கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் இன்று (ஏப்ரல் 15) உத்தரவிட்டுள்ளது.
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, ஏப்ரல் 1 -ஆம் தேதி வரை அமலாக்கத்துறையினர் காவலில் எடுத்து விசாரித்தனர்.
அதன்பிறகு டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால். இந்நிலையில், தன்னை அமலாக்கத்துறை கைது செய்தது தவறு என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்வரண காந்த ஷர்மா, அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டது செல்லும் என்று தீர்ப்பளித்தார்.
டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி, “நீதிமன்றத்தின் மனசாட்சியை அதிர்ச்சியடைய செய்யும் வகையில், சில உண்மைகளை நான் இங்கே சொல்ல விரும்புகிறேன். சட்டத்திற்கு புறம்பாக அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை பிரச்சாரம் செய்யாமல் முடக்குவதற்காக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையின் முதல் தகவல் அறிக்கையில் கெஜ்ரிவால் பெயர் இடம்பெறவில்லை” என்ற வாதத்தை முன்வைத்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி சஞ்சீவ் கண்ணா, “இந்த வழக்கில் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டார்.
சிங்வி, “ஏப்ரல் 19-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிடுங்கள்” என்று வேண்டுகோள் வைத்தார்.
அதற்கு நீதிபதி, ”நான் குறுகிய காலத்திற்குள் பதிலளிக்க உத்தரவிடுவேன். ஆனால், உங்களது பரிந்துரை சாத்தியமில்லை. ஏப்ரல் 29-ஆம் தேதிக்குள் அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும்”என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
இந்தநிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவல் நீட்டிப்பை ஏப்ரல் 23-ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
புதிய பிசினஸ் ‘ஆரம்பித்த’ அறந்தாங்கி நிஷா… குவியும் வாழ்த்துகள்!
மின்னம்பலம் மெகா சர்வே: ஸ்ரீபெரும்புதூரில் முடிசூடப் போவது யார்?