12 மணி நேர வேலை: சாலை மறியலில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது!

Published On:

| By Monisha

Road blockade protest in madurai

12 மணி நேர வேலை சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று மதுரையில் இன்று (ஏப்ரல் 22) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளான நேற்று (ஏப்ரல் 21) 12 மணி நேர வேலை சட்டம் கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பிற்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்ட மசோதாவிற்கு திமுகவின் கூட்டணிக் கட்சிகளான கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக, காங்கிரஸ் ஆகியவை எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்திருந்தனர்.

தொடர்ந்து இந்த மசோதா மீதான அவர்களது எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர். அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது தொழிற்சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் 12 மணி நேர வேலை சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 50-க்கும் மேற்பட்டோர் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே காலை 10 மணியில் இருந்து போராட்டம் நடைபெற்றது.

அப்போது, ”8 மணி நேர வேலை எங்களது உரிமை.12 மணி நேர வேலை சட்டத்தை திரும்ப பெறு” என்று கோஷங்களை எழுப்பி கையில் பதாகைகளுடன் சுட்டெரிக்கும் வெளியில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து போக்குவரத்திற்கு இடையூறாக செயல்பட்டதால் அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

இதனால், மதுரை பெரியார் திடல் – கோரிப்பாளையம் செல்லும் சாலையில் சிறிது நேரல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மோனிஷா

ஓபிஎஸ் மாநாடு: அதிமுக கொடி பயன்படுத்த எதிர்ப்பு… போலீசில் புகார்!

ஆல் டைம் ஃபேவரைட்: தோனியை புகழ்ந்த ஹர்பஜன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment