பொருளாதார நெருக்கடிக்கு இதுதான் காரணம் : ராஜினாமா கடிதத்தில் கோத்தபய

அரசியல்

இலங்கையில் அமைதியை நிலைநாட்டச் சிறப்புக் குழு ஒன்றை அமைக்கவுள்ளதாக இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். அதேசமயத்தில் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க அனைத்து சாதகமான நடவடிக்கையை எடுத்ததாக கோத்தபய ராஜபக்சே தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே , மக்களின் போராட்டத்தால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இலங்கையிலிருந்து மாலத்தீவுக்குச் சென்று அங்கிருந்து சிங்கப்பூருக்குத் தப்பிச் சென்றார். இந்நிலையில் ரணில் விக்ரமசிங்கே இடைக்கால அதிபராக நேற்று ( ஜூலை 15 )பதவியேற்றுக் கொண்டார்.

அதைத்தொடர்ந்து அவர் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அதில், “அதிபரை அழைக்கும்போது, மேதகு என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க முடிவு செய்துள்ளேன். அதிபரின் கொடியும் நீக்கப்படுகிறது. இனி தேசியக்கொடி மட்டுமே பயன்படுத்தப்படும். நாடு எதிர்நோக்கியுள்ள அபாய நிலையை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அரசியல்வாதிகள் தங்கள் லட்சியங்களை ஒதுக்கிவைத்துவிட்டு, நாட்டைப் பற்றி சிந்திக்க வேண்டும். மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் மாற்றத்திற்கான வழியை ஏற்படுத்தி கொடுக்க , 19வது அரசியலமைப்பு திருத்தத்தை அமல்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

மேலும் அவர், போராடும் உரிமை அனைவருக்கும் உள்ளதாகவும் அமைதியான ஆர்ப்பாட்டங்களுக்கு நான் நூறு சதவீதம் ஆதரவாக இருக்கிறேன். ஆனால் வன்முறையை ஒருபோதும் ஏற்க முடியாது. நாட்டில் அமைதியை நிலைநாட்ட அமைத்துள்ள குழுவில் எந்த அரசியல் தலையீடும் இல்லாமல் வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க முழு அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது என கூறினார்.

இந்த நிலையில் அதிபர் மாளிகை, பிரதமர் இல்லம், பிரதமர் அலுவலகம் போன்ற இடங்களில் போராட்டக்காரர்களால் ஏற்பட்ட சேதங்களை கணக்கிடும் பணிகள் தொடங்கியுள்ளன. மகிந்த ராஜபக்சே , பசில் ராஜபக்சே ஆகிய இருவரும் ஜூலை 28 வரை நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது .

இந்நிலையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக இன்று இலங்கை நாடாளுமன்றம் கூடியது. அப்போது கோத்தபய ராஜபக்சேவின் ராஜினாமா கடிதம் வாசிக்கப்பட்டது.

அதில், “நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி முந்தைய ஆண்டுகளில் நடந்த தவறான நிர்வாகத்தால் வேரூன்றியது. இதனுடன் கோவிட்-19 தொற்றுநோயும் சேர்ந்துகொண்டது. கொரோனா தாக்கத்தால் இலங்கைக்குச் சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து பணம் அனுப்புதல் ஆகியவற்றை வெகுவாகக் குறைத்தது.

இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்கு, அனைத்துக் கட்சி அல்லது ஐக்கிய அரசாங்கத்தை அமைக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைப்பது உட்பட, சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் நான் எடுத்தேன். எனது தாய்நாட்டிற்கு என்னால் இயன்றவரைச் சேவை செய்தேன். எதிர்காலத்திலும் அதைத் தொடர்ந்து செய்வேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *