நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள லியோ திரைப்படத்தின் சிறப்புக்காட்சிக்கு தமிழ்நாடு அரசு மீண்டும் இன்று (அக்டோபர் 13) புதிய கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ந் தேதி திரையரங்கில் வெளியாகிறது.
விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி!
லியோ படத்தின் சிறப்புக்காட்சிக்கு படத்தை தயாரித்துள்ள செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் சார்பில் சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசிடம் அனுமதி கோரப்பட்டது.
அதனை ஏற்றுக்கொண்ட தமிழ்நாடு அரசு கடந்த 11ஆம் தேதி வெளியிட்ட அரசாணையில், லியோ திரைப்படத்தை வரும் 19-ந் தேதியன்று அதிகாலை 4 மணி மற்றும் 7 மணி என்று மொத்தம் 6 காட்சிகளுக்கும், 20-ந் தேதி முதல் 24-ம் தேதி வரை காலை 7 மணி முதல் மொத்தம் 5 காட்சிகளுக்கும் அனுமதி வழங்கியது. தமிழ்நாடு அரசின் இந்த முடிவை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.
அரசு உத்தரவில் திடீர் மாற்றம்!
இந்த அரசாணையால் அதிகாலை முதல் லியோ சிறப்புக் காட்சிகள் திரையிடப்படும் எனக் கூறப்பட்டுவந்த நிலையில், தமிழ்நாடு அரசு இன்று புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி லியோ திரைப்படம் வெளியாகும் அக்டோபர் 19 முதல் 24ஆம் தேதி வரை ஆறு நாட்களுக்கு மட்டும்தான் சிறப்புக் காட்சி திரையிடப்பட வேண்டும், அதுவும் ஒரு நாளைக்கு ஒரு சிறப்புக்காட்சியுடன் ஐந்து காட்சிகள் மட்டும் தான் திரையிட வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.
மேலும் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி, அனைத்து காட்சிகளும் நள்ளிரவு 1.30 மணிக்குள் முடிந்து இருக்க வேண்டும் என்றும் அரசு இன்று வெளியிட்ட திருத்தப்பட்ட அரசாணையில் குறிப்பிட்டுள்ளது.
ரஜினி வருத்தம்!
இதற்கிடையே தமிழ்நாடு அரசின் இந்த திடீர் உத்தரவிற்கு ரஜினி தான் காரணம் என்றும் சினிமா வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.
கடந்த 11ஆம் தேதி லியோ திரைப்படத்திற்கு 2 சிறப்புக் காட்சிக்கும் தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கிய நிலையில், “ஜெயிலர் திரைப்படம் வெளியாகும் போது, ஏன் 4 மணி அதிகாலை சிறப்புக்காட்சிக்கு அனுமதி கிடைக்கவில்லை. இத்தனைக்கும் தயாரிப்பாளர் கலாநிதிமாறன் முதலமைச்சர் ஸ்டாலினின் நெருங்கிய உறவினர். ரஜினியும் ஸ்டாலினுடன் நல்ல நட்பில்தான் உள்ளார். ஆனாலும் ஜெயிலருக்கு சிறப்பு காட்சிகள் கொடுக்கப்படவில்லை.
ஆனால் விரைவில் அரசியலுக்கு வர உள்ள விஜய் திமுகவிற்கு மிகப்பெரும் சேதாரம் விளைவிப்பார் என்று கூறப்படும் நிலையில், அவரது லியோ திரைப்படத்திற்கு மட்டும் அதிகாலை சிறப்புக்காட்சிக்கு அரசு அனுமதி வழங்கியது எப்படி?” என்று கேள்வி ரஜினி வட்டாரங்களில் இருந்து எழுப்பப்பட்டுள்ளது. இது கலாநிதிமாறனை சென்றடைந்து அவர் மூலம் முதல்வர் செவிகளையும் எட்டியதாக தெரிகிறது.
இந்த நிலையில்… லியோ திரைப்படத்தின் முதல்நாளான 19ஆம் தேதியன்று வழங்கப்பட்ட 4 மணி மற்றும் 7 மணி சிறப்புக்காட்சிகளுக்கான அனுமதி தமிழ்நாடு அரசால் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 11ஆம் தேதி தமிழ்நாடு அரசு வெளியிட்டிருந்த அரசாணையில் ‘தளபதி’ விஜய் என்று குறிப்பிட்டிருந்த நிலையில், தற்போதைய அரசாணையில் அதுவும் திருத்தப்பட்டு, விஜய் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டு நாளில் அரசின் உத்தரவில் ஏற்பட்டுள்ள இந்த சர்ச்சைக்குரிய மாற்றங்களால் தற்போது மீண்டும் ரஜினி-விஜய் ரசிகர்களிடையே சமூகவலைதளங்களில் மோதல் எழுந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
11 லட்சம் பாலஸ்தீனர்களுக்கு 24 மணி நேர கெடு: ஐநா எச்சரிக்கை!