அதிமுக பொதுச் செயலாளராகப் பதவியேற்ற பிறகு இன்று (ஏப்ரல் 2) முதல் முறையாக சொந்த மாவட்டமான சேலத்திற்கு சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு அக்கட்சி தொண்டர்கள் வழிநெடுக உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கடந்த மாதம் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் தொடுத்த வழக்கினை அவசர வழக்காக விசாரித்தது சென்னை உயர்நீதிமன்றம்.
இதனையடுத்து மார்ச் 28ம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில், ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம். மேலும் ஜூலை 11 பொதுக்குழு தீர்மானம் செல்லும் என்றும், பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை அறிவிக்கலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனையடுத்து அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்து பொறுப்பேற்று கொண்டார். அதன்பிறகு தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தொடர்ச்சியாக பங்கேற்று வந்ததால் அவர் சொந்த ஊரான சேலத்திற்கு செல்லவில்லை.
இந்நிலையில், சட்டப்பேரவையின் 3 நாட்கள் விடுமுறையைத் தொடர்ந்து, சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் இருந்து இன்று காலையில் சாலை மார்க்கமாக சேலத்திற்கு புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி.

அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக தனது சொந்த மாவட்டமான சேலத்திற்கு சென்ற அவருக்கு வழிநெடுக உற்சாக வரவேற்பினை அக்கட்சி தொண்டர்கள் அளித்தனர்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் இல்லத்தில் கிளம்பும் போது பட்டாசு வெடித்த அதிமுக தொண்டர்கள் எடப்பாடி சென்ற கார் மீது மலர் தூவி உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.

அதனைத்தொடர்ந்து தாம்பரம் சானடோரியம் பகுதியில் அதிமுகவினர் ஏராளமானோர் திரண்டு எடப்பாடிக்கு ஆளுயர மாலை அணிவித்து வரவேற்றனர். அங்கிருந்த எம்.ஜி.ஆர். சிலைக்கு அவர் மாலை அணிவித்து தனது பயணத்தை தொடந்தார்.
பின்னர் மதுராந்தகத்திலும் திரளான அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கூடி பூங்கொத்து கொடுத்தும், மாலை அணிவித்தும் எடப்பாடியை வரவேற்றனர். மேலும் பரிசாக இரு வாள் கொண்ட வெண்கல கேடயத்தையும் வழங்கினர்.

அங்கிருந்து விழுப்புரம் சென்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் பெருந்திரளான ஆதரவாளர்களுடன் வரவேற்றார். பின்னர் அங்கு தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.
இதற்கிடையே சென்னை முதல் சேலம் வரை வழியெங்கும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று பேனரும் வைக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து தனது சொந்த ஊரான சேலத்திற்கு சென்ற நிலையில் அங்கு அவரை ஏராளமான அதிமுக தொண்டர்கள் வரவேற்றனர். அங்கு மக்கள் கூட்டத்திற்கு நடுவே அவர் பேசினார்.

அவர் பேசுகையில், “அதிமுக ஆட்சியில் கொடுத்த மடிகணினி, தாலிக்கு தங்கம் திட்டம், அம்மா இருசக்கர வாகனம், அம்மா மினி கிளினிக் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தற்போது நிறுத்திவிட்டார்கள்.
தி.மு.க ஆட்சியில் அ.தி.மு.க.வினர் மீது பொய் வழக்கு போடப்பட்டு வருகிறது. அவைகளை எல்லாம் சட்ட ரீதியாக நாங்கள் எதிர்கொள்வோம். எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும், அதனை தவிடு பொடியாக்குவோம். ஒருபோதும் அஞ்சமாட்டோம்.
அதிமுகவை எவராலும் சீண்டி பார்க்கவும் முடியாது, தொட்டுப்பார்க்கவும் முடியாது. வழக்குகளைப் போட்டு அச்சுறுத்த நினைத்தால், அவை கானல் நீராகப் போகும்.” என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “அதிமுக உழைப்பால் உயர்ந்த கட்சி. திமுக என்பது ஒரு கட்சியல்ல. அது கார்ப்பரேட் கம்பெனி. அதிமுக எனும் இயக்கத்தை உருவாக்கிய எம்ஜிஆரும், அதன் பிறகு கட்சியை கட்டி காத்த ஜெயலலிதாவுக்கும் வாரிசுகள் கிடையாது. அவர்களுக்கு தொண்டர்களாகிய நாம் தான் வாரிசுகள்.
ஆனால் திமுகவில் மு.க.ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் என்று குடும்ப ஆட்சி நடக்கிறது. நம்மோடு இருந்தவர்கள் எதிரியாக மாறி தற்போது திமுகவின் பி டீமாக செயல்பட்டு வருகிறார்கள்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வந்தாலும் வரலாம். அதுதான் ஒரே நாடு ஒரே தேர்தல். அப்படி நடக்கும் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வரும். அப்போது தமிழ்நாட்டு மக்களுக்கு விடிவுகாலம் பிறக்கும்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
கிறிஸ்டோபர் ஜெமா
தண்டனையை எதிர்த்து ராகுல்காந்தி மேல்முறையீடு!
டிஜிட்டல் திண்ணை: மோடி சென்னை விசிட்டில் புது கூட்டணிக்கு அச்சாரம்? அண்ணாமலையின் அதிரடி திட்டம்!