தேவர் தங்கக் கவசம்: எடப்பாடி- பன்னீர் மோதலில் தலையிடும் சசிகலா

அரசியல்

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் இருக்கும் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30 ஆம் தேதி அவரது குருபூஜை விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த வருடம் நடக்க இருக்கும் குருபூஜையின் போது தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் வழங்கப்பட்ட தங்கக் கவசத்தை யார் அணிவிப்பது என்று எடப்பாடி அணிக்கும், பன்னீர் அணிக்கும் போட்டி நிலவுகிறது.

“அதிமுகவின் பொருளாளர் நான் தான் என்பதால் வங்கி என்னிடமே தங்கக் கவசத்தை ஒப்படைக்க வேண்டும்” என்று பன்னீர் வங்கிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பதிலுக்கு எடப்பாடியால் பொருளாளராக நியமிக்கப்பட்ட திண்டுக்கல் சீனிவாசன் தன்னிடமே தங்கக் கவசத்தை ஒப்படைக்க வேண்டும் என கோரியுள்ளார்.

Thevar Golden Shield sasikala edapadi panneer

இது தொடர்பாக இன்று (அக்டோபர் 13) சசிகலா முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

சசிகலா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “அம்மாவும் நானும் 2010 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி தேவர் திருமகனாருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பசும்பொன் சென்றிருந்தோம்.

அச்சமயம் தேவர் திருமகனாரின் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிக்க வேண்டும் என்று அங்கு குழுமியிருந்த மக்களும், கோவை காமாட்சிபுரம் ஆதீனம் ஞானகுரு சிவலிங்கேஸ்வர சுவாமிகளும் வேண்டுகோள் வைத்தனர்.

அதைத் தொடர்ந்து தேவர் திருமகனாரின் சிலைக்கு 13 கிலோ எடையுள்ள தங்கக் கவசத்தை கழகம் சார்பில் செய்து அம்மா அவர்கள் 9-2-14 அன்று வழங்கினார்.

அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் தேவர் திருமகனாரின் ஜெயந்தி விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு வருகிறது.

இந்தத் தங்கக் கவசத்தை பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரையில் உள்ள வங்கியில் உள்ள பாதுகாப்புப் பெட்டகத்தில் வைத்திருந்து தேவர் ஜெயந்தி விழாவின் போது அணிவிக்கப்படுகிறது.

இது அம்மா அவர்களால் வழங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இது ஒரு வழக்கமான நடைமுறைதான். இதில் என்றைக்கும் எவ்வித இடையூறுகளும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய முக்கியப் பொறுப்பு நம் கட்சியினருக்குதான் இருக்கிறது.

விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போனதாக சரித்திரம் இல்லை என்பதை கழகத்தினர் அனைவரும் மனதில் வைத்து தொடர்ந்து பின்பற்றப்பட்டு வரும் நடைமுறைகளை பின்பற்றி சமூக நீதிக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த தேவர் திருமகனாருக்கு தங்கக் கவசம் அணிவித்து தேவர் ஜெயந்தி விழாவை சிறப்பாக கொண்டாடவேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார் சசிகலா.

வேந்தன்

இப்படி பேசியதால் ஸ்டாலின் உயர்ந்து நிற்கிறார் : பி.சி.ஸ்ரீராம்

வளைகாப்பு அமைச்சர் என்பது பெருமை: பிடிஆர்

+1
1
+1
2
+1
0
+1
2
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *