ஸ்டெர்லைட் நிறுவனம் 22 ஆண்டுகளாக கடுமையான சுற்றுச்சூழல் மாசை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு காரணமாக ஸ்டெர்லைட் ஆலையை தமிழ்நாட்டில் அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு இன்று (ஆகஸ்ட் 21) கூறியுள்ளது.
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து டெல்லி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மேல் முறையீட்டு வழக்கை தாக்கல் செய்திருந்தது.
இந்நிலையில் தமிழக அரசு தரப்பில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் 25 பக்கங்கள் கொண்ட அறிக்கையை இன்று (ஆகஸ்ட் 21) சமர்ப்பித்துள்ளது. அதில் வேதாந்தா நிறுவனம் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக கடுமையான சுற்றுச்சூழல் மாசை ஏற்படுத்தியுள்ளது. அந்நிறுவனம் அடிப்படையான விதிகளை கூட பின்பற்றியது இல்லை.
இது சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விவகாரம் என்பதால் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் செயல்பட அனுமதிக்க முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் என தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.
முன்னதாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கொரோனா காலகட்டத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை மேற்கொள்வதற்காக தமிழ்நாடு அரசு தற்காலிகமாக அனுமதி வழங்கியதும் அதன் பிறகு ஆலை மீண்டும் மூடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஜெயிலர்: அமெரிக்காவில் வசூல் சாதனை!
’உதயநிதி ஸ்டாலினை அமைச்சரவையில் இருந்து நீக்குங்கள்’: நாராயணன் திருப்பதி