தனியார் நிறுவனங்களில் 12 மணி நேர வேலை திட்டத்தை அமல்படுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்துக்கு எதிராக திமுகவின் கூட்டணிக் கட்சிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான சிஐடியு, வாலிபர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் போராட்டத்தில் இறங்கியுள்ளன.
இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டுவந்த சட்டத் திருத்தத்தில் கூட ஸ்டாலின் தலைமையிலான மாநில அரசு கொண்டுவந்ததைப் போல மோசமான ஷரத்துகள் இல்லை என்று குற்றம் சாட்டுகிறார் சிஐடியு அமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார்.
இன்று (ஏப்ரல் 22) தனது சமூக தளப் பக்கத்தில் இதுகுறித்து எழுதியுள்ள ஆறுமுக நயினார், “ தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த 12.4.2023 அன்று தொழிலாளர் துறை அமைச்சர் 1948ம் ஆண்டு தொழிற்சாலைச் சட்டத்தில் சில திருத்தங்களை முன் மொழிந்தார்.
இந்த சட்டத்திருத்தத்தைக் கைவிட வேண்டுமென சிபிஐ(எம்), சிபிஐ, மதிமுக, காங்கிரஸ், விசிக போன்ற கட்சிகள் கடுமையாக எதிர்த்த பின்பும், 21.4.2023 அன்று இச்சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டுவிட்டது.
திமுக அரசு இச்சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 40,000-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவரையும் அடிமைகளைப் போல வேலை வாங்க முதலாளிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ள தொழிலக பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் தொகுப்பு சட்டத்தை அடிப்படையாக வைத்து இச்சட்டத்திருத்தத்தை முன்மொழிவதாக தமிழக அமைச்சர்கள் கூறியுள்ளது பற்றி கருத்து தெரிவித்துள்ள ஆறுமுக நயினார்,
“அமைச்சர்களின் இந்த காரணங்கள் அபத்தமானவை. ஒன்றிய அரசு கடந்த 2019ம் ஆண்டு, நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களை பாதிக்கும் அடிப்படையில் 4 சட்டத்தொகுப்புக்களை நிறைவேற்றியது. இந்த சட்டத் தொகுப்புக்களை இடதுசாரி கட்சிகள் எதிர்த்தன. திமுகவும் எதிர்த்தது. இப்போதும் இந்த சட்டத் தொகுப்பிற்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
சட்டத்தொகுப்பு நிறைவேற்றப்பட்டு 4 ஆண்டுகளாகியும் கடும் எதிர்ப்பு காரணமாக, நிறைவேற்றிய சட்டத்தை அமல்படுத்த மோடி அரசு தயங்கி வருகிறது. ஒன்றிய அரசே நிறைவேற்றத் தயங்கி வரும் ஒரு மோசமான சட்டத்தை முன்னுதாரணமாகக் கொண்டு, இச்சட்டத்தை திருத்துவதாக தொழிலாளர் அமைச்சர் கூறுவது மிகவும் அபத்தமானது.
அதைவிட அபத்தம், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ள விளக்கம். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் அவசியத் தேவையையொட்டி இச்சட்டத்தை நிறைவேற்றியதாக கூறியுள்ளார். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு தொழிற்சாலைகள் சட்டமே பொருந்தாது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வர்த்தக நிறுவனங்களாகும். தொழிலாளி விருப்பத்தின் பேரில் மட்டுமே சட்டம் அமலாக்கப்படும் என்றும் கூறியுள்ளது வேடிக்கையானது” என்கிறார் ஆறுமுக நயினார்.
மேலும் அவர், “நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பின் தொழிற்சாலை சட்டம் 1948ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தொழிற்சாலைகள் சட்டத்தில் 65(a) என்ற ஒரு புதிய பிரிவை உருவாக்கித்தான் தற்போது சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி பிரிவு 65இல் உள்ள நிபந்தனைகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த சட்டத்திருத்தம் தொழிலாளர்களை அடிமை போல் நடத்துவதற்கு வழி வகுக்கிறது.
புதிய சட்டம் நடைமுறைக்கு வந்தால்… வரைமுறையற்று எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் வேலை வாங்கலாம், கூடுதலாக வாங்கும் வேலை நேரத்திற்கு மிகை ஊதியம் வழங்க வேண்டியதில்லை, இடைவேளை நேரமின்றி எப்படி வேண்டுமானாலும் வேலை வாங்கலாம்.
இவ்வளவு மோசமான ஷரத்துக்கள் ஒன்றிய அரசின் சட்டத்தொகுப்பில் கூட இல்லை. இது மிக மோசமான சட்டத்திருத்தம். தொழிலாளர்களை அடிமையாக்கும் சட்டத்திருத்தம். திமுகவின் வரலாற்றில் மிகப்பெரும் கரும்புள்ளியாக இச்சட்டத்திருத்தம் மாறிவிடும். ஆனால், தொழிலாளி வர்க்கம் போராடி இதை முறியடிக்கும்” என்கிறார் ஆறுமுக நயினார்.
–வேந்தன்
12 மணி நேர வேலை: சாலை மறியலில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது!
ஓபிஎஸ் மாநாடு: அதிமுக கொடி பயன்படுத்த எதிர்ப்பு… போலீசில் புகார்!