நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி எந்த கேள்விகளுக்கும் பதில் சொல்ல முடியாததால் நாடகத்தை நடத்திக்கொண்டிருக்கிறார் என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
திமுக முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மகனும் திமுக மாநில அயலக அணி துணைச் செயலாளருமான பரிதி இளம்சுருதி மற்றும் நந்தினி (எ) கனிஷ்கா இணையர் திருமணத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 10) சென்னையில் நடத்தி வைத்தார்.
பின்னர் திருமண நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “இந்த திருமண நிகழ்ச்சிக்கு வந்திருக்கக்கூடிய சில கழக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் ஈரோட்டில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் பணியாற்றிக்கொண்டு ஒரு நாள் விடுமுறை கேட்டு அனுமதி பெற்று இங்கு வந்துள்ளார்கள்.
எனவே திருமணம் முடிந்த கையோடு அவர்கள் எல்லோரும் ஈரோட்டிற்கு புறப்பட உள்ளார்கள்.
அவர்கள் புறப்படுகிறார்களா என்று கண்காணிக்கூடிய நிலையில் நான் உள்ளேன்.
நம்முடைய குடும்பத்தின் பிள்ளையாக பரிதி இளம்சுருதி உள்ளார். அவருடைய உடம்பிலே கருப்பு சிவப்பு ரத்தம் தான் ஓடிக்கொண்டிருக்கிறது.
அதனால் இது ஒரு குடும்ப விழாவாக நடந்து கொண்டிருக்கிறது.
இன்றைக்கு பிப்ரவரி 10-ஆம் தேதி, இதே நாளில் தான் 1969-ஆம் ஆண்டு கலைஞர் முதல்வராக பொறுப்பேற்றார்.
திட்டமிட்டு இந்த திருமணத்தை நடத்தினார்களா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இது பொருத்தமாக அமைந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்விகள் எதற்கும் பதில்சொல்ல முடியாத வகையில் ஒரு நாடகத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்.
திமுக நாடாளுமன்ற குழு தலைவராக உள்ள டி.ஆர்.பாலு எழுப்பும் கேள்விகளுக்கு பதில் இல்லை. சேது சமுத்திர திட்டத்தை பற்றி பேசி அதனை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று கேட்டால் அதற்கும் பதில் இல்லை.
வருடத்திற்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருவோம், வெளிநாட்டு கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவருடைய வங்கி கணக்கிலும் 15 லட்சம் தருவோம் என்ற மோடியின் வாக்குறுதி என்ன ஆனது?,
நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, கனிமொழி, தயாநிதி மாறன், தமிழச்சி தங்க பாண்டியன் கேட்கும் கேள்விகளுக்கு அவர்களிடம் பதில் இல்லை.
இப்படிப்பட்ட நிலையில் தான் இன்றைக்கு மத்தியில் ஆட்சி நடைபெற்று வருகிறது.
எப்படி தமிழகத்தில் 2021-ஆம் ஆண்டு விடியல் ஏற்பட்டதோ,
அதேபோல் 2024-ஆம் ஆண்டு இந்தியாவிற்கே விடியலை ஏற்படுத்தி தரப்போகிற ஒரு நிலை ஏற்படும் அதற்கு தயாராக இருங்கள்.” என்று தெரிவித்தார்.
செல்வம்
‘டாடா’ ரிலீஸ்: கவின் வெளியிட்ட வீடியோ!
துருக்கி நிலநடுக்கம்: 20 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கையும் அச்சுறுத்தும் இயற்கையும்!