமிழ்நாடு இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

மாபெரும் தமிழ் கனவுடன் தமிழ்நாடு அரசின் 2024- 25 நிதி ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கையை இன்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருக்கிறார்.

சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமை வழி பயணம் மற்றும் தாய் தமிழும் தமிழர் பண்பாடும் ஆகிய ஏழு இலக்குகளை நிறைவேற்ற நிதிநிலை அறிக்கையில் திட்டங்களை வழங்கி இருக்கிற நிதி அமைச்சருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை, தமிழ் சமூகத்தின் தொன்மை நல் மரபுகளை முன்னெடுத்து வளர்த்தெடுக்க நிதி நிலை அறிக்கை கவனம் செலுத்தி இருக்கிறது.

சிலப்பதிகாரம், மணிமேகலை உட்பட தமிழ் இலக்கியங்கள் பிற மொழிகளில் பெயர்த்து வழங்கவும் தொல்லியல் ஆய்வுகளை மேலும் ஆறு மையங்களுக்கு விரிவுபடுத்தியிருப்பதும், , கீழடியில் திறந்த வெளி அரங்கம் அமைக்கும் திட்டம் மற்றும் பழங்குடி மக்கள் மொழிகளை ஆவணப்படுத்தும் திட்டம் போன்றவை சிறப்பானது.

குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, நீர்வளத்துறையில் 5 ஆயிரம் ஏரிகள், குளங்கள் உட்பட காவிரி, வைகை, நொய்யல், தாமிரபரணி ஆறுகளும் புனரமைக்கும் திட்டமும், 2 ஆயிரம் மேல்நிலைத் தொட்டி கட்டும் திட்டமும் முக்கியமானது. இடை பாலினத்தவர்களுக்கு கல்வி, விடுதி இலவசமாக வழங்குவதும், கல்லூரி கல்வி செலவை அரசே ஏற்பதும் அவர்களின் சமூக ஒப்புதலுக்கு வழிவகுக்கும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை மற்றும் இயற்கை பேரிடர் இரண்டு முறை தாக்கியும் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒரு ரூபாய் கூட ஒதுக்காதது, சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீடு தராதது, கடன் வாங்கும் வரம்புகளில் கடுமையான நிபந்தனைகளை விதித்து மாநிலங்களை தவிக்க வைத்துள்ளது.

மின்சாரம் உள்ளிட்டு பாரபட்சமான நடவடிக்கைகள் காரணமாக மாநிலங்கள் கடும் நிதி நெருக்கடிகளுக்கு உள்ளாயின. மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டு, மாநில அரசுகளின் வருமானம் குறைந்து  செலவினங்கள் அதிகரித்துள்ள நிலையில், ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையிலும், இளைஞர்களுக்கு ஒரு வளமான வாழ்க்கையை உருவாக்கும் நோக்கிலும் சிறந்த முறையில் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

அடுத்த இரண்டு ஆண்டில் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள ஏழை குடும்பங்களின் 5 லட்சம் குடும்பங்களுக்கு அரசின் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைத்து அவர்களை முன்னேற்றுவதற்கான திட்டங்கள் பாராட்டத்தக்கது.

விசிக தலைவர் திருமாவளவன்

இன்று சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை வறுமையை ஒழிப்பதற்கும், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் வழி வகுக்கின்ற தொலைநோக்குத் திட்டமாக உள்ளது. இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாராட்டி வரவேற்கிறோம்.

தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் காரணமாக வறுமை ஒழிக்கப்படும் மாநிலமாகத் தமிழ்நாடு மாறி வருகிறது. தற்போது வறுமையில் இருக்கும் ஐந்து லட்சம் குடும்பங்களை வறுமையிலிருந்து மீட்பதற்கு ஒருங்கிணைந்த திட்டம் வகுக்கப்படுவதாக இந்த நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்டிருப்பது ஏழை மக்களைப் பாதுகாப்பதில் மிகுந்த அக்கறையுள்ள அரசாக இது திகழ்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன்

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் நிதிநிலை அறிக்கையை வரவேற்கிறேன். இந்த நிதிநிலை அறிக்கை அனைத்து மக்களையும் உள்ளடக்கியதாக உள்ளது. தொழில் வளர்ச்சியில் டெல்டா தென் மாவட்டங்களில் கவனம் செலுத்தப்பட்டுள்ளன.

கொங்குநாடு தேசிய மக்கள் கட்சியின் நீண்ட கால கோரிக்கையான அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும்’காலை உணவுத் திட்டம் நீட்டித்து இருப்பதை வரவேற்கிறேன். ஆனால், அதே நேரத்தில் ஒரு வளாகத்தில் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும் இந்த காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தப்பட வேண்டும்.

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா

இன்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களால் தாக்கல் செய்யப்பட 2024-2025 ஆண்டிற்கான தமிழக வரவு செலவு அறிக்கை, திராவிட மாடல் அரசின் சீர்மிகு நிதி நிர்வாகத்தின் வெளிப்பாடே ஆகும்.

சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமை வழி பயணம் மற்றும் தாய் தமிழும் தமிழர் பண்பாடும் ஆகிய ஏழு இலக்குகளை நிறைவேற்ற நிதிநிலை அறிக்கையில் திட்டங்களை வழங்கி இருக்கிற நிதி அமைச்சருக்கும், அவரை வழிநடத்திய முதல்வருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். “ஸ்டாலின்: A man with a Plan” என்பதனை இந்த பட்ஜெட் நிரூபித்து உள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோடி செல்ஃபி பாயின்ட் இங்க வைக்கலாமே? அப்டேட் குமாரு

தமிழக பட்ஜெட்டில் வளர்ச்சி திட்டங்கள் இல்லை: எதிர்க்கட்சிகள் விமர்சனம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *