சைதை துரைசாமி
பெருநகர சென்னை முன்னாள் மேயர்
சமீபத்தில் புரட்சித்தலைவியின் நம்பிக்கைக்குரிய உதவியாளர்களில் ஒருவரான பூங்குன்றன் அவர்கள், ‘புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சைதை துரைசாமி மூலம் ஒரு கல்வி அறக்கட்டளை தொடங்கும் முயற்சியில் இருந்தார்’ என்று முகநூலில் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார்.
இதுகுறித்து என்னிடம் பலரும் விசாரித்த நிலையில், புரட்சித்தலைவியின் பிறந்த நாளன்று, அவரது நிறைவேறாத கனவை, கழகத்தினுடைய தலைவர்களுக்கும் பொறுப்பாளர்களுக்கும், கழகத்தினுடைய தொண்டர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் தெரிவிக்க வேண்டியது என் கடமை என்றே கருதுகிறேன்.
நான் பெருநகர சென்னை மேயராக இருந்தபோது, என்னுடைய சொந்த நிதியில் நடத்திவரும் மனிதநேய இலவச ஐ.ஏ.எஸ். அறக்கட்டளை பணியை விரிவுபடுத்துவதற்காக அதிக நிதி தேவைப்பட்டது. எனவே, எனது குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான ஒரு மதிப்புமிக்க சொத்தை விற்பனை செய்து, அதில் பெறும் தொகையை வைப்பு நிதியாக வைத்து, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் மனிதநேய அறக்கட்டளையை நடத்துவதற்கு முடிவெடுத்தேன்.
நான் மேயராக இருந்ததால், சொத்து விற்பனை குறித்து, புரட்சித்தலைவியிடம் அனுமதி பெறுவதற்காக, 2015ம் ஆண்டு ஒரு கடிதம் கொடுத்தேன். என் கடிதத்தைப் பார்த்ததும் புரட்சித்தலைவி எனக்கு அழைப்பு விடுத்தார்.
நான் அவரை சந்தித்ததும், ‘மிஸ்டர் சைதை, நீங்கள் மனிதநேய அறக்கட்டளையை யாருடைய உதவியும் இன்றி, சொந்த நிதியில், மிகச்சிறப்பாகவும், மிகத்திறமையாகவும் நடத்திவருவதைப் பார்த்து உண்மையிலே நான் பெருமைப்படுகிறேன். இப்போது சொத்தை விற்பனை செய்வதற்கு என்ன அவசியம்?’ என்று கேட்டார்.
உடனே நான், ‘அம்மா… நமது தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 12,500க்கு மேற்பட்ட கிராம ஊராட்சி மன்றங்கள் உள்ளன. அத்தனை கிராமத்தைச் சேர்ந்த ஏழை மாணவர்கள் படிப்பதற்கும், பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து, போட்டித் தேர்வுகளில் பங்கெடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன். எந்த ஒரு கிராமத்து ஏழை மாணவனும் தகுதியிருந்தும், பொருளாதாரம் காரணமாக அரசு வேலை கனவு கலைந்துவிடக் கூடாது. மனிதநேயம் தன்னால் இயன்ற உதவியை செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்காகத்தான் இந்த கோரிக்கை’’ என்றேன்.
உடனே நெகிழ்ந்துபோன புரட்சித்தலைவி, ‘’மிஸ்டர் சைதை, உங்கள் நோக்கம் மிகவும் சிறப்பானது. இது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. எனவே, நான் சொல்வதைக் கேளுங்கள். மனிதநேயம் அறக்கட்டளைக்காக எந்த ஒரு சொத்தையும் நீங்கள் விற்பனை செய்யக்கூடாது. அவை எல்லாம் உங்கள் மகன் வெற்றிக்குத்தான் சேர வேண்டும். தற்போது நீங்கள் செய்ய விரும்பும் விரிவாக்கப் பணிக்கான அனைத்து உதவிகளையும் நான் செய்து தருகிறேன்’’ என்று கூறினார்.
மேலும் அவர், ‘’நான் உங்களுக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பும் பொறுப்பும் தருகிறேன். நீங்கள் மனிதநேயம் அறக்கட்டளை நடத்தி வருவது போன்று, என் பெயரில் அறக்கட்டளை தொடங்கி, நீங்கள் விரும்பும் வகையில் மாணவர்களுக்கு சேவை செய்யுங்கள். நீங்கள் குறிப்பிடுவது போன்று, கடைசி மனிதன் இருக்கும் வரையில் என் பெயரிலான அறக்கட்டளை தொடந்து இயங்க வேண்டும்.
“என் பெயரிலான அறக்கட்டளைக்குத் தேவையான வைப்பு நிதியை நான் தருகிறேன். மேலும், சில சொத்துக்களை அறக்கட்டளை பெயரில் எழுதி வைக்கிறேன். அந்த வருமானத்தில் இருந்து அறக்கட்டளை எல்லா காலமும் தொடர்ந்து இயங்க வேண்டும். அந்த அறக்கட்டளைக்கு என்ன பெயர் சூட்டலாம் என்று நீங்களே சொல்லுங்கள்’’ என்று கேட்டார்.
உடனே நான், ‘புரட்சித்தலைவி அம்மா இலவச கல்வி அறக்கட்டளை, புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதா இலவச கல்வி அறக்கட்டளை, டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அறக்கட்டளை என்று மூன்று பெயர்களைக் குறிப்பிட்டேன்.
உடனே, அந்த மூன்று பெயர்களையும் ஒரு தாளில் எழுதித்தரச் சொன்னார். நான் எழுதிக் கொடுத்ததும், அவரது உதவியாளர் பூங்குன்றனை அழைத்து, ‘இந்த மூன்று பெயரில் எது நியூமலராலஜிபடி சரியாக இருக்கிறதோ, அதை உடனடியாகத் தேர்வு செய்து பதிவு செய்யுங்கள்..” என்று சொன்னார்.
பின்னர் என்னிடம், ’’நீங்கள் நேர்மையாகவும் திறமையாகவும் செயல்படுவதாலே, இந்த அறக்கட்டளை நடத்தும் பொறுப்பை உங்களிடம் ஒப்படைக்கிறேன். நீங்கள் பூங்குன்றனை உடன் இணைத்து அறக்கட்டளையை நடத்துங்கள். உங்கள் இருவர் மீதும் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. எனக்கு அம்மா உணவகம் மூலம் மக்களிடம் நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தீர்கள். அதேபோல், இந்த அறக்கட்டளைக்கும் மக்களிடம் எனக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும்’’ என்று தனது அக்கறையை வெளிப்படுத்தினார்.
அப்போதே நான் பூங்குன்றனிடம், ‘’அம்மா உங்கள்மீது எவ்வளவு பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது’’ என்று அன்பை பரிமாறிக் கொண்டேன்.
அதன் பிறகு, இரண்டு முறை புரட்சித்தலைவியிடம் இந்த இலவச கல்வி அறக்கட்டளை பற்றி நேரில் சந்தித்தபொழுது கேட்டேன். ’’விரைவில் உங்களை அழைக்கிறேன்’’ என்று உறுதி அளித்தார். ஆனால், அதன்பிறகு புரட்சித்தலைவிக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு மற்றும் சில காரணங்களால், அவரது ஆசை அடுத்தகட்டத்துக்கு நகரவே இல்லை. புரட்சித்தலைவியின் கனவு நிறைவேறவில்லை என்ற வருத்தத்தையே அம்மாவின் உதவியாளர் பூங்குன்றன் பதிவாக வெளியிட்டிருக்கிறார்.
அது போல் இன்னும் ஒரு நிகழ்வும் அப்போது நடைபெற்றது. புரட்சித்தலைவியின் ஆஸ்தான ஜோதிடரான ஜமால் என்கின்ற சரவணன் என்னை அழைத்து, ’’உங்களது ஜாதகக் குறிப்பை கொடுங்கள். அம்மா அதனை பார்க்கச் சொல்லி இருக்கிறார்’’ என்றார். எதற்கு என்று கேட்டேன்.
அவர், ‘’காரணத்தை உங்களிடம் பிறகு சொல்கிறேன்”’ என்றார். அவர் கேட்டபடி, என்னுடைய பிறந்த தேதி மற்றும் நேரத்தை குறித்துக் கொடுத்தேன். ஒரு வாரம் கழித்து ஜோதிடர் என்னை அழைத்து, ’’அம்மா அவர்கள் உங்களுக்கு அ.தி.மு.க.வில் முக்கியமான ஒரு கட்சிப் பதவி வழங்க விரும்புகிறார். இதனை அறிவிப்பதற்கு முன் உங்களுடைய ஜாதகத்தின் பலாபலனை குறித்துக் கொடுக்குமாறு கேட்டார்’’ என்று கூறினார்.
அது என்ன பதவி என்பதையும், ஏன் அது கடைசி வரை எனக்கு வழங்கப்படவில்லை என்பதை, பூங்குன்றனைப் போல் ஜோதிடர் ஜமால் என்கின்ற சரவணன் சொன்னால்தான் எல்லோருக்கும் தெரியும். இப்படி ஏராளமான அம்மாவின் விருப்பங்கள் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருக்கின்றன. இப்போதும், பூங்குன்றன் அவர்கள் வெளிப்படையாக இதைச் சொன்னதால், இந்த உண்மையை பொதுவெளியில் வெளியிடுகிறேன்.
புரட்சித்தலைவி அம்மா இன்று உயிருடன் இல்லை என்றாலும், அவரால் அங்கீகாரம் பெற்று, கட்சியிலும் ஆட்சியிலும், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களாகவும், அரசு வாரியங்களிலும், உள்ளாட்சி மன்றங்களிலும், கூட்டுறவுச் சங்கங்களிலும், கட்சியின் அனைத்து நிலைகளிலும் பதவி பெற்றவர்கள், இன்றைக்கும் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அல்லது தனித்தனியாக அம்மா அவர்கள் பெயரில் அறக்கட்டளை நிறுவி, அவருடைய லட்சியக் கனவை நிறைவேற்றுவதற்கு முயற்சி எடுக்க வேண்டும்.
1980ஆம் ஆண்டு புரட்சித்தலைவர் சொன்ன, ‘நீதான் அண்ணா திமுகவின் முதல் மேயர்..’ என்ற கனவை நனவாக்கி, புரட்சித்தலைவரின் தீர்க்கதரிசனத்தை, 31 ஆண்டுகள் கழித்து நிறைவேற்றி, 5.20 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறவும், பதவியேற்பு நிகழ்ச்சிக்கு நேரில் வந்தும் என்னை அங்கீகரித்தவர் புரட்சித்தலைவி.
எனவே புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்காக, எம்ஜிஆர் தொண்டன் சைதை துரைசாமி, எதையும் செய்ய தயாராக இருக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அம்மாவின் புகழ் காலத்தை வென்று வாழட்டும்.” இவ்வாறு சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மின்னம்பலம் மேற்கொண்ட விசாரணையில், அறக்கட்டளை தொடர்பாக சைதை துரைசாமியை நேரில் பேச அழைத்த ஜெயலலிதா அவரிடம், தனது பெயரில் அறக்கட்டளை தொடங்கி, நீங்கள் விரும்பும் வகையில் மாணவர்களுக்கு சேவை செய்யுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அதற்காக ரூ.5000 கோடி பணத்தையும், ரூ.5000 கோடி மதிப்புடைய சொத்துக்களையும் அறக்கட்டளைக்கு தருவதாக ஜெயலலிதா தெரிவித்ததாகவும் தெரிய வந்துள்ளது.
எனினும் கடைசி வரை அவரது விருப்பம் நிறைவேறாமலேயே சென்றுவிட்டது.
ஜெயலலிதா பிறந்தநாள் : ராயப்பேட்டை அலுவலகத்தில் கொடியேற்றும் எடப்பாடி
WT20WC : கடைசிவரை போராடிய இந்தியா… அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா
Comments are closed.