இயற்கை பேரிடரின் போது கடுமையாக பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு நிவாரண நிதி அளிக்காமல் மத்திய அரசு வஞ்சிக்கிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப்ரல் 17) குற்றம் சாட்டியுள்ளார்.
சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “2014-ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்தபோது, பெட்ரோல் விலை ரூ.71-க்கும், டீசல் ரூ.55-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் விலை பேரல் 105 டாலராக இருந்தது. ஆனால், தற்போதைய நிலவரப்படி பெட்ரோல் ரூ.100-க்கும், டீசல் ரூ.92-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 86 டாலராக குறைந்துள்ளது. 2014-ஆம் ஆண்டு கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருந்தபோது பெட்ரோல், டீசல் விலை குறைந்திருந்தது. ஆனால், தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்தும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் வரி போட்டு மக்கள் மீது அதிகமான சுமையை மத்திய அரசு சுமத்தியிருக்கிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
2021 சட்டமன்ற தேர்தலின் போது பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டார்கள். ஆனால், அவர்களும் இதுவரை பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை. அண்டை மாநிலமான கர்நாடகம் மற்றும் புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளார்கள்.
பெட்ரோல், டீசல் விலையை குறைக்காததால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வந்து செல்வதால், எந்த பயனும் இல்லை. அதேபோல, தமிழகத்திற்கு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வந்த மத்திய அமைச்சர்கள் தங்கள் துறை சார்ந்த ஏதேனும் திட்டங்களை செயல்படுத்தியிருந்தால், தமிழகம் வளர்ச்சி பெற்றிருக்கும்.
ஆனால், தமிழகத்திற்கு எந்த திட்டங்களையும் கொண்டு வராமல், வாக்குகளை மட்டும் குறிவைத்து அடிக்கடி தமிழகத்திற்கு வருவது வேதனையளிக்கிறது.
இயற்கை பேரிடரின் போது தமிழகம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. அதற்கு தேவையான நிவாரண நிதியை மத்திய அரசு கொடுக்க மறுக்கிறது. இப்போது மட்டுமல்ல, காங்கிரஸ் ஆட்சியிலும் இதே நிலை தான் நீடித்தது. பாஜக ஆளும் மாநிலங்களுக்கு தாராளமாக நிதி கொடுக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மாற்றான் தாய் பிள்ளைகளை போல வஞ்சிக்கிறார்கள்” என்றார்.
தொடர்ந்து, டிடிவி தினகரன் தலைமையில் அதிமுக இயங்கும் என்று அண்ணாமலை பேசியது குறித்து, ” டிடிவி தினகரன் தான் தனிக்கட்சி ஆரம்பித்து விட்டாரே. பின்னர் எப்படி அதிமுக அவர் கைக்கு போகும்? இதுகூட தெரியாமல் பேசுகிறார் என்றால், அண்ணாமலை எப்படிப்பட்ட அரசியல்வாதியாக இருப்பார் என்று நினைத்து பாருங்கள்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இயற்கைச் சீற்ற அபாயங்களும் எதிர்வரும் தேர்தலும்!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!