”நூறு நாளில் 10 ஆயிரம் பாஜக கொடிக்கம்பங்கள்”: அண்ணாமலை சபதம்!

அரசியல்

தனது வீட்டருகே இருந்த பாஜக கொடிக்கம்பம் போலீசாரால் அகற்றப்பட்ட நிலையில், ”நவம்பர் 1ஆம் தேதி தொடங்கி அடுத்த 100 நாட்களில் ஒவ்வொரு நாளும் தமிழகம் முழுவதும் 100 பாஜக கொடிக்கம்பங்கள் நடப்படும்” என்று அண்ணாமலை அறிக்கை விடுத்துள்ளார்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டின் அருகே அனுமதியின்றி 100 அடி உயரத்தில் பாஜகவினர் கொடிக் கம்பம் நட்டனர்.

இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்த நிலையில், அதனை அகற்ற காவல்துறையினர் ஜேசிபி வாகனத்துடன் அங்கு வந்தனர்.

இதனை அறிந்த பா.ஜ.க.வினர் அங்கு குவிந்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு,  ஜேசிபி வாகனத்தை அடித்து நொறுக்கியுள்ளனர்.

இதனையடுத்து மோதலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினரை போலீஸார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். மேலும், அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடிக் கம்பத்தையும் அங்கிருந்து அகற்றினர். இது அப்பகுதியில் நேற்று நள்ளிரவு முதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “குண்டு வைத்து மக்கள் பலரைக் கொன்ற தீவிரவாதிகளை எல்லாம், அரசியலுக்காக விடுதலை செய்யத் துடிக்கும் திமுக, தீவிரவாதிகள் காரில் வெடிகுண்டுகளோடு சுதந்திரமாகச் சுற்றித் திரியும் அளவுக்கு உளவுத்துறையில் கோட்டை விட்ட திமுக, பனையூரில் கிளை தலைவர் ஏற்பாட்டில் நடப்பட்டிருந்த கொடிக்கம்பத்தை அகற்ற, தீவிரவாதிகளைக் கைது செய்யப் போவது போல நள்ளிரவில் பெரும் போலீஸ் படையுடன் புறப்பட்டு வந்தது பெரும் வினோதம்.

திமுக அரசின் உத்தரவின் பேரில், நள்ளிரவில் கொடிக்கம்பத்தை அகற்ற வந்த காவல்துறையினரை எதிர்த்துப் போராடிய பாஜக  சகோதர சகோதரிகள் மீது, காட்டுமிராண்டித் தனமான தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.

பொதுமக்களை ஏய்த்து பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கும் திமுக, எங்கள் தொண்டர்கள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

அதிகாரத் திமிரில் அராஜகம் செய்து கொண்டிருக்கும் திமுக, தமிழக பாஜகவின் ஒரு கொடிக்கம்பத்தை அகற்றிவிட்டதால் வெற்றி பெற்றதாக நினைத்துக் கொள்ள வேண்டாம்.

நவம்பர் 1ஆம் தேதி தொடங்கி 100 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் தமிழகம் முழுவதும் 100 பாஜக கொடிக்கம்பங்கள் நடப்படும். பத்தாயிரமாவது கொடி கம்பம் அடுத்த வருடம் பிப்ரவரி 8ஆம் தேதி (100வது நாள்) நேற்று காவல்துறையினரின் தடியடியில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சகோதரர் விவின் பாஸ்கரன் முன்னிலையில் கொடி கம்பம் அகற்றப்பட்ட அதே பனையூரில் நடப்படும் என்பதையும் ஊழல் திமுக அரசுக்கு மிக பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

அண்ணாமலை வீட்டு முன் கொடிக்கம்பம்… ஜேசிபியை அடித்து நொறுக்கிய பாஜகவினர் கைது!

அரபிக் கடலில் உருவானது ’தேஜ்’ புயல்… தமிழ்நாட்டிற்கு பாதிப்பு?

+1
0
+1
0
+1
0
+1
4
+1
2
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *