தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டமன்றத்தில் இன்று (பிப்ரவரி 19) 2024-25 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இந்தநிலையில், தமிழக பட்ஜெட் விளம்பர பட்ஜெட்டாக உள்ளதாகவும், வறுமை, வேலைவாய்ப்பை போக்கக்கூடிய பட்ஜெட்டாக அமையவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
தமிழக பட்ஜெட்டில் வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் இல்லை. வார்த்தை ஜாலங்களே அதிகம் உள்ளன. வழக்கம்போல ஒவ்வொரு துறைக்கும் திமுக அரசு நிதியை ஒதுக்கி உள்ளது. திமுக ஆட்சியில் தமிழகத்தின் கடன் உயர்ந்துள்ளது. இந்தியாவிலேயே அதிக கடன் வாங்குவதில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது. வரவு, செலவு திட்டத்தில் குளறுபடி உள்ளது.
திமுக அரசு ரூ.8 லட்சம் கோடி கடன் பெற்றுள்ளது. கடன் பெற்றே அவர்கள் ஆட்சியை நடத்துகின்றனர். மக்களுக்கு எந்தவொரு புதிய திட்டமும் இல்லை, பெரிய திட்டமும் இல்லை.
திமுகவினர் பெயர் வைப்பதில் மட்டுமே வல்லவர்கள். எங்கள் திட்டங்களின் பெயரை மாற்றி புது திட்டமாக அறிவிக்கிறார்கள்.
பாமக நிறுவனர் ராமதாஸ்
தமிழ்நாட்டிற்கான 2024- 25ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பாசனக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களும், சாதிவாரி கணக்கெடுப்பும் அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது.
2024-25ஆம் ஆண்டில் ரூ.1,55,584 கோடி கடன் வாங்கும் அளவுக்கு தமிழகத்தின் நிதிநிலை மோசமடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க எந்த புதிய நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளாதது கவலை அளிக்கிறது.
2024- 25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். நிதிநிலை அறிக்கை உரை முழுவதும் தெளிந்த நீரோடையாக இருந்தது.
திருக்குறளில் தொடங்கி புறநானூறு வரை ஏராளமான மேற்கொள்கள் இடம் பெற்றிருந்தது மகிழ்ச்சியளித்தது. ஆனால், நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய திட்டங்கள் எதுவும் இல்லாத நிலையில், இவை அனைத்தும் இல்லாத உடலுக்கு அணிவிக்கப்பட்ட அணிகலன்களாக, யாருக்கும் பயனில்லாதவையாக மாறிவிட்டன.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
ஆண்டு தோறும் தமிழக நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் அதே அலங்கார வார்த்தைகளைத் தவிர, தமிழக அரசு சார்பில் உருப்படியான திட்டங்கள் என ஒன்றுமே இல்லை.
கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழக பட்ஜெட்டில் இடம் பெற்றிருந்த அதே திட்டங்கள், இதுவரை செயல்படுத்தப்படாமல், புதிய திட்டங்களைப் போல ஒவ்வொரு வருடமும் மீண்டும் மீண்டும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
தனது தேர்தல் வாக்குறுதிகளில் அறிவித்த பெரும்பாலான திட்டங்களைச் செயல்படுத்த எந்த நிதியும் திமுக ஒதுக்கியதாகத் தெரியவில்லை.
திமுகவின் நிதிநிலை அறிக்கையில், மத்திய அரசின் நலத் திட்டங்களை நீக்கி விட்டால், எஞ்சியிருப்பது, பேருந்து நிலையத்துக்குப் பெயர் வைப்பதும், ஒவ்வொரு ஆண்டும் வெறும் அறிவிப்பு அளவிலேயே நிற்கும் விளம்பரங்களும் மட்டும்தான்.
மத்திய அரசின் திட்டங்களுக்குப் புதிய பெயர் வைப்பது, அல்லது, மத்திய அரசின் பங்களிப்பை மறைப்பது என, மத்திய அரசின் திட்டங்களை தங்கள் சிந்தனையில் உதித்தது போலக் காட்டிக் கொள்ளும் திமுக, தொலைநோக்குப் பார்வை இல்லாததால், தங்கள் நாடகத்தை முழுமையாக அரங்கேற்ற முடியாமல் மாட்டிக் கொள்வதுதான் நகைச்சுவை.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள 2024- 25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை ஏழை, எளிய பொதுமக்கள் தொடங்கி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், அரசு ஊழியர்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஏமாற்றமளிக்கும் தேர்தல் கால திமுக அரசின் விளம்பர பட்ஜெட்டாகவே அமைந்துள்ளது.
‘மாபெரும் தமிழ்க்கனவு’ எனும் தலைப்பில் தாக்கலாகியிருக்கும் நிதிநிலை அறிக்கையில் சமூகநீதியை முதல் இலக்காக நிர்ணயித்திருக்கும் திமுக அரசு, அந்த சமூக நீதியை நிலைநாட்டுவதற்கான சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த தயங்குகிறது.
மாநிலங்களே தன்னிச்சையாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தலாம் என்பதற்கு பீகார் தொடங்கி கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஜார்காண்ட் என பல மாநிலங்கள் முன்னுதாரணமாக இருக்க தமிழகம் மட்டும் மத்திய அரசையே இன்னமும் எதிர்பார்த்து காத்திருப்பது ஏன்?
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன்
தமிழக அரசின், 2024-2025 ம் ஆண்டிற்கான பட்ஜெட் வறுமையை போக்கக்கூடிய, வேலை வாய்ப்பை அதிகரிக்கக்கூடிய, பொருளாதார நிலையை உயர்த்தக்கூடிய பட்ஜெட்டாக அமையாமல், தமிழக விவசாயிகளின், தமிழக மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத பட்ஜெட்டாக அமைந்திருக்கிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியீடு எப்போது?
நாம் தமிழர் சின்னம்: தேர்தல் ஆணையரிடம் மனு!