ஆரா
2014ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி ஆர்.எஸ். எஸ். அமைப்பு தமிழகத்தில் சென்னை, மதுரை, திண்டுக்கல், கோவை உள்ளிட்ட நகரங்களில் பேரணி நடத்தத் திட்டமிட்டது. இது தொடர்பாக அந்தந்தப் பகுதி காவல்துறையினரிடம் அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டது.
2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக முதல்வராக காரில் தேசியக் கொடி கட்டிக்கொண்டு சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்புக்காக பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா முன்னால் ஆஜர் ஆனார் ஜெயலலிதா. சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உட்பட நால்வருக்கும் நான்கு வருட சிறை தண்டனையும் ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து குன்ஹா தீர்ப்பளித்தார்.
முதல்வராக பெங்களூரு சென்ற ஜெயலலிதாவின் காரில் இருந்து தேசியக் கொடி கழற்றப்பட்டது. அவரிடமிருந்து முதல்வர் பதவியும் கழற்றப்பட்டது, எம்.எல்.ஏ.பதவியும் கழற்றப்பட்டது. நீதிமன்ற வளாகத்திலேயே சில நிமிடங்கள் தனது வழக்கறிஞர்களோடு ஆலோசித்தார் ஜெயலலிதா. பின் அப்படியே பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.
அப்போது ஜெயலலிதாவின் பிரதிநிதியாக ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியில் இருக்கிறார். ஆவணங்களின்படி பார்த்தால் அது ஓ.பன்னீர் ஆட்சிதான். ஆனால் அரசியல் ரீதியாக, கட்சி ரீதியாக, எதார்த்த ரீதியாகப் பார்த்தால் சிறையில் இருந்தபடி ஆட்சி நடத்தியது ஜெயலலிதாதான்.
ஓ.பன்னீர் முதல்வர் என்ற பொறுப்பில் இருந்தாலும் அவரை முதலமைச்சர் ஓ.பன்னீர் என்றுகூட ஜெயா டிவி சொல்லவில்லை. மாறாக ஜெயலலிதா மக்களின் முதல்வர் என்ற சிறப்பு அடைமொழியில் அழைக்கப்பட்டார். அவர் 22 நாட்கள் சிறையில் இருந்த நிலையில் அக்டோபர் 18ஆம் தேதி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
இப்படியாக ஜெயலலிதா மக்களின் முதல்வராக இருந்த நிலையில்தான் சென்னை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட ஏழு இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்தத் திட்டமிட்டது. ராஜேந்திர சோழன் பதவியேற்ற ஆயிரமாவது ஆண்டினை முன்னிட்டு இந்த பேரணி நடத்துவதாக அறிவித்தது ஆர்.எஸ்.எஸ். இதற்காக முறைப்படி அந்தந்தப் பகுதி போலீஸ் அதிகாரிகளிடம் அனுமதி கேட்டு மனு கொடுக்கப்பட்டது.
ஆனால் தமிழக காவல் துறை அப்போது ‘மக்கள் முதல்வர்’ ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. இப்போது இருப்பதுபோல, ஓ.பன்னீர் அப்போது இல்லை. ஏனெனில், அப்போது ஜெயலலிதா உயிரோடு இருந்தார். ஜாமீனில் வெளியே வந்த அவர் வெளியே எங்கும் வராமல் போயஸ் கார்டனிலேயே இருந்தார்.
தமிழகத்தில் சட்ட ஆவணங்களின்படி ஜெயலலிதா முதல்வராக இல்லை. ஏன் அவர் அப்போது ஒரு எம்.எல்.ஏ.கூட இல்லை. ஜாமீனில் வெளியே இருக்கும் ஒரு குற்றவாளியாகத்தான் இருந்தார். ஆனாலும் அவரது விழி அசைவில்தான் தமிழ்நாட்டின் நிர்வாகம் நடந்தது என்பது சொல்லித் தெரிய வேண்டிய புதிய விஷயம் இல்லை. ஏனெனில் அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அடிக்கடி மக்களின் முதல்வரான ஜெயலலிதாவை கார்டனுக்கு சென்று பார்த்துவந்தது அரசியலில் எந்த ஆச்சரியத்தையும் ஏற்படுத்தவில்லை.
மக்களின் முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் ஆர்.எஸ்.எஸ். பேரணி பற்றி கேட்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ்.கேட்ட ஏழு இடங்களிலும் பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாகச் சென்னை உயர் நீதிமன்றத்துக்குச் சென்றனர்.
உயர் நீதிமன்றம் நாளை பேரணி என்றால் இன்று வழக்கை விசாரித்து, காவல் துறையினரின் உரிய எச்சரிக்கைகளைப் பின்பற்றி பேரணி நடத்த அனுமதி அளித்தது. ஆனாலும் மறுநாள் நவம்பர் 9ஆம் தேதி தமிழகத்தின் எந்த இடத்திலும் ஆர்.எஸ்.எஸ்.பேரணி நடத்த முடியவில்லை. சென்னையில் எழும்பூர் ராஜ ரத்தினம் ஸ்டேடியம் அருகில் இருந்து பேரணியாக முயன்ற 300 பெண்கள் உட்பட 4,500 ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டனர்.
அப்போது ஆர்.எஸ்.எஸ். பகிரங்கமாக ஜெயலலிதாவைத் தாக்கியது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாநில இணைச் செயலாளர் ராம மூர்த்தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “அரசியல் அழுத்தங்களால் மாநில அரசு எங்களுக்கு அனுமதி மறுத்துள்ளது. காவல் துறையால் செயல்பட முடியவில்லை’’ என்று சொல்லியிருக்கிறார்.
எந்த அரசியல் அழுத்ததால் அப்போது மாநில அரசு ஆர்.எஸ்.எஸ்.பேரணியை தடுத்து நிறுத்தியிருக்கும்? மத்திய அரசின் அரசியல் அழுத்தம் அப்போது தமிழக அரசின் மீது ஏவப்பட்டு அதற்கு மதிப்பு கிடைத்திருந்தால் நீதிமன்றம் அனுமதி அளித்தும் ஆர்.எஸ்.எஸ்.பேரணி நிறுத்தப்படுமா?
அப்படியென்றால் ஜெயலலிதாவை அப்போது மோடி கட்டுப்படுத்த முடியவில்லை என்பது உண்மையாகிறதா? ஆக ஆர்.எஸ்.எஸ். அப்போது மோடி மூலம் கொடுத்த அரசியல் அழுத்தம் ஜெயலலிதா முன்பு எடுபடவில்லை என்பது உண்மையாகிறதா?
(ஆட்டம் தொடரும்)