தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாகப் பரவும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் திருப்பூர் மற்றும் கோவையில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியானது.
இது வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் தவறான எண்ணத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருந்த நிலையில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில்,
“தமிழக அரசு அதிகாரிகளுடன் பேசி, அங்கு வசிக்கும் பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பீகார் தலைமைச் செயலர் மற்றும் காவல்துறை இயக்குநர் ஜெனரல் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாகத் தமிழ்நாடு காவல்துறை தவறான செய்திகள் மற்றும் வதந்திகளைப் பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதற்கு முன்பு அதன் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும் என்று எச்சரித்திருந்தது.
இந்நிலையில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோக்கள் உண்மைக்குப் புறம்பானவை என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “பெருந்தொழில் மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் பல ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் பெருமளவில் முதலீடு செய்து வந்து அதில் பல மாநிலங்களிலிருந்தும் தொழிலாளர்கள் வந்து அமைதியான சூழ்நிலையில் பணியாற்றி மாநிலத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகின்றார்கள்.
அதேபோல், மேம்பாலக் கட்டுமானம், மெட்ரோ ரயில் உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளிலும் வட மாநில தொழிலாளர்கள் பெருமளவில் ஈடுபட்டு அந்தத் துறைகளின் வளர்ச்சிக்கு தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றார்கள்.
அந்தத் தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அந்தந்த நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.
நிறுவனங்களிலும் தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலச் சட்டங்கள் கடைப்பிடிக்கப்படுவதை துறை மூலமாக உறுதி செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டிற்கு வருபவர்களை நேசக் கரம் கொண்டு வரவேற்பது தான் தமிழ் மக்களின் பண்பாடு மற்றும் நடைமுறை. விருந்தோம்பலுக்குப் பெயர்பெற்ற தமிழ்நாட்டு மக்களும்,
தொழிலாளர் நலன் காக்கும் தமிழ்நாடு அரசும் இந்த உடலுழைப்புத் தொழிலாளர்களின் பங்களிப்பை நன்கு உணர்ந்து இருப்பதால், இணக்கமான, அமைதியான சூழ்நிலையில் இங்கு அனைவரும் வாழ்ந்து வருகிறார்கள்.
இந்தச் சூழ்நிலையில் சில சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு மிகவும் மாறான, தவறான உள்நோக்கத்தோடு,
வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் சில இடங்களில் தாக்கப்படுவதாக விஷமத்தனமான செய்தி சிலரால் பரப்பப்பட்டு வருகிறது.
இதில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்பதைத் தமிழ்நாட்டில் இருக்கும் வடமாநிலத்தவர் உள்ளிட்ட அனைவரும் அறிவார்கள்.
தொழில் அமைதிக்கும், சமூக அமைதிக்கும் எப்போதும் பெயர்பெற்று விளங்கும் தமிழ்நாட்டில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற்றதாகச் செய்தி பரப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் மட்டுமல்ல எல்லா மாநில தொழிலாளர்களும் எவ்வித அச்சமுமின்றி அமைதியாக, சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மோனிஷா
பிறந்தநாள் வாழ்த்து சொன்ன மக்கள்: வாய்ஸ் மெசேஜ் அனுப்பிய முதலமைச்சர்
டார்கெட் நத்தம் விசுவநாதன்: நிலக்கரி இறக்குமதியில் விஜிலென்ஸ் ’பொறி’