குஜராத்தில் புதிதாக பதவியேற்றிருக்கும் 16 அமைச்சர்களில் 4 பேர் கிரிமினல் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களாக உள்ளனர்.
தமிழக அமைச்சரவையில் இன்று (டிசம்பர் 14) இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இன்று இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்பு திட்ட அமலாக்கத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அத்துடன், நிர்வாக ரீதியாகவும் சில அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட்டிருப்பதுடன், கூடுதலாகவும் சில அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தின் நிலவரம் இப்படியிருக்க, குஜராத்திலோ புதிதாக பதவியேற்ற 16 அமைச்சர்களில் 4 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன என்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அது வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘குஜராத்தில் 182 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இரண்டுகட்டங்களாகக் கடந்த டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற்றது.
இதில், பாஜக 156 இடங்களைக் கைப்பற்றி, வரலாறு காணாத வெற்றி பெற்றது. ஏற்கெனவே 6 முறை ஆட்சி அமைத்துள்ள பாஜக, 7வது முறையாக ஆட்சியைப் பிடித்து சாதனை படைத்தது. இதையடுத்து அங்கு பூபேந்திர படேல் டிசம்பர் 12-ம் தேதி மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்றார். அவருடன் 16 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

இந்த புதிய அமைச்சர்களில் 4 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மீன்வளத் துறை அமைச்சர் பர்சோத்தம் சோலங்கி மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 420 மற்றும் 465இன் கீழ் மோசடி வழக்கு உள்ளது. அவரைத் தவிர மற்ற அமைச்சர்களான ஹர்ஷ் சங்கவி, ருஷிகேஷ் படேல், ராகவ்ஜி படேல் ஆகியோர் மீது இந்திய தண்டனைச்சட்டம் பிரிவுகள் 188, 500இன் கீழ் பொது ஒழுங்குக்கு கீழ்ப்படியாமை மற்றும் அவதூறு வழக்குகள் உள்ளன.
மேலும், இந்த புதிய அமைச்சரவையில் முதலமைச்சர் பூபேந்திர படேல் உள்பட 16 பேர் பெரும் பணக்காரர்களாக உள்ளனர். இதில் முதலிடம் பிடித்திருப்பவர் பல்வந்த்சிங் ராஜ்புத். இவரது சொத்து மதிப்பு ரூ.372.65 கோடி ஆகும்.
இந்த முறை பாஜக சார்பில் போட்டியிட்ட 132 பேர் அதிகமான சொத்துக்களைக் கொண்டுள்ளனர். இதில் 74 எம்.எல்.ஏக்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களின் சொத்து மதிப்பு கடந்த 2017ஆம் ஆண்டைக் காட்டிலும் தற்போது 40 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது வெற்றிபெற்ற வேட்பாளர்களின் சொத்து மதிப்பு ரூ.8.46 கோடியாக இருந்தது. அவை, தற்போது இரண்டு மடங்காக அதிகரித்து ரூ.16.41 கோடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெ.பிரகாஷ்
41 ஆயிரத்தை எட்டும் தங்கம் விலை!
அமைச்சரானது முதல் கோபாலபுரம் வரை : உதயநிதியின் புகைப்பட தொகுப்பு!
வருமானவரித்துறையும் அமலாக்கப் பிரிவும் எதிர்க்கட்சிகளுக்கு மட்டும் தான் ஆளும்ம் பாஜகவிளற்கு கிடையாது