பிரதமர் மோடி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
அவரது பேச்சுக்கு இந்தியா கூட்டணியை சேர்ந்த பல்வேறு தலைவர்களும் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
எனினும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர்களான அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இருவரும், மோடியின் பேச்சு தொடர்பாக அமைதி காத்து வந்த நிலையில் தற்போது கருத்து தெரிவித்துள்ளனர்.
மத துவேச கருத்துகளை பேசக்கூடாது!
எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப்ரல் 23) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, ”பிரதமர் மோடி ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது, இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும். வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும், நாட்டின் உயர் ஆட்சிப் பதவியில் உள்ள பிரதமரும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல. இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல.
அரசியல் கட்சித் தலைவர்களும், ஆட்சி அதிகாரத்தில் உயர் பதவியில் உள்ளவர்களும் இதுபோன்ற கருத்துகளைத் தவிர்ப்பது நாட்டின் நலனுக்கும், மத நல்லிணக்கத்திற்கும் நல்லது.
அரசியல் கட்சித் தலைவர்களின் இதுபோன்ற சர்ச்சை கருத்துகளால் சிறுபான்மையின மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், மத உணர்வுகளைத் தூண்டும் விதமாகவும் அமைகிறது.
தேர்தல் பிரச்சாரத்திற்காக கண்ணியம் தவறிய இதுபோன்ற மத துவேச கருத்துகளை யார் பேசினாலும் அது, இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். நாட்டின் நலனுக்காக இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை!
அதே போன்று மோடியின் பேச்சு தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்தார்.
அவர், ”கடந்த 10 ஆண்டு கால பிரதமர் மோடியின் சிறப்பான ஆட்சியில் நாட்டில் உள்ள சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை” என்று பன்னீர் பேசியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
வெறுப்புப் பேச்சு : மோடி மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு கோரும் திருமா