குடும்பம் குடும்பமாக வருகிற கட்சி தான் திமுக என்று வாரிசு அரசியல் தொடர்பான கேள்விக்கு அமைச்சர் தா.மோ. அன்பரசன் சர்ச்சையாக பதிலளித்து இருக்கிறார்.
சென்னை கிண்டியில் உள்ள சிட்கோ அலுவலகத்தில் மாவட்டத் தொழில் மைய பொது மேலாளர்களின் திறனாய்வு கூட்டம் இன்று(டிசம்பர் 15) நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், “தொழில் ஆணையரகத்தின் மாவட்ட பொது மேலாளர்கள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஓராண்டுக்கு 12,000க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்களை உருவாக்குவது தொடர்பாகவும், பட்டியலினத்தவர்கள், பெண்கள், மாற்றித்திறனாளிகளை தொழில் முனைவோர் ஆக்குவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும் முதலமைச்சரின் அறிவுரைப்படி ஓராண்டுக்கு 12,000க்கும் மேற்பட்டோரை தொழில் முனைவோர் ஆக்க வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த குறுகிய காலத்தில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொழில் முனைவோராக உருவாக்கப்பட்டுள்ளனர்.
சில பின் தங்கிய மாவட்டங்களில் இந்த பணிகளில் தொய்வு இருக்கிறது. வருகின்ற காலங்களில் இதை சரி செய்து ஏழை எளிய இளைஞர்களுக்கு கடன் பெற்று தர வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறோம்.
தொய்வு ஏற்பட்ட மாவட்டங்களில் பணிகளை சரி செய்ய வேண்டும் என மாவட்ட பொது மேலாளர்களுக்கு கூட்டத்தில் ஆலோசனை வழங்கியுள்ளேன்” என்றார்.
அப்போது அதிமுக முன்வைக்கும் வாரிசு அரசியல் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “என் அப்பாவும் கட்சியில் இருந்தார் நானும் தற்பொழுது அமைச்சராக இருக்கிறேன். திமுக என்றால் அப்படித்தான்.
குடும்பம் குடும்பமாக வருகிற கட்சி தான் திமுக. எல்லா கட்சியிலும் அப்படித்தான் இருக்கிறது. புதுசா எங்களை மட்டும் கேட்கிறீர்கள்” என சர்ச்சையாக பதிலளித்தார்.
கலை.ரா
Comments are closed.