மதுரை மாநகரின் பொருளாதாரத்தை வளர்க்க மாட்டுத்தாவணியில் டைடல் பூங்கா அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மதுரையில் இன்று (செப்டம்பர் 16) தோள் கொடுப்போம் தொழில்களுக்கு தென்மண்டல மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.
வங்கிக்கடனுக்கான தடையின்மை சான்று, குடிநீர் இணைப்பு உள்ளிட்ட 12 சேவைகளுக்கு ஆன்லைன் வசதியை அவர் தொடங்கி வைத்தார்.
சொத்து பிணைய உரிமை பத்திரம் பதிவு செய்ய ஆன்லைன் வசதி திட்டம், சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள சிறு,குறு நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் ஆன்லைன் வசதி, வாடகை ஒப்பந்த பத்திரத்தை ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் வசதி போன்ற திட்டங்களையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
”பாண்டியர் காலத்தில் தமிழ் வளர்த்த மதுரை தற்போது தொழில் வளர்ப்பிலும் சிறந்து விளங்குகின்றது. மதுரை மாவட்டத்தில் சுமார் 50,000 குறு,சிறு, நடுத்தர தொழில்கள் இயங்கி வருகின்றன.
இவற்றின் மூலம் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு வேலை கிடைக்கிறது. தமிழ்நாட்டில் தனித்தன்மையான பொருட்கள் ஏராளம்.
குறிப்பாக புவிசார் குறியீடு பெற்ற 42 பொருட்களில் 18 பொருட்கள் தென்தமிழ்நாட்டைச் சார்ந்தவை.
சிறு,குறு, நடுத்தர தொழில்களுக்கு சொத்து பிணையில்லா கடன் உத்தரவாத திட்டத்தின் மூலம் 81 நிறுவனங்களுக்கு ரூ. 20 கோடிக்கு மேல் கடன் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் எளிமையாக தொழில் புரியும் மாநிலங்களில் தமிழ்நாடு 14வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. முதலிடத்தை பிடிப்பதே நமது இலக்கு.
தகவல் தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்தும் வண்ணம் 2000 ஆம் ஆண்டு கலைஞரால் சென்னையில் டைடல் பூங்கா தொடங்கப்பட்டது.
தகவல் தொழில்நுட்பம் போன்ற அறிவு சார்ந்த தொழில்களுக்கான முக்கிய மையமாக மதுரையை மாற்ற இங்கும் டைடல் பூங்கா நிறுவப்பட இருக்கிறது. மதுரை நகரின் மையப்பகுதியான மாட்டுத்தாவணியில் இரண்டு கட்டங்களாக பூங்கா கட்டப்படும்.
முதல்கட்டமாக ரூ. 600 கோடி திட்ட மதிப்பீட்டில் 5 ஏக்கரில் அமைக்கப்படும். 2ஆம் கட்டமாக மேலும் 5 ஏக்கரில் விரிவுப்படுத்தப்படும்.
இப்பூங்காவானது புதிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு தரமான உட்கட்டமைப்பு வதிகளை வழங்குவதுடன் மதுரையின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும்.
முதல்கட்டத்தில் 10,000 பேர் இதனால் வேலை வாய்ப்பு பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறு,குறு, நடுத்தர தொழில்களின் வளர்ச்சி என்பது ஒரு மாநிலத்தின் வளர்ச்சியாகும். எனவே அதன் வளர்ச்சிக்கு அரசு உறுதுணையாக இருக்கும்” என்றார்.
மதுரையில் ஐடி பார்க் என்ற முதல்வரின் அறிவிப்பு தென் மாவட்ட இளைஞர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கலை.ரா
தமிழகம் முழுவதும் காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட்டது!