வைஃபை ஆன் செய்ததும் தேர்தலுக்குப் பிறகான அரசியல் கட்சிகளின் ஆய்வுகள், விசாரணைகள் பற்றிய புகைப்படங்கள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது. ”சில நாட்களுக்கு முன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு உட்பட்ட மக்களவைத் தொகுதிகளின் வேட்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளின் ஆய்வுக் கூட்டத்தைக் கூட்டினார். இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் கலந்துகொண்டார்.
அந்த கூட்டத்துக்கு முன்னரும் பின்னரும் எடப்பாடியை சந்தித்த ஜெயக்குமார் தனது மகன் ஜெயவர்தன் போட்டியிட்ட தென் சென்னை தொகுதியில் நடந்திருக்கக்கூடிய அதிர்ச்சி சம்பவங்களை எடப்பாடியிடம் விவரித்துள்ளார்.
இதுகுறித்து அதிமுக வட்டாரங்களில் விசாரித்தபோது, ‘தென் சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் தேர்தல் தினமான ஏப்ரல் 19 ஆம் தேதி தனது தொகுதிக்கு உட்பட்ட பூத்களில் எல்லாம் சரியாக நடக்கிறதா என்று ஆய்வு மேற்கொண்டார்.
அதில் காலை 11 மணிக்கு மேல் பல பூத்துகளில் அதிமுகவின் பூத் ஏஜெண்டுகள் முறையாக பணியாற்றவில்லை என்றும், பலர் பூத்திலேயே இல்லை என்பதையும் கண்டறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
பூத் ஏஜெண்ட்டுகள் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் இருப்பதற்கான முக்கிய காரணம்… தங்களது கட்சியின் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் கொண்டு வந்து சேர்ப்பது, அடுத்த கட்சியினரின் தில்லுமுல்லுகள், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகளை கண்காணித்துக்கொண்டிருப்பது ஆகியவைதான்.
ஒரு வாக்குச் சாவடியில் தனது கட்சியுடைய வாக்குகள் பதிவாவது தாமதப்பட்டது என்றால், உடனடியாக சம்பந்தப்பட்ட வட்டச் செயலாளருக்கு சொல்லி வாக்காளர்களை அழைத்து வரச் செய்வது, வேறு ஏதேனும் பிரச்சினைகள் என்றால் வேட்பாளருக்கு தெரியப்படுத்துவது உள்ளிட்டவைதான் பூத் ஏஜெண்டுகளின் அடிப்படை பணி.
ஆனால், வாக்குப்பதிவு தொடங்கிய சில மணி நேரம் வரை பணியாற்றிய பூத் ஏஜெண்டுகள் 11 மணிக்கு மேல் போய்விட்டதாகவும் அதன் பின் மாலைதான் வாக்குச் சாவடி பக்கம் எட்டிப் பார்த்ததாகவும் அறிந்துகொண்டார் ஜெயவர்தன்.
இதுபற்றி தனது தந்தையான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடமும் அவர் தெரிவித்தார். தேர்தலுக்குப் பிறகு சில நாட்கள் கட்சியினரிடம் விசாரித்து காணாமல் போன பூத் ஏஜெண்ட்டுகளின் பட்டியலையே தயாரித்திருக்கிறார் ஜெயக்குமார்.
தென் சென்னை மக்களவைத் தொகுதிக்குள் விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தி.நகர், மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் வருகின்றன. இந்த பகுதிகளை உள்ளடக்கிய மாவட்டச் செயலாளர்கள் விருகை ரவி, தி.நகர் சத்யா, அசோக், கந்தன் ஆகியோர் சம்பந்தப்பட்ட பூத் ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று ஜெயக்குமாரும் ஜெயவர்தனும் எடப்பாடியிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
அதிமுகவின் காணாமல் போன பூத் ஏஜென்ட்டுகள் ஆங்காங்கே திமுகவினரிடம் அட்ஜெஸ்ட் ஆகிவிட்டார்களா என்பதும் வேட்பாளார் தரப்பின் சந்தேகமாக இருக்கிறது. எடப்பாடி இதில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு சென்னை அதிமுக வட்டாரங்களில் நிலவுகிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹீரோ பாதி… வில்லன் பாதி… ஜூனில் வெளியாகும் கமலின் இரண்டு அவதாரங்கள்!
பியூட்டி டிப்ஸ்: முடி உதிர்வு… தீர்வு என்ன?