பன்னீர் தலைமையில் நாளை மறுநாள்(ஏப்ரல் 24) நடைபெறும் முப்பெரும் மாநாட்டில் அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என்று 500க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் திரண்டு வந்து திருச்சி மாநகர் காவல் ஆணையரிடம் இன்று (ஏப்ரல் 22) புகார் அளித்துள்ளனர்.
அதிமுக தலைமை பதவியைக் கைப்பற்ற எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் இடையே கடந்த சில மாதங்களாக நீயா நானா போட்டி நிலவி வந்தது.
எனினும் மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய நகரம், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களின் பெரும் ஆதரவுடனும் கட்சியை கைப்பற்றினார் எடப்பாடி. மேலும் நீதிமன்றத்திலும் வெற்றிபெற்று, தேர்தல் ஆணையத்தாலும் பொதுச் செயலாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் வரும் 24 ஆம் தேதி அன்று திருச்சி ஜி கார்னரில் அதிமுகவின் முப்பெரும் மாநாட்டை நடத்துகிறார் ஓபிஎஸ்.
இந்த மாநாட்டிற்காக அதிமுக கொடி, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் படங்களையும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இதனையடுத்து ஒபிஎஸ் நடத்தும் மாநாட்டில் அதிமுக கொடி மற்றும் விளம்பரங்களை பயன்படுத்தக்கூடாது என்று இன்று அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் குமார், முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி, வளர்மதி,
மாநில இளைஞர் அணி செயலாளர் ஜெ சீனிவாசன் தலைமையில் சுமார் 500 பேருடன் திரண்டு திருச்சி காவல் ஆணையர் சத்தியப்பிரியாவை சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.

மேலும், ஓபிஎஸ் மாநாட்டில் அதிமுக கொடி ஜெயலலிதா படம் போன்ற விளம்பரங்களை போலீஸ் தடுக்கவில்லை என்றால், அதிமுக நிர்வாகிகள் திரண்டு வந்து அகற்றுவார்கள் என கூறுகின்றனர் அதிமுக முக்கிய நிர்வாகிகள்.
இதனால் ஓபிஎஸ் மாநாட்டில் இரு தரப்புக்கும் இடையே கலவரம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.
அதேவேளையில் முப்பெரும் மாநாட்டுக்கு பாதுகாப்பு கேட்டு காவல் துறையிடம் மனு கொடுக்க இருக்கின்றனர் ஒபிஎஸ் ஆதரவாளர்கள்.
கிறிஸ்டோபர் ஜெமா