வைஃபை ஆன் செய்ததும் பல்வேறு மாவட்டங்களில் நடக்கும் அரசு ஊழியர்களின் தொடர் போராட்டங்கள் பற்றிய செய்திகளும் புகைப்படங்களும் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.
அவற்றை பார்த்தபடியே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“கடந்த சில வாரங்களாக சென்னையில் ஆசிரியர் சங்கத்தினரின் போராட்டம், செவிலியர்கள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் போராட்டங்கள் நடைபெற்றன. சென்னைக்கு வெளியே பல்வேறு மாவட்டங்களில் போக்குவரத்துக் கழக ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், டாஸ்மாக் ஊழியர்கள், வருவாய் துறை ஊழியர்கள் என்று பல்வேறு தொழிற்சங்கத்தினரின் போராட்டங்களோ அல்லது போராட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டங்களோ நடைபெற்று வருகின்றன.
இந்த தொடர் போராட்டங்களுக்கு பின்னால் ஒரு பெரிய அரசியல் இருக்கிறது என்கிறார்கள் தொழிற்சங்க வட்டாரத்தில். கடந்த வாரம் முதலமைச்சர் ஸ்டாலினை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தனது கட்சி நிர்வாகிகளோடு சந்தித்தார்.
அப்போது ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட தொழிற் சங்கத்தினரின் கோரிக்கைகள் பற்றிய ஒரு மனுவையும் அவர் முதலமைச்சரிடம் அளித்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கே. பாலகிருஷ்ணன் தொடர்ந்து வரும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டங்களை பற்றி முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்து சென்றுள்ளோம். இந்த ஆட்சியிலும் தீர்க்க முடியாத பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றை விரைவில் தீர்க்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்திருப்பதாக குறிப்பிட்டார். இதற்குப் பின் இரண்டாவதாகத்தான் கூட்டணி அரசியல் பற்றியே பேசினார் கே.பி.
இந்த சந்திப்புக்குப் பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரங்களில் விசாரித்த போது… ‘2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகளில் முக்கியமானது அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவேன் என்பதாகும். ஆனால் கடந்த மூன்று வருடங்களாக அது குறித்து எந்த ஒரு முக்கியமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதுதான் அரசு ஊழியர்கள் தரப்பில் கொந்தளிப்பாக இருக்கிறது.
இந்த நிலையில் அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்களில் கணிசமான பலத்தை பெற்றிருக்கிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளும் இது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ’2021 சட்டமன்றத் தேர்தலை நாம் சந்தித்தபோது நமது தொழிற்சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்களிடமே பழைய ஓய்வூதிய திட்டம் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அமல்படுத்தப்படும் என்று சொல்லி தான் ஓட்டு கேட்டோம். இன்று மீண்டும் 2024 மக்களவைத் தேர்தலின் போது மற்ற தொழிற்சங்க ஊழியர்களிடம் வாக்கு கேட்பது இருக்கட்டும்…. நமது தொழிற்சங்க தோழர்களிடையே நாம் போய் எப்படி உரிமையாக வாக்கு கேட்க முடியும்? எனவே முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தொடர் நெருக்கடி கொடுத்து 2024 மக்களவைத் தேர்தலுக்குள்ளாக அரசு ஊழியர்களின் முக்கிய பிரச்சனையான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். அதை நோக்கி நமது தொழிற்சங்கத்தினர் தொடர் போராட்டங்கள் நடத்திட வேண்டும்’ என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசியல் ரீதியாக திமுக கூட்டணியில் நாம் கேட்கும் எண்ணிக்கையில் தொகுதிகள் கிடைக்கிறதோ இல்லையோ நமது இந்த கோரிக்கையை நாம் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்’ என்று மார்க்சிஸ்ட் கட்சியின் தொழிற்சங்க நிர்வாகிகளிடையே முக்கிய பேச்சாக இருக்கிறது. இந்த அடிப்படையில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் என்பதே தற்போதைய நிலவரம்” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
சேப்பாக்கம் மைதானத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு போஸ்டர்!
லியோ சிறப்புக்காட்சி ரத்து: ரஜினி வருத்தம்… அரசாணை திருத்தம்!