வைஃபை ஆன் செய்ததும் பங்குச்சந்தை சரிவு பற்றிய ஆங்கில ஊடகங்களின் செய்திகள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
அவற்றை பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“மே 8 ஆம் தேதி மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகள் சரிந்து சுமார் 7, 35,000 கோடி ரூபாய் சில்லரை முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பது தான் இந்தியாவின் பிரபல ஆங்கில ஏடுகளிலும் சர்வதேச அளவிலான பொருளாதார ஏடுகளிலும் முக்கியமான செய்தியாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
இதுமட்டுமல்ல பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்படும் தொழிலதிபர் அதானி குழும நிறுவனங்களும் சரிவை சந்தித்து வருகின்றன.
எஃப்டிஐ எனப்படும் அன்னிய நேரடி முதலீட்டாளர்கள் கடந்த சில நாட்களாகவே தங்கள் முதலீடுகளை இந்தியாவிலிருந்து அவுட் ஃப்ளோ செய்து வருவதும் முக்கியமான விவாதமாக ஆகியிருக்கிறது. அதாவது ஒரு நாளைக்கு சுமார் 8,000 கோடி அளவுக்கு அன்னிய முதலீடுகள் இந்தியாவிலிருந்து கடந்த சில நாட்களாக வெளியே சென்று கொண்டிருக்கின்றன என்கிறார்கள் பொருளாதார வல்லுனர்கள்.
நாடாளுமன்ற தேர்தல் முதல் மூன்று கட்டங்கள் நடந்து முடிந்திருக்கும் நிலையில்… பங்குச்சந்தையிலும் பொருளாதாரத்திலும் ஏற்பட்டிருக்கிற இந்த மாற்றங்கள் அரசியல் ரீதியாகவும் மிகப் பெரிய விவாதத்திற்கு உள்ளாகி இருக்கின்றன.
தற்போது ஆளும் கட்சியான பாஜக ஒரு வருடம் முன்பே தனது தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்த இடமே கார்ப்பரேட்டுகள் தான். மோடி மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வருவார், அப்போது பங்குச்சந்தை இதுவரை வரலாறு காணாத அளவுக்கு ஒரு லட்சம் புள்ளிகளை தொடும். இந்தியாவின் பொருளாதாரம் சர்வதேச அளவில் மேலும் முன்னேறும் என்பதுதான் பாஜக கார்ப்பரேட்டுகள் இடையே செய்த முதல் தேர்தல் பிரச்சாரம்.
ஆனால் அதற்கு நேர் மாறாக இப்போது பங்குச்சந்தை புள்ளிகள் குறைவதும் அந்நிய நேரடி முதலீடுகள் தொடர்ந்து இந்தியாவிலிருந்து வெளியேறுவதும் நடந்து கொண்டிருக்கின்றன. பொருளாதாரம் அரசியல் இரண்டையும் கவனித்து வரும் வல்லுனர்கள் இதுபற்றி கூறும் போது,
’இந்தியாவில் ஒவ்வொரு தேர்தலின் போதும் பன்னாட்டு முதலீட்டாளர்கள் புதிய ஆட்சி ஏற்படும் பட்சத்தில் புதிய அரசின் பொருளாதார ரீதியான அணுகுமுறை மாற்றங்கள்… தங்களுடைய வர்த்தகத்திலும் எதிரொலிக்கும் என்று கருதி சில நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது மீண்டும் மோடியே ஆட்சிக்கு வருவார் என்ற உறுதியான நம்பிக்கை கார்ப்பரேட்டுகள் இடையே இருந்தது, அதனால் இந்த அளவுக்கு அப்போது பங்குச்சந்தை சரிவோ அந்நிய முதலீடுகள் வெளியேற்றமோ இல்லை.
ஆனால், கடந்த மூன்று கட்ட தேர்தல்களில் வாக்கு சதவீதம் குறைவாக பதிவானதை அடுத்து… பாஜக முதலில் எழுப்பிய, ’ 400 இடங்களில் வெற்றி’ என்ற முழக்கம் பாஜகவினராலேயே கொஞ்சம் கொஞ்சமாக கைவிடப்பட்டு வந்தது.
இந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி திடீரென அதானி பற்றியும் அம்பானி பற்றியும் பேசினார். இத்தனை வருடங்கள் நாடாளுமன்றத்திலும் நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் எதிர்க்கட்சிகள் அதானி பற்றி, அதானிக்கும் மோடிக்கும் இருக்கக்கூடிய நெருக்கம் பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகளை கடுமையாக சுமத்திய போதும் அதற்கு மோடி நேரடியாக பதில் அளிக்கவில்லை.
ஆனால், தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தியை பார்த்து, ’ஏன் இப்போது அதானி அம்பானி பற்றி பேசுவதில்லை? அவர்களோடு டீல் செய்து கொண்டீர்களா?’ என்று கேள்வி எழுப்பினார். இது அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்ல பொருளாதார வட்டாரத்திலும் மிக அழுத்தமாக எதிரொலித்தது.
உடனடியாக இதற்கு வீடியோ மூலம் பதில் அளித்த ராகுல் காந்தி, ’என்ன மோடி… கொஞ்சம் பதற்றமாக இருக்கிறீர்கள் போல! இதுவரை அதானி பற்றியும் அம்பானி பற்றியும் மூடப்பட்ட கதவுகளுக்குள் அறைக்குள் அமர்ந்து தான் விவாதித்து இருப்பீர்கள். ஆனால் இப்போது முதல் முறையாக பொதுவெளியில் அதானி அதானி என்று பேசுகிறீர்கள்.
भाजपा के भ्रष्टाचार के टेम्पो का ‘ड्राइवर’ और ‘खलासी’ कौन है, देश जानता है। pic.twitter.com/62N5IkhHWk
— Rahul Gandhi (@RahulGandhi) May 8, 2024
அதானி டெம்போ மூலமாக யாருக்கு தேர்தல் பணம் அனுப்பினார் என்று அமலாக்க துறையையும் சிபிஐயும் வைத்து உடனடியாக விசாரியுங்களேன். நான் மீண்டும் இந்த தேசத்திற்கு உறுதியளிக்கிறேன்… இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு பிரதமர் மோடி மூலம் அதானி அம்பானி உள்ளிட்ட சிலரிடம் குவித்து வைத்திருக்கும் லட்சக்கணக்கான கோடிகளை எடுத்து கோடிக்கணக்கான ஏழைகளுக்கு கொடுப்போம்.
மகாலட்சுமி என்ற திட்டம் பெண்களுக்கான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல இப்போது காலியாக இருக்கும் 30 லட்சம் பணியிடங்கள் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு உடனடியாக நிரப்பப்படும், மோடியால் அதானி, அம்பானி உள்ளிட்ட வெகுசிலரிடம் குவிந்திருக்கும் பணத்தை எடுத்து ஏழைப் பெண்களுக்கு வருடம் ஒரு லட்ச ரூபாய் தருவோம். கோடிக்கணக்கான ஏழைப் பெண்களை லட்சாதிபதி ஆக்குவோம்’ என்று பதில் அளித்து வீடியோ வெளியிட்டு இருந்தார்.
மேலும் இன்று (மே 9) இரண்டாவது வீடியோவில்… ’பிரதமர் பதவி தனது கையை விட்டு போவதால் அதிக பதற்றம் அடைந்து ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்கிறார் மோடி. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் காலியாக இருக்கும் 30 லட்சம் அரசு பணியிடங்கள் நிரப்புவதற்கான நடவடிக்கை தொடங்கப்படும்’ என்று ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.
400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற முழக்கத்தை பாஜக கொஞ்சம் கொஞ்சமாக கைவிட்டது, தேர்தல் வாக்கு சதவீதம் குறைந்தது, அதானி அம்பானி முதலீட்டு பணத்தை எடுத்து ஏழைகளுக்கு கொடுப்போம் என்று ராகுல் காந்தி அறிவித்தது ஆகியவை கார்ப்பரேட் உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்தியாவில் மீண்டும் மோடி ஆட்சி அமையாது என்பதை கிட்டத்தட்ட உணர்ந்து கொண்ட பன்னாட்டு முதலாளிகள்… புதிய அரசு அமைந்ததும் அந்த அரசு கொண்டுவரும் புதிய விதிகளுக்கு ஏற்ப மீண்டும் நாம் இந்தியாவில் முதலீடு செய்து கொள்ளலாம் இப்போது ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று கருதி தங்களது முதலீடுகளை இந்தியாவிலிருந்து வெளியே கொண்டு சென்று கொண்டிருக்கின்றன. இதுதான் பங்குச்சந்தையிலும் எதிரொலிக்கிறது.
தாராளமாய பொருளாதாரக் கொள்கையை பின்பற்றும் இந்தியா போன்ற நாடுகளில் அரசியலும் பொருளாதாரமும் பிரிக்க முடியாதவை. அந்த அடிப்படையில் இந்தியாவில் ஆட்சி மாற்றம் அரசியல் மாற்றம் நடக்கும் என்பதை உணர்ந்துதான் தற்போதைய பெரும் கார்ப்பரேட்டுகள் தங்களுடைய முதலீட்டு மாற்றங்களையும் நடத்த ஆரம்பித்திருக்கிறார்கள்’ என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். இதை அறிந்து மோடி கடுமையான அதிர்ச்சியில் இருக்கிறார்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வனிந்து ஹசரங்கா… மதீஷா பதிரனா: இலங்கை டி20 ஸ்குவாட் இதோ!
தனுஷ் – ஏ.ஆர்.ரகுமானின் “அடங்காத அசுரன்”!
கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும் எட்டு நாளிலே (பத்து வருசத்துலே!?) தெரிஞ்சு போகும்னு சும்மாவா சொன்னாங்க