காங்கிரஸ் பொதுமக்களின் சொத்துக்களை பறித்து ஊடுருவல் காரர்களுக்கு கொடுத்துவிடும் என்று கூறியது தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார்.
பிரதமர் மோடி கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியபோது, ‘காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பொது மக்களின் சொத்துக்களை பறித்து ஊடுருவல்காரர்களுக்கு கொடுத்து விடும். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை என்று கூறினார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா’ என்று கேள்வி எழுப்பிருந்தார்.
இது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 22) உத்தரப்பிரதேச மாநிலத்தில் பேசிய பிரதமர் மோடி, சவுதி அரேபியா இளவரசரிடம் பேசி இந்திய இஸ்லாமியர்களுக்கான ஹஜ் பயண கோட்டாவை அதிகரிக்க செய்தேன்.
தற்போது முஸ்லிம் பெண்கள் தனியாகவும் ஹஜ் பயணம் செல்ல முடியும். இதன் மூலம் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய சகோதரர்களின் ஆசிர்வாதம் எனக்கு கிடைத்திருக்கிறது’ என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் தேர்தல் பயத்தால் மோடி மாறி மாறி பேசுகிறார் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.
இந்த சூழலில் மீண்டும் இன்று (ஏப்ரல் 23) ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “நேற்று முன்தினம் நான் ராஜஸ்தானுக்கு வந்திருந்தபோது, 90 வினாடிகள் கொண்ட எனது உரையில் சில உண்மைகளை நாட்டின் முன் வைத்திருந்தேன்.
இது காங்கிரஸ் மற்றும் இந்திய கூட்டணியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. உங்களின் சொத்துக்களை அபகரித்து காங்கிரஸ் கட்சி அதன் சிறப்பு வாய்ந்தவர்களுக்கு பங்கிட ஆழமான சதி செய்கிறது என்ற உண்மையை நாட்டு மக்களின் முன் வைத்தேன்.
அவர்களின் வாக்கு வங்கி அரசியலை அம்பலப்படுத்தினேன். காங்கிரஸ் உண்மையைக் கண்டு பயப்படுகிறது..
2014க்கு பிறகு மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். 2014இல் என்னை டெல்லியில் பணியாற்ற அனுமதித்தீர்கள். அப்போது யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத முடிவுகளை நாடு எடுத்தது.
இதுவே காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் இன்று ஜம்மு காஷ்மீரில் நமது படைகள் மீது கற்கள் வீசப்பட்டிருக்கும். எதிரிகள் எல்லை தாண்டி வந்திருப்பார்கள்.
2004 இல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் ஆந்திராவில் எஸ்சி எஸ்டி இட ஒதுக்கீட்டை குறைத்து முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முயன்றது தான் அக்கட்சியின் முதல் பணியாக இருந்தது.
இது முன்னோடி திட்டமாக, நாடு முழுவதும் முயற்சி செய்ய காங்கிரஸ் விரும்பியது.
2004 மற்றும் 2010 க்கு இடையில் ஆந்திராவில் முஸ்லிம் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த காங்கிரஸ் நான்கு முறை முயற்சித்தது. இருப்பினும் சட்டதடைகள் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் விழிப்புணர்வு காரணமாக காங்கிரசால் இந்த திட்டத்தில் வெற்றி பெற முடியவில்லை.
மீண்டும் 2011ல் நாடு முழுவதும் இதை அமல்படுத்த காங்கிரஸ் முயற்சித்தது. வாக்கு வங்கி அரசியலுக்காக எஸ்சி எஸ்டி மற்றும் ஓபிசிகளுக்கு வழங்கப்பட்ட உரிமைகளை பறித்து மற்றவர்களுக்கு வழங்கியது.
காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் சாசனம் பற்றியோ அம்பேத்கர் பற்றியோ அக்கறை இல்லை. எங்களுக்கு வாய்ப்பு கிடைத்ததும் எஸ்சி எஸ்டி இடஒதுக்கீட்டில் இருந்து முஸ்லீம்களுக்கு வழங்கப்படவிருந்த இட ஒதுக்கீட்டை நிறுத்திவிட்டோம்.
அவர்களுடைய ஆட்சியில் அனுமன் மந்திரம் கேட்பது கூட குற்றமாகியுள்ளது. காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் கர்நாடகாவில் அனுமன் மந்திரம் கேட்ட கடைக்காரர் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது” என்று மீண்டும் காங்கிரஸ் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி விளக்கமளித்துள்ளார்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோடி சர்ச்சை பேச்சு : எடப்பாடி, பன்னீர் ரியாக்சன் என்ன?
Ghilli: ரீ-ரிலீஸிலும் சாதனை… 3 நாட்களில் இத்தனை கோடியா?