பாஸ்கர் செல்வராஜ்
நேற்றைய தொடர்ச்சி…
இஸ்ரேல் இந்தத் தாக்குதலை அறிந்து வினையாற்றுவதற்கு சில மணி நேரத்துக்கு உள்ளாக சண்டையிட்டு ஹமாஸ் போராளிகள் அப்பகுதிகளைக் கைப்பற்றியதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேலிய ராணுவத்தினரும் பொது மக்களும் கொல்லப்பட்டனர். அங்கிருந்த இருநூற்றுக்கும் மேற்பட்ட இஸ்ரேலிய ராணுவ வீரர்களையும் குடிமக்களையும் பிணை கைதிகளாகப் பிடித்துச் சென்றனர். இதுவரையிலும் கேட்கக் கேள்வியின்றி பாலஸ்தீன மக்களின்மீது மட்டுமல்லாது இந்தப் பகுதியில் உள்ள மற்ற இஸ்லாமிய நாடுகளின் இறையாண்மையை மதிக்காமல் தன் விருப்பம்போல் நேரடி-மறைமுகத் தாக்குதல் நடத்தி பலரையும் கொன்று அதைத் தங்களின் வலிமையின் அடையாளமாக மார்தட்டிய இஸ்ரேலின் மீதான இந்த வெற்றிகரமான தாக்குதலை மேற்கு ஆசிய இஸ்லாமிய மக்கள் தெருக்களில் கூடிக் கொண்டாடினார்கள்.
ஆனால், இஸ்ரேலிய ராணுவம் மட்டுமல்லாது… பொதுமக்களும் கொல்லப்பட்டதைக் கண்டு அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகம் அதிர்ச்சியில் உறைந்து போனது. இதுவரையிலும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு ராணுவம் பாலஸ்தீனத்தின் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொல்லும்போதெல்லாம் பார்த்து உருகாமல் இறுகி கல்லாகிப் போயிருந்த மேற்குலகின் இதயங்கள் இந்த இஸ்ரேலிய உயிரிழப்பை கண்டு இளக முடியாமல் உடைந்து நொறுங்கியது. முன்பு புழு பூச்சிகளைப்போல எண்ணி எட்டி உடைத்து அவர்கள் வாழ்ந்த சொந்த இடத்தில் இருந்து தூக்கியெறியப்பட்டு சொந்த நாட்டிலேயே அகதிகளாக ஆக்கப்பட்ட ஏதிலிகளின் இந்த அதிர்ச்சி ஓலமிடும் (Shockand aww) வகையிலான தாக்குதலைக் கண்டு ஆற்றாமையிலும் கோபத்திலும் குமைந்தார்கள். அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிட விரும்பும் இந்திய வம்சாவழி அரசியல்வாதியான நிக்கி ஹாலே அவர்களை மொத்தமாக முடித்துவிடுங்கள் (Finish them) நெதன்யாகு என்று கோபத்தில் பொங்கி வெடித்தார். உணவு, தண்ணீர், எரிபொருள், மின்சாரம் என எல்லாவற்றையும் தடைசெய்து இந்த காஸா பகுதி “மனித மிருகங்களைச்” சுற்றிவளைத்து முற்றிலுமாக முடிக்கப் போவதாகக் கோபத்தில் கொந்தளித்தார் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர்.
இதற்கு முன்பு காஸாவில் எத்தனையோ மனித அவலங்கள் நிகழ்ந்த போதெல்லாம் எந்தச் சலனமுமற்று இயல்பாக இருந்தவர்கள் இப்போது மட்டும் பொங்கி வெடிக்கும் இவர்களின் வன்மத்தைப் புரிந்துகொள்வது அவ்வளவு கடினமானதல்ல. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து காஸாவின்மீது போரை அறிவித்த இஸ்ரேல் அந்தப் பகுதியின் இருக்கும் அடுக்குமாடிக் கட்டடங்களை ஏவுகணை வீசி ஒரேயடியாக தரைமட்டமாக்கி தன் கோபத்தையும் வஞ்சத்தையும் தீர்த்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பதிலடி தாக்குதலில் இதுவரை 3,540 பேர் கொல்லப்பட்டு இருப்பதாகவும் 13,300 பேர் காயமடைந்திருப்பதாகவும் அதில் 1,300 குழந்தைகளும் அடக்கம் என்கிறது பாலஸ்தீன சுகாதார அமைச்சகம். இஸ்ரேல் தரப்பில் இதுவரை 1,400 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 4,475 பேர் காயம் அடைந்திருக்கிறார்கள்.
உக்ரைனைப்போல உலகத்தைப் பிரித்த தாக்குதல்
உக்ரைன் போரைப்போன்றே இந்தப் போரும் உலகைத் தெளிவாக இருமுகாம்களாகப் பிரித்துக் காட்டியது. மேற்குலக நாடுகள் எல்லாம் ஹமாஸ் தாக்குதலைக் கண்டித்து இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்தன. உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவைக் கண்டிக்க மறுத்து எதிர்நிலைப்பாடு எடுத்த இந்தியா இம்முறை மேற்குடன் இணைந்துகொண்டு ஹமாஸைக் கண்டித்து இஸ்ரேலிய ஆதரவு நிலைப்பாடு எடுத்தது. மேற்குலகம், இந்தியா தவிர்த்த மற்ற நாடுகள் ஹமாஸை கண்டிக்க மறுத்து போரைப் பெரிதுபடுத்தாமல் அமைதி காக்க வேண்டுகோள் விடுத்த அதேவேளை ஐநா தீர்மானத்தின்படி இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளை உருவாக்க வேண்டிய தேவையைத் தவறாமல் வலியுறுத்தின.
எதிரி யார்? பொதுமக்கள் யார்? என்று பிரித்தறிய முடியாத வகையில் இருபது லட்சத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் நாற்பது கிலோமீட்டர் நீளமும் 6-10 கிலோமீட்டர் அகலமும் கொண்ட அந்தச் சிறிய பகுதியில் அடர்த்தியாக வாழும் நிலையில் எல்லோரையும் எதிரியாகக் கருதி இஸ்ரேல் கண்மூடித்தனமான ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படி மொத்த இனத்தையே தண்டிப்பதற்கு நிபந்தனையற்ற ஆதரவையும் ஆயுதங்களையும் கொடுத்து வருகிறது அமெரிக்கா. உணவு, நீர், எரிபொருள், மருந்துகளை உள்ளே செல்லாமல் தடுத்து அவர்களை வதைக்கும் இஸ்ரேலின் போர்க்குற்றத்தை மறைத்து தாக்குதலை நியாயப்படுத்த அதிபர் பைடன் ஹமாஸ் நாற்பது குழந்தைகளை கழுத்தை அறுத்துக் கொன்றதாக வெளியான பொய்ச்செய்தி தொடர்பான காணொலியைத் தான் கண்ணால் கண்டதாகக் கூறினார். பின்பு வெள்ளை மாளிகை அதனை மறுத்தது.
நோக்கத்தில் வெற்றி இருப்பு கேள்வி
இதனிடையில் எங்கள் தாக்குதலின் குறியிலக்கு (Objective) நிறைவேறிவிட்டது; சமாதானப் பேச்சுவார்த்தைக்கு தாங்கள் தயாராக இருபதாக ஹமாஸ் அறிவித்தது. அடைந்த இலக்கு என்ன என்பதைத் தெரிவிக்கவில்லை. தாக்குதலுக்கு முன்பும் பின்பும் நடக்கும் அரசியலைத் தொகுத்துப் பார்க்கும்போது அதிநவீன போர் விமானங்கள், ஏவுகணைகள், எதிரிகள் எவரும் தொட்டுப் பார்க்க அஞ்சும் வகையான அணு ஆயுதங்கள், ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு, கேட்டுக் கேள்வியின்றி பல நாடுகளுக்குள் சென்று தாக்கும் அரசியல் பலம், உள்ளடி உளவு வேலைகளில் கைதேர்ந்த உளவு அமைப்பு, நவீன வேவு பார்க்கும் செயலி என உலகத்தின் முன்பு இஸ்ரேல் கட்டிவைத்திருந்த மாபெரும் வல்லரசுப் பிம்பத்தை சிலமணி நேரங்களில் உடைத்திருக்கிறது ஹமாஸ். அந்தப் பகுதியில் உள்ள மக்கள் இனி பயத்தை விடுத்து துணிச்சலாக எதிர்த்து நிற்கும் மனபலத்தை வழங்கி இருக்கிறது. இஸ்ரேலியக் குடியேறிகளின் இருமாப்பை உடைத்து அவர்களின் ஆக்கிரமிக்கும் எண்ணத்தைக் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது. இனி எந்த இஸ்ரேலியரும் புதிதாக ஆக்கிரமிக்கும் இடத்தில் வந்து குடியேற இருமுறை யோசிப்பார். இறுதியாக இந்த மனித அவலத்தைக் காணாமல் முகத்தைத் திருப்பிக்கொண்ட உலகை வலுக்கட்டாயமாக தன்னை நோக்கி திருப்பி அவர்களின் பிரச்சினைக்கான தீர்வு குறித்து பேச வைத்திருக்கிறது.
அதேசமயம் பணயக் கைதிகளைப் பிடித்துச் செல்வதன் மூலம் இஸ்ரேலைத் தாக்குதல் நடத்த முடியாமல் தடுத்து பேச்சுவார்த்தைக்கு வரவைக்கலாம் என்ற ஹமாஸின் எண்ணம் பொய்யாகி இருக்கிறது. சொந்த மக்களின் உயிர் போனாலும் பழிவாங்கியே தீருவேன் என்று காசாவைத் தரைமட்டமாக்கி வருகிறது இஸ்ரேல்.ஹமாஸ் ஆரம்பகட்ட வெற்றியைப் பெற்றாலும் நீண்டகால நோக்கில் இஸ்ரேலை எதிர்த்து வெற்றிபெற முடியாது என்பது அதற்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும். அதோடு இது பாலஸ்தீன மக்களையும் தன்னையும் பூண்டோடு ஒழிக்கும் வாய்ப்புகளைக் கொண்டிருப்பதையும் அந்த அமைப்பு நிச்சயம் கணித்திருக்கும். அப்படி இருக்க, இந்தத் தற்கொலைக்குச் சமமான முடிவை ஏன் எடுத்தது? அப்படியான முடிவை எடுக்க வைத்தது எது?
அடுத்த கட்டுரையில் காணலாம்.
கட்டுரையாளர் குறிப்பு
பாஸ்கர் செல்வராஜ் – தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்.
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
அக்காவுக்கு ஸ்டாலின் மெசேஜ், அவருக்கு மோடி மெசேஜ்: அப்டேட் குமாரு
டிஜிட்டல் திண்ணை: பங்காரு அடிகளார் பாலிடிக்ஸ்!